"நக்கீரன்" கோபால் தொடர்ந்த வழக்கு: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி:
தனக்கு எதிரான பொடா வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று "நக்கீரன்"பத்திரிக்கை ஆசிரியர் கோபால் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
கொலை, ஆயுதங்கள் கடத்தல், தனித் தமிழ்நாடு உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பாக கடந்தமாதம் 11ம் தேதி கோபால் கைது செய்யப்பட்டார். பின்னர் 16ம் தேதி அவர் மீதான வழக்குகள் பொடாவழக்குகளாக மாற்றப்பட்டன.
தன் மீதான வழக்குகள் பொடாவுக்கு மாற்றப்பட்டுள்ளது சட்ட விரோதமானது என்றும், இது தொடர்பாக சி.பி.ஐ.விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கோபால் மனு தாக்கல் செய்தார்.
இம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ராஜேந்திர பாபு மற்றும் நீதிபதி ஜி.பி. மாத்தூர் ஆகியோர் அடங்கியபெஞ்ச், இது தொடர்பாக தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
அடுத்த ஒரு வாரத்திற்குள் இது தொடர்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள்உத்தரவிட்டனர்.
மேலும் இவ்வழக்கை விசாரிக்குமாறு விடுமுறைக் கால நீதிமன்றத்தை கோபால் அணுகலாம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.


