அதிமுக நாளிதழ் அலுவலகம் இடமாற்றம்: டான்சி தீர்ப்பு நெருங்குகிறதா?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

டான்சி நிலத்தில் இதுவரை செயல்பட்டு வந்த அதிமுகவின் நமது எம்.ஜி.ஆர். பத்திரிக்கை அலுவலகம் திடீரென இடம் மாற்றப்பட்டுள்ளது. இதனால் டான்சி தீர்ப்பு நெருங்கி வருவதாக தகவல்கள் பரவியுள்ளன.

சென்னை கிண்டியில் உள்ள சிறுதொழில் வளர்ச்சிக் கழகத்தின் வளாகத்தில், டான்சி நிறுவனத்துக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலமும் உள்ளது. டான்சி நஷ்டத்தில் இயங்கி வந்ததால் இந்த நிலத்தை விற்க முடிவு செய்யப்பட்டது.

1986ம் ஆண்டிலேயே இந்த நிலத்தை விற்க அரசு திட்டமிட்டது. ஆனால், உரிய விலை கிடைக்காததால் விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டது.

இந் நிலையில் 1991ம் ஆண்டில் அதிமுக ஆட்சிக்கு வந்தது. இந்த நிலத்தை விற்க டெண்டர் விடப்பட்டது. அப்போது முதல்வர் ஜெயலலிதாவும், உயிர்த் தோழி சசிகலாவும் பங்குதாரர்களாக் உள்ள சசி எண்டர்பிரைசஸ் நிறுவனம் இந்த நிலத்தை வாங்கியது.

அடிமாட்டு விலைக்கு இந்த நிலம் சசி எண்டர்பிரைசருக்கு விற்கப்பட்டது. இதனால் அரசுக்கு ரூ. 3.5 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக திமுக வழக்கறிஞர் பாரதி வழக்குத் தொடர்ந்தார். இதைத் தொடர்ந்து 1997ம் ஆண்டில் இந்த நிலத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

பின்னர் உச்ச நீதிமன்றத்தில் திமுக மேல் முறையீடு செய்ய, டான்சி நிலத்தைத் திருப்பித் தந்துவிடுவதாக ஜெயலலிதாவும் சசிகலாவும் தெரிவித்தனர். நிலத்தைத் திருப்பித் தருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா மனு தாக்கல் செய்தார்.

இதை விசாரித்த நீதிபதி சிங்கார வேலு, நிலத்தை ஜெ-சசி தரப்பினர் நன்கொடையாகத் திருப்பித் தரலாம், அதை டான்சி நிறுவனம் ஏற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்தார். இதையடுத்துக் கூடிய டான்சி நிர்வாகக் கமிட்டி நிலத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளவாத தீர்மானம் போட்டது.

அதன் பிறகு ஏதும் நடக்கவில்லை. நிலமும் டான்சி நிறுவனத்துக்கு மாற்றிவிடப் பட்டதாகத் தெரியவில்லை.

இந் நிலையில் நிலத்தைத் திரும்பத் தந்தாலும் ஜெயலலிதா செய்த தவறு தவறுதான். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதாடப்பட்டது. அந்த வழக்கில் விசாரணையும் முடிந்துவிட்டது. கடந்த 6 மாதமாக எந்த நேரத்திலும் தீர்ப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

ஜெயலலிதாவின் தலையில் கத்தியாக இந்த வழக்கின் தீர்ப்பு தொங்கிக் கொண்டுள்ளது.

1991ம் ஆண்டில் இந்த நிலத்தை ஜெ.-சசிகலா வாங்கியதையடுத்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது எம்.ஜி.ஆர். அலுவலகம் (பிரஸ் பிரிவு) இங்கு தான் செயல்பட்டு வந்தது. மேலும் சசிக்குச் சொந்தமான மெட்டல் கிங் என்ற இரும்பு கிரில் கேட்டுகள் தயாரிக்கும் நிறுவனமும் இயங்கி வந்தன.

1997ம் ஆண்டில் நிலம் சீல் வைக்கப்பட்டபோது நமது எம்.ஜி.ஆர். அலுவலகமும் மூடப்பட்டது. உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதையடுத்து மீண்டும் இங்கு அலுவலகம் செயல்பட ஆரம்பித்தது.

இந் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நமது எம்.ஜி.ஆர். அலுவலகத்தின் பிரஸ் பிரிவும், சசியின் மெட்டல் கிங் நிறுவனமும் இந்த நிலத்திலிருந்து காலி செய்யப்பட்டுள்ளன.

ஈக்காட்டுத் தாங்கலில் உள்ள ஒரு பெரிய இடத்திற்கு அவை மாற்றப்பட்டுள்ளன. இதனால் நீதிமன்றத்தில் தெரிவித்ததைப் போல நிலத்தை ஜெயலலிதாவும் சசிகலாவும் டான்சியிடம் திருப்பித் தந்து பத்திரப் பதிவையும் முடித்திருக்கலாம் என்று தெரிகிறது.

உச்ச நீதிமன்ற நீதிபதி ராஜேந்திர பிரசாத், வெங்கட்ராம ரெட்டி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் டான்சி விவகாரத்தில் தீர்ப்பை எந்த நேரமும் அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், இந்த நிலத்திலிருந்து அதிமுக பத்திரிக்கை அலுவலகமும் சசிகலாவின் நிறுவனமும் இடம் பெயர்ந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+