நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வெல்வேன்: வாஜ்பாய்
டெல்லி:
மத்திய அரசுக்கு எதிராக எதிர்க் கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் இன்று விவாதத்துக்குஎடுத்துக் கொள்ளப்பட்டது. நாளை இதன் மீது வாக்கெடுப்பு நடக்கிறது.
இன்று காலை மக்களவை கூடியதும் எதிர்க் கட்சி எம்.பிக்களின் பலத்த கைத்தட்டலுக்கு இடையே இந்தத்தீர்மானத்தை சபாநாயகர் மனோகர் ஜோஷியிடம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வழங்கினார்.
இந்தத் தீர்மானத்தை சுமார் 100 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிப்போம் என பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார்.தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பிக்கள் சுமார் 300 பேர் இடையே நாடாளுமன்ற மத்திய ஹாலில் அவர் இன்றுகாலை உரையாற்றினார்.
அப்போது பேசிய வாஜ்பாய், இந்த தீர்மானம் 100 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்படும். இத்தனைதாமதமாக காங்கிரசும் இடதுசாரிகளும் ஏன் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தார்கள் என்றுதெரியவில்லை. இது நமக்கு ஒரு சவால். இதை முறியடித்துக் காட்டுவோம் என்றார்.
இந்தத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் துணைப் பிரதமர் அத்வானி, அமைச்சர்கள் பெர்னாண்டஸ், சுஷ்மாசுவராஜ், அருண் ஜேட்லி, ஷானவாஸ் ஹூசேன், அருண் ஷோரி, பா.ஜ.க. தலைமைக் கொறடா மல்ஹோத்ராஆகியோர் அரசுத் தரப்பில் பேசுவர்.
காங்கிரஸ் தரப்பில் சிவராஜ் பாட்டீல், பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி, மணிசங்கர் ஐயர், சிபிம் தலைவர் சோம்நாத்சாட்டர்ஜி ஆகியோர் பேசுவர். இறுதியில் சோனியா காந்தியும் பேசுவார்.
இதையடுத்து பிரதமர் வாஜ்பாய் பதிலளித்துப் பேசிய பின்னர் தீர்மானம் ஓட்டெடுப்புக்கு விடப்படும்.
இந்த விவாதத்தை நேரில் காண சோனியாவின் மகள் பிரியங்காவும் இன்று நாடாளுமன்றத்துக்கு வந்தார்.பார்வையாளர்கள் மாடத்தில் தனது கணவர் வதேராவுடன் அமர்ந்து அவை நடவடிக்கைகளை அவர்பார்வையிட்டு வருகிறார்.
இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் மத்திய அரசுகளின் மீது இதுவரை 27 முறை நம்பிக்கை இல்லாத் தீர்மானங்கள்கொண்டு வரப்பட்டுள்ளன. அதில் அதிக பட்சமாக இந்திரா காந்தி அரசுக்கு எதிராகத் தான் 14 நம்பிக்கை இல்லாத்தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.
27 முறை கொண்டு வரப்பட்டாலும் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வென்றது என்னவோ ஒரே ஒருமுறை தான்.பிரதமர் மொரார்ஜி தேசாய் அரசுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது அதை முறியடிக்க மத்தியஅரசால் முடியவில்லை. இதனால் ஆட்சி கவிழ்ந்தது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி சந்திக்கும் முதல் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் இது தான்.
இப்போது காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், சமாஜ்வாடி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட பிற கட்சிகள் இந்தநம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்துள்ளன. இவர்களுக்கு 223 எம்.பிக்களின் ஆதரவு இருப்பதாகக்கருதப்படுகிறது.
வாஜ்பாய் அரசுக்கு சுமார் 300 எம்.பிக்கள் ஆதரவு உள்ளதால் தீர்மானம் தோற்பது என்னவோ உறுதி தான்.ஆனாலும், நாடாளுமன்றத்தில் மிகக் காரசாரமான விவாதம் காத்திருக்கிறது.
இந்தத் தீர்மானம் விவாதத்துக்கு வருவதால் அனைத்துக் கட்சிகளின் எம்.பிக்களும் டெல்லியில் குவிந்துவிட்டனர்.


Click it and Unblock the Notifications
