காகத்துக்கு கூட வீடு இருக்கு சார்! கிராமத்து மனை விலை எகிற போகுதா? அரசாணை 181/2020க்கு எதிராக பெயிரா
சென்னை: கிராமப்புறங்களில் நகர்ப்புற விதிகளைக் கட்டாயப்படுத்துவது மனைகளின் விலையை உயர்த்தி, ஏழை எளிய மக்களின் சொந்த நிலக் கனவைப் பறித்துவிடும். அதனால் அரசாணை 181/2020-ஐத் திரும்பப் பெற்று, கிராமப்புறங்களுக்கு ஏதுவான எளிய விதிகளை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். காகத்திற்குக் கூட கூடு இருக்கும் சூழலில், எளிய மக்களின் மனை கனவைக் காப்பது அரசின் கடமை என FAIRA தலைவர் டாக்டர் A. ஹென்றி கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தின் கிராமப்புற ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் சொந்த வீட்டுமனை கனவைப் பாதுகாக்கும் நோக்கில், அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் (FAIRA) நிறுவனரும் தேசியத் தலைவருமான டாக்டர் A. ஹென்றி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையருக்கு விரிவான கொள்கை மனு ஒன்றைச் சமர்ப்பித்துள்ளார்.

கிராம ஊராட்சிகள்
நகர்ப்புறங்களுக்கு என உருவாக்கப்பட்ட உள்கட்டமைப்பு விதிகளை கிராம ஊராட்சிகளுக்கும் ஒரே மாதிரியாகக் கட்டாயப்படுத்துவது சமூக நீதி, பொருளாதார நியாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சியின் உண்மை நிலைக்கு முற்றிலும் எதிரானது என்று அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் மனை வாங்குபவர்கள் பெரும்பாலும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், சிறு வணிகர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் ஆவர். இவர்கள் உடனடியாக வீடு கட்டுவதற்காக மனை வாங்குவதில்லை. மாறாக, பிள்ளைகளின் எதிர்காலம், குடும்பப் பாதுகாப்பு, திருமணத் தேவைகள் மற்றும் ஓய்வுக்கால வாழ்க்கைக்கான சிறிய முதலீடாகவே இதனைப் பார்க்கிறார்கள்.
நகர்ப்புறங்கள் - திறந்தவெளி கழிவுநீர்
இத்தகைய சூழலில், நகர்ப்புறங்களைப் போல திறந்தவெளிக் கழிவுநீர் கால்வாய், மேல்நிலை நீர்த் தொட்டி, பாதாளச் சாக்கடை உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஆரம்பத்திலேயே கட்டாயப்படுத்துவது மனைகளின் விலையைப் பல மடங்கு உயர்த்துகிறது. பயன்பாட்டிற்கு வராத இக்கட்டமைப்புகள் பல ஆண்டுகள் பராமரிப்பின்றி வீணாவதோடு, ஏழை எளிய மக்களின் சொந்த மனை கனவும் எட்டாக்கனியாக மாறுகிறது.
எனவே, நகர்ப்புற அரசாணை 181/2020 அனைத்து கிராமங்களுக்கும் பொருந்தாது என்பதைத் தெளிவுபடுத்தி, கிராமப்புற உள்கட்டமைப்பு விதிகளை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று FAIRA வலியுறுத்தியுள்ளது.
தொலைதூர விவசாயக் கிராமங்கள்
நகரத்தை ஒட்டியுள்ள வளர்ச்சி பெறும் கிராமங்களுக்கு மட்டும் தேவைக்கேற்ப கூடுதல் நிபந்தனைகளை விதிக்கலாம் என்றும், தொலைதூர விவசாயக் கிராமங்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை வசதிகளே போதுமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் குடியேற்றத்திற்கு ஏற்ப படிப்படியாக உள்கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் எனவும், பின்னாளில் அரசுத் திட்டங்கள் மூலம் குடிநீர், தெருவிளக்கு வசதிகளைச் ஏற்படுத்தலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கிராம மக்களின் பொருளாதார நிலைக்கு ஏற்ற கட்டண முறையை வகுத்து, ஒப்புதல் கோப்புகளைத் தேவையின்றி நிலுவையில் வைக்காமல் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்றும், கிராமப்புறங்களின் தனித்துவத்தைக் கருத்தில் கொண்டு புதிய மக்கள் நல வழிகாட்டிச் சுற்றறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
காக்காய்க்கூட கூடு
இது குறித்துப் பேசிய டாக்டர் ஹென்றி, "மக்கள் குடியேறாத இடத்தில் லட்சக்கணக்கில் செலவிட்டு நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குவது பொருளாதார வீணடிப்பாகும். காகத்திற்கு கூட ஒரு கூடு உள்ளது, வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் எதிர்காலத்தில் ஒரு சொந்த மனை இருக்க வேண்டும். அந்தக் கனவைப் பாதுகாப்பது அரசின் சமூக நீதிக்கான கடமையாகும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தையும் சொந்த இல்லக் கனவையும் கருத்தில் கொண்டு, அரசு இக்கோரிக்கைகளை உடனடியாகப் பரிசீலிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்....!!


Click it and Unblock the Notifications
