ஸ்ரீரங்கத்தில் இந்து முறைப்படி திருமணம் செய்த பிரான்ஸ் காதல் ஜோடி
ஸ்ரீரங்கம்:
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு காதல் ஜோடிக்கு ஸ்ரீரங்கத்தில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. இந்துமுறைப்படி மணமக்கள் மாலை மாற்றிக் கொள்ள, மணமகளுக்கு மணமகன் தாலி கட்டினார்.
பிரான்ஸில் உள்ள டிராஸ்பர்க் என்ற நகரைச் சேர்ந்த 38 வயதான எரிக் லீப்ரு என்பவரும் 32 வயதான ஸோபிபோஜியா என்ற பெண்ணும் கிரேவ் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
அவர்கள் இதற்கு முன் மூன்று முறை இந்தியா வந்து சுற்றுப் பயணம் செய்துள்ளனர். பல்வேறு ஊர்களையும் சுற்றிப்பார்த்த அவர்கள் நம் நாட்டின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தைப் பார்த்து மெய்மறந்து போனார்கள்.
இந்தியர்களுக்கு இடையே உள்ள உறவு முறையும் அந்த ஜோடியை மிகவும் கவர்ந்துவிட்டது. குறிப்பாக இந்துதிருமண முறை அவர்களை மிகவும் ஈர்த்து விட்டது.
இதையடுத்து தங்கள் திருமணம் இந்து முறைப்படிதான் நடக்க வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து பிரான்ஸில் இருந்து பெற்றோர்கள், உறவினர்கள் என 17 பேரை லீப்ருவும் போஜியாவும்திருச்சிக்கு அழைத்து வந்தனர். ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா திருமண மண்டபத்தில் லீப்ரு-போஜியாஜோடியின் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
திருமணத்தன்று போஜியா இந்தியப் பெண்களுக்கே உரித்தான பட்டுச் சேலை மற்றும் நகைகளை அணிந்துமணக்கோலத்தில் மணவறைக்கு வந்தார். அதேபோல் லீப்ருவும் பட்டு ஜிப்பா, பட்டு வேஷ்டி அணிந்து வந்தார்.
பின்னர் இருவரும் மணவறையில் அமர்ந்து மாலை மாற்றிக் கொண்டனர். இதைத் தொடர்ந்து புரோகிதர்கள் வேதமந்திரங்கள் ஓத, சுபமுகூர்த்த நேரத்தில் போஜியாவின் கழுத்தில் லீப்ரு தாலி கட்டினார்.
அப்போது கெட்டி மேளம் முழங்கியது. கூடியிருந்தவர்கள் அனைவரும் மணமக்களுக்கு அட்சதை தூவி வாழ்த்துதெரிவித்தனர்.
தாலி கட்டும் சம்பிரதாயம் முடிந்ததும், மணமக்கள் இருவரும் அம்மி மிதித்து, அருந்ததி பார்க்கும் வைபவமும்நடைபெற்றது. அப்போது போஜியாவின் கால் விரலில் மெட்டி அணிவித்தார் லீப்ரு.
பின்னர் லீப்ரு-போஜியா ஜோடி தங்களுடைய பெற்றோரின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றது.
இந்த வெளிநாட்டு ஜோடியின் திருமண நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த பொது மக்களும் கலந்து கொண்டுஅவர்களை வாழ்த்தினர்.
-->












Click it and Unblock the Notifications