• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தற்கொலையைத் தூண்டியது சசிகலா?

By Staff
|

சென்னை:

ஜி.வியின் தற்கொலையைத் தூண்டியது முதல்வரின் தோழி சசிகலா தான் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த மர்மத் தற்கொலை குறித்து சி.பி.ஐ.விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மனித உரிமை ஆணையத்திடமும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் விஜயக்குமாரிடமும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலக சட்ட ஆலோசனைக் குழு தலைவர் சிவா இந்தப் புகாரை கொடுத்துள்ளார். இவர் ஜி.விக்கு மிக நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது:

தயாரிப்பாளர் ஜி.வி.யின் தற்கொலைக்கு மதுரையைச் சேர்ந்த அன்புச் செழியன் என்பவர் காரணமாக இருப்பதாக பலரும் பேசி வருகிறார்கள்.

ஆனால், அந்த அன்புச் செழியனிடம் இதுவரை போலீஸார் விசாரணை நடத்தியதாகத் தெரியவில்லை. இவர் தமிழகத்தில் ஆட்சியில் உள்ளவர்களுக்கு நெருக்கமானவர்களிடம் அதிகாரம் படைத்தவர். இதனால் தான் இவரது கந்துவட்டித் தொழிலில் சட்டத்தை மீறியபோதெல்லாம் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.

கே.ஆர்.ஜி. என்ற தயாரிப்பாளர் கடனைத் திருப்பித் தருவதில் கால தாமதம் ஆனதால் அவரது சென்னை அண்ணாநகர் வீட்டை அன்புச் செழியன் பறித்துக் கொண்டார்.

அதே போல நடிகை ரம்பாவும் இவரிடம் கடன் வாங்கி சிக்கினார். அப்போது குண்டர்களை வைத்து ரம்பாவின் வீட்டை அபகறித்தார்.

தேவயானி இப்போது அநியாய வட்டியை சத்தமில்லாமல் கட்டிக் கொண்டிருக்கிறார்.

நடிகர் ராமராஜனின் மதுரை தியேட்டர்களை அபகறிக்கவும் அன்புச்செழியன் முயன்றார்.

ஜி.வி. தனது கொடைக்கானல் பங்களாவில் வைத்து அன்புச்செழியனிடம் ரூ. 2 கோடி வாங்கினார். இதற்கு வட்டியுடன் சேர்த்து ரூ. 3 கோடியே 2 லட்ச ரூபாயை ஜி.வி. திருப்பித் தந்துவிட்டார். ஆனாலும் மேலும் ரூ. 25 லட்சம் வட்டி கேட்டு அவரை அன்புச் செழியன் மிரட்டினார்.

இந்தப் பணத்தைத் தராவிட்டால் உனது மகனின் திருமண வரவேற்பில் வந்து நின்று அனைவர் முன்னிலையில் கேவலப்படுத்துவேன் என்று ஜி.வியை அன்புச் செழியன் மிரட்டினார். இதனால் தனது மகனின் திருமண வரவேற்பில் கூட கலந்து கொள்ளாமல் தவிர்க்க வேண்டிய நிலை வந்தது.

தற்கொலைக்கு 2 நாட்கள் முன் கூட கொடைக்கானல் பங்களாவில் ஜி.வி. தங்கினார். அப்போது கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு பங்களாவை விலை பேசி விற்று கடன்களை அடைக்க ஜி.வி. திட்டமிட்டார். இதற்காக எல்லா பத்திரங்களையும் தயார் செய்தார்.

ஆனால், அந்த பங்களாவை சசிகலா வாங்க நினைத்தார். இது தொடர்பாக சசியின் அக்காள் மகனும் அதிமுக எம்.பியுமான தினகரன், ஜி.வியிடம் வந்து பங்களாவை அடி மாட்டு விலைக்குக் கேட்டார். ஆனால், கடன்களை அடைக்கத் தான் பங்களாவையே விற்கிறேன். குறைந்த விலைக்குத் தர முடியாது என ஜி.வி. மறுத்தார்.

இதையடுத்து தங்களது பினாமியான அன்புச்செழியனை விட்டு சசிகலா மிரட்டினார். கடனைக் கேட்டு தொல்லை தரச் செய்தார். ரூ. 25 லட்சத்தை உடனே கொடு இல்லாவிட்டால் பங்களாவை உடனே என் பெயருக்கு எழுதிக் கொடு என்று ஜி.வியை அன்புச்செழியன் மிட்டினார்.

சசிகலாவின் பின் பலத்துடன் தன்னுடன் மோதிய அன்புச்செழியனை சமாளிக்க முடியாமல் தவித்த ஜி.வி. தற்கொலை செய்து கொண்டார்.

அன்புச் செழியன் யார், பணத்தை எப்படி கொடுக்கிறார், எப்படி வசூலிக்கிறார் என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரிக்க வேண்டும். அப்போதுதான் உண்மைகள் வெளிவரும்.

சி.பி.ஐ. விசாரணை நடத்தினால் தான் ஜிவி தற்கொலையின் பின்னணி தெரிய வரும் என்று கூறியுள்ளார் சிவா.

மேலும், சிபிஐ விசாரணை கோரி 25ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் எதிரே உண்ணாவிரதம் இருப்பதற்கும், கமிஷனரிடம் அனுமதி கோரியுள்ளார் சிவா.முதல்வர் ஜெயலலிதாவின் மாஜி வளர்ப்பு மகன் சுதாகரன் சுருட்டி வைத்துள்ள கோடிக்கணக்கான பணம் அன்புச்செழியன் மூலமாக சினிமாவில் இறக்கிவிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

அதே நேரத்தில் சொத்துக் குவிப்பு வழக்குகள், இன்கம்டாக்ஸ் ஆகியவற்றில் இருந்து தப்ப தமிழகத்தின் பல பணக்காரர்கள் பெயரில் சசிகலா குடும்பத்தினரே கோடிக்கணக்கில் சொத்துக்களை வாங்கிப் போட்டுள்ள விவரங்களும் வெளி வர ஆரம்பித்துள்ளன. இவ்வாறு சசிகலாவுக்காக ஜி.வியே கூட பினாமியாக இருந்ததும் தெரியவந்துள்ளது.

தஞ்சாவூரில் சிவாஜியின் குடும்பத்தினருக்குச் சொந்தமான கமலா, சாந்தி தியேட்டர்களை ஜி.வி. பெயரில் உண்மையில் வாங்கியவர்கள் சசிகலாவின் ஆட்கள் தான் என்றும் கூறப்படுகிறது. பணக் கஷ்டத்தால் இந்தச் சொத்துக்களையே ஜி.வி. அடகு வைத்ததாகவும் தெரிகிறது. இதை பின்னர் அவர் மீட்டுவிட்டாலும் கூட கொடைக்கானல் பங்களா மீது சசிகலா தரப்பினருக்கு எழுந்த ஆர்வமே அவரை அன்புச்செழியன் மூலம் மிரட்ட வைத்துள்ளது.

சசிகலாவின் பினாமியாகக் கருதப்படும் அன்புச்செழியனை தமிழக போலீசார் விசாரிக்க மாட்டார்கள், அவர் ஜி.வியின் தற்கொலை விவகாரத்தில் இருந்து தப்பிவிடுவார் என்று திரையுலகினர் சந்தேகப்படுகின்றனர். இந் நிலையில் தான் திரையுலகினர் சார்பில் சி.பி.ஐ. விசாரணை கோரப்பட்டுள்ளது.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X