அதிமுகவைத் தாக்கும் பா.ஜ.க., காங்கிரசை கைகழுவும் திமுக
சென்னை:
பிரதமர் வாஜ்பாயின் தூதர் விஜய்கோயல் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்த பின்னர் பா.ஜ.க, திமுக ஆகிய இரு கட்சிகளின்பேச்சிலும் புதிய மாற்றம் தெரிய ஆரம்பித்துள்ளது.
தொடர்ந்து பா.ஜ.கவால் அவமதிக்கப்பட்டு வந்த திமுக திடீரென நேரடி மோதலில் இறங்கியது. மத்திய அரசின்தனியார்மயமாக்கலை எதிர்த்து கருணாநிதி கொடுத்த குரல் டெல்லியில் கிடுகிடுத்தது.
திமுக, மதிமுக, பா.ம.கவுக்கு கூட்டாக 20 எம்.பிக்கள் உள்ளனர். அதிமுகவிடம் இத்தனை எம்.பிக்கள் இல்லை. இதுவரை திமுகமட்டும் தான் வெளியேறும் அதை அதிமுகவை வைத்து சரி செய்துவிடலாம் என்று பா.ஜ.க. கணக்குப் போட்டிருந்தது. ஆனால்,சமீபகாலமாக வைகோவுடன் நெருக்கமாகிவிட்ட கருணாநிதி கூடவே மதிமுகவையும் பா.ம.கவையும் இழுத்துக் கொண்டுபோய்விட்டால் சிக்கலாகிவிடும் என்பதை பா.ஜ.க. உணர ஆரம்பித்துள்ளது.
திருநாவுக்கரசருடன் வந்தார்:
இதையடுத்து கருணாநிதியை சமாதானப்படுத்த பிரதமர் அலுவலக சிறப்பு அமைச்சரான விஜய்கோயலை வாஜ்பாய் நேற்றுஅனுப்பி வைத்தார். அவரும் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசரும் கருணாநிதியை அவரது கோபாலபுரம் வீட்டில் சந்தித்துப்பேசினர்.
அதிமுகவுக்கு ஆதரவான பா.ஜ.க. மாநிலத் தலைவர்கள் யாரும் உடன் வரவில்லை. அவர்களை ஒதுக்கிவிட்டே விஜய்கோயலைவாஜ்பாய் நேரடியாக கருணாநிதியிடம் அனுப்பினார். அதே நேரத்தில் கருணாநிதிக்கு எப்போதும் நெருக்கமானதிருநாவுக்கரசரை மட்டும் கோயல் உடன் அழைத்துச் சென்றார்.
சுமார் ஒரு மணி நேரம் இந்தச் சந்திப்பு நடந்தது.
அதிமுகவுடன் நெருங்க மாட்டோம்:
சந்திப்புக்குப் பின் விஜய்கோயல் நிருபர்களிடம் பேசுகையில்,
கருணாநிதியை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன். மாறனின் உடல் நிலை குறித்து நேரில் விசாரித்து வருமாறு பிரதமர்வாஜ்பாய் உத்தரவிட்டார். அதற்காகவே வந்தேன். மாறனை மாற்றிவிட்டு வேறு ஒருவரை அமைச்சராக்குவது என்ற பேச்சுக்கேஇடமில்லை.
திமுகவுக்கும் எங்களுக்கும் இடையே உறவு நன்றாகவே உள்ளது. திமுக மீது நாங்கள் நிறைய மரியாதை வைத்திருக்கிறோம்.எங்கள் கூட்டணியிலேயே அதிக நம்பிக்கைக்கு உரிய கட்சியாகத் தான் திமுகவை நினைக்கிறோம். மாநில அளவில் சிறு சிறுபிரச்சனைகள் உள்ளன. அவை இனியும் பெரிதாகாமல் சரி செய்யப்படும்.
தனியார்மயமாக்கலை ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு விதத்தில் பார்க்கின்றன. திமுக வேறு மாதிரி பார்க்கிறது. ஆனால்,இதனால் கூட்டணியை விட்டு திமுக வெளியேறாது.
சாத்தான்குளம் இடைத் தேர்தல் குறித்து நான் கருணாநிதியிடம் ஏதும் பேசவில்லை. தமிழகத்தில் திமுகவைத் தவிர வேறு எந்தக்கட்சியிடமும் நாங்கள் நெருங்க மாட்டோம் என்றார் விஜய்கோயல்.
கருணாநிதி தொடர்ந்து பிடிவாதம்:
ஆனால், பின்னர் நிருபர்களைச் சந்தித்த கருணாநிதியிடம் தீவிர மாற்றம் ஏதும் தெரியவில்லை, கருணாநிதி கூறுகையில்,
என்னைச் சந்தித்த மத்திய அமைச்சர் கோயலிடம் பா.ஜ.க. குறித்து புகார் ஏதும் கூறவில்லை. அதே நேரத்தில் தனியார்மயமாக்கல்குறித்து நான் சொன்ன கருத்தை மாற்றிக் கொள்ள மாட்டேன் என்பதை தெளிவாக்கிவிட்டோம். லாபத்தில் இயங்கும் அரசுநிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியமில்லை.
சாத்தான்குளம் இடைத் தேர்தல் குறித்து நானும் அவரிடம் பேசவில்லை. அவரும் என்னிடம் பேசவில்லை. என்ன செய்யப்போகிறோம் என்பதை நாங்களும் சொல்லவில்லை.
அதே போல மாறனின் இலாகா குறித்தோ, பதவியை வேறு யாருக்கும் தருவது குறித்தோ நான் பேசவில்லை. பேசவும் மாட்டேன்என்றார் கருணாநிதி.
காங்கிரசுக்கு ஆதரவில்லை:
ஆனால், நேற்று வரை கோபத்தில் இருந்த திமுக இன்று பிடிவாதத்தைத் தளர்த்திக் கொண்டு தனது நிலையில் இருந்து இறங்கிவந்துள்ளது.
சாத்தான்குளம் இடைத் தேர்தல் குறித்து இதுவரை அமைதி காத்து வந்த கருணாநிதி, இத் தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு இல்லைஎன்று இன்று அறிவித்துள்ளார். இதன்மூலம் காங்கிரஸ்- திமுக கூட்டணி பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அதே போல அதிமுகவை சமயம் கிடைக்கும்போதெல்லாம் ஆதரித்து வந்த தமிழக பா.ஜ.க. இன்று திடீரென முதல்வர்ஜெயலலிதாவை விமர்சிக்க ஆரம்பித்துள்ளது.
இன்று கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சாத்தான்குளம் இடைத் தேர்தலில் திமுக ஆதரவு தந்தால் அதை ஏற்போம் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் சோ.பாலகிருஷ்ணன்கூறியுள்ளார். திமுக என்பது அரசியல்- சமூகப் புரட்சி ஆலமரம். இந்த ஆலமரம் வழியில் செல்வபர்களிடம் போய் என் நிழலில்தங்கிவிட்டுப் போங்களேன் என்று கெஞ்சாது என அந்த அறிக்கையில் கூறியுள்ளார் கருணாநிதி.
இதன்மூலம் இதுவரை காங்கிரஸ் பக்கம் சாய்ந்து வந்த திமுகவின் நிலையில் மாற்றம் தெரிய ஆரம்பித்துள்ளது.
அதிமுகவைத் தாக்கும் பா.ஜ.க!!:
காங்கிரசுக்கு திமுக நோஸ்-கட் கொடுத்துள்ள நிலையில் அதிமுகவைத் தாக்கியுள்ளது பா.ஜ.க.
இன்று திருச்சியில் நிருபர்களிடம் பேசிய பா.ஜ.க. தேசியச் செயலாளர் இல.கணேசன்,
விவசாயிகளை தட்டு ஏந்த வைத்து அவர்களை அதிமுக அரசு கொச்சைப்படுத்தியுள்ளது. விவசாயிகள் வானம் பார்த்துமட்டுமல்ல, மானம் பார்த்தும் வாழ்பவர்கள். ஏதோ இந்த ஆண்டு விளைச்சல் இல்லாமல் போய்விட்டது. அதற்காக இலவசமாய்உணவு தருகிறோம், தட்டு ஏந்தி வந்து நில்லுங்கள் என்று சொல்வது அவர்களது மானத்தோடு விளையாடுவதற்குச் சமம்.
திமுகவுக்கும் பா.ஜ.கவுக்கும் இடையே உள்ள சிறு சிறு கருத்து வேறுபாடுகள் களைய முடியாத அளவுக்குப் பெரிதானவை அல்லஎன்றார்.
பனிமூட்டம்:
முன்னதாக வாஜ்பாயின் தூதரான அமைச்சர் விஜய்கோயல் டெல்லியில் இருந்து சென்னைக்குப் புறப்பட இருந்த விமானம்பனிமூட்டம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பனி மூட்டம் விலகிய பின்னர் 4 மணி நேரம் தாமதமாகவே சென்னை வந்தது.
கருணாநிதியை அவர் சந்தித்த பின்னர் திமுக- பா.ஜ.க. இடையிலும் பனி மூட்டம் விலக ஆரம்பித்திருப்பதாகவே தெரிகிறது.
-->












Click it and Unblock the Notifications