எம்.எல்.ஏக்களின் விருந்தை ரத்து செய்தார் ஜெயலலிதா
சென்னை:
எம்.எல்.ஏக்களுக்கு கொடுக்கப்பட இருந்த விருந்தை முதல்வர் ஜெயலலிதா கடைசி நேரத்தில் ரத்து செய்தார்.
வழக்கமாக பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி கட்டத்தில் அனைத்துக் கட்சி எம்.எல்.ஏக்களுக்கும் முதல்வர் விருந்து கொடுப்பது வழக்கம்.நேற்று இரவு அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும், சென்னை நுங்கம்பாக்கம் தாஜ்கொரமண்டல் ஹோட்டலில் விருந்து கொடுப்பதாகஜெயலலிதா அறிவித்திருந்தார்.
இதில் அனைத்துக் கட்சி எம்.எல்.ஏக்களும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந் நிலையில் தற்போது மாநிலமே வறட்சியின் பிடியில் சிக்கி சிரமப்பட்டு வரும் நிலையில் இப்படிப்பட்ட விருந்து தேவைதானா எனகம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. ஹேமச்சந்திரன் கேள்வி எழுப்பினார்.
மேலும் மாநில அரசு பெரும் நிதி நெருக்கடியில் இருப்பதாகக் கூறி அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் கூட சரியாக வழங்கப்படவில்லை.வாயைத் திறந்தாலே முதல்வரும்,அமைச்சர்களும் நிதி நெருக்டி குறித்துத் தான் பேசுகிறார்கள் என்று அவர் சுட்டிக் காட்டினார்.
இது தொடர்பாக சட்டமன்றத்திலேயே அவர் கேள்வியும் எழுப்பினார்.
அவருக்கு பதிலளித்த நிதியமைச்சர் பொன்னையன், எம்.எல்.ஏ.க்களிடையே நட்புறவை வளர்ப்பதற்காகவே இந்த விருந்துவழங்கப்படுகிறது என்றார்.
அப்போது பொன்னையனை இடைமறித்த முதல்வர் ஜெயலலிதா, கம்யூனிஸ்ட் உறுப்பினர் ஹேமச்சந்திரன் இந்த விருந்து நிகழ்ச்சியைகொச்சைப்படுத்தி விட்டார். ஆடம்பரத்திற்காக இது நடத்தப்படவில்லை. ஆண்டுதோறும் ஒருறை எம்.எல்.ஏக்களுக்கு விருந்து கொடுத்துகெளரவப்படுத்தும் செயல் பல ஆண்டுகளாகவே நடந்து வருகிறது. இது புதிதல்ல.
கடந்த ஆண்டு வறட்சி நிலை காரணமாக விருந்து கொடுக்கவில்லை. எனவே இந்த ஆண்டு கொடுக்கிறேன். கட்டாயம் அனைவரும்கலந்துகொள்ள வேண்டும் என்று ஜெயலலிதா பதில் கூறினார்.
ஆனால், திடீரென நேற்று இரவு அமைச்சர் பொன்னையன் மூலமாக ஜெயலலிதா திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில்,உறுப்பினர் ஹேமச்சந்திரன் காலையில் விருந்து தேவைதானா என்று கேட்டிருந்தார். இந்தச் சூழ்நிலையில், முதல்வர் ஏற்பாடு செய்திருந்தவிருந்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.


