திமுக போனால் அதிமுக வரும்: கூட்டணி குறித்து பா.ஜ.க.
சென்னை:
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து திமுக வெளியேறினால், வேறொரு கட்சி உள்ளே வரும் என்று பா.ஜ.க.பொதுச் செயலாளர் இல.கணேசன் கூறியுள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை விடுதலை செய்யப்படாவிட்டால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்இருந்து யார் வெளியே வருவார்களோ தெரியாது என்று திமுக தலைவர் கூறியுள்ளதற்கு, இல. கணேசன் இவ்வாறுபதிலடி தந்துள்ளார்.
கூட்டணியில் இருந்து திமுகவும் மதிமுகவும் வெளியேறும் என்பதைத் தான் கருணாநிதி இவ்வாறுகுறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்து இல. கணேசன் கூறியதாவது:
மதிமுக தொண்டர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்ட கருணாநிதி, அவர்களுக்கு ஊக்கும் நம்பிக்கையும் தரும்வகையில் பேசியுள்ளார்.
வைகோ வெளியே வராவிட்டால் யாரெல்லாம் கூட்டணியை விட்டு வெளியே வருவார்களோ தெரியாது என்றுபேசியிருக்கிறார். இதற்கு அவர் தான் விளக்கம் தர வேண்டும். கூட்டணியை விட்டு திமுக வெளியேறும் என்றரீதியில் அவர் பேசியதாக செய்திகள் வருகின்றன.
தொலைக்காட்சிகளில் மெகா தொடர்களில் ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு எதிர்பார்ப்போடு நிறுத்தபடுவதைப்போல இருக்கிறது அவரது பேச்சு.
அவர் சொல்வது உண்மையானால் நான் இயற்கையின் நியதியைக் குறிப்பிட விரும்புகிறேன். இயற்கையின்நியதிப்படி வெற்றிடம் என்ற ஒன்றே இருக்க முடியாது. வெற்றிடம் ஏற்படும்போது அதை வேறொன்று வந்துநிரப்பிவிடும்.
அதே தான் இங்கேயும் நடக்கும். திமுக வெளியேறினால் அதற்கு தகுந்த ஒன்று கூட்டணிக்குள் வரும் என்றார்.
இதன்மூலம் திமுக வெளியேறினால் அதிமுகவை கூட்டணியில் சேர்ப்போம் என்பதை சொல்லாமல்சொல்லியிருக்கிறார் இ.கணேசன்.


