இப்போதைக்கு ராஜினாமா இல்லை? போராட்டத்துக்கு நடுவே தர்மேந்திர பிரதான் போட்ட பதிவு! கடும் விமர்சனம்
டெல்லி: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மற்றும் மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல் ராகுல் காந்தி உள்பட பிற காங்கிரஸ் தலைவர் டெல்லியில் பிரதமர் இல்லத்தின் முன்பு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு நடுவே மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது எக்ஸ் பக்கத்தில் முக்கிய பதிவை செய்துள்ளார். இதன்மூலம் அவர் இப்போதைக்கு ராஜினாமா முடிவில் அவர் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.
இதுதொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ''எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரின் போது குழப்பத்தை உருவாக்குவதற்காக, மாணவர்களை அரசியல் கருவிகளாக வெட்கமின்றி பயன்படுத்தி வருகின்றனர்.

ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் பாதுகாப்பு நெறிமுறைகளை புறக்கணிக்கும் வகையில் தர்ணா போராட்டத்திற்கு பிரதமர் இல்லத்தின் வெளிப்புறத்தை தேர்வு செய்தனர். பேச்சுவார்த்தைக்கு தயார் என்று மத்திய அரசு கூறியும் காங்கிரஸ் கட்சி ஜனநாயக ரீதியிலான விவாதத்தை விட அரசியல் வேடிக்கையை தேர்வு செய்தது. அவர்களின் நோக்கம் மாணவர்களுக்கான தீர்வு அல்ல. அரசியல் தலைப்பு செய்திகள் மூலம் குழப்பத்தை ஏற்படுத்துவது தான்.
ராகுல் காந்தியை பொறுத்தவரை இது மாணவர்களின் நலன்களை பற்றியது இல்லை. மோதலை உருவாக்குவது தான் நோக்கம்.
நீட் தேர்வு குறித்து விவாதிப்பதற்கும், நமது இளைஞர்களின் ஒவ்வொரு உண்மையான கவலையையும் நாடாளுமன்ற சபையில் நிவர்த்தி செய்வதற்கும் எங்கள் அரசாங்கம் 100 சதவீதம் உறுதியுடன் உள்ளது. இந்திய மாணவர்கள் அரசியல் பிரசாரத்தில் வெறும் காட்சி பொருளாக நடத்தப்படுவதை விட சிறப்பாக நடத்தப்பட வேண்டியவர்கள்.
குழப்பத்திற்குப் பதிலாக உறுதியையும், கோஷங்களுக்குப் பதிலாக தீர்வுகளையும் பெற தகுதியானவர்கள். கோபம் கொள்வதை விட நாம் அவர்களுக்காக பணியாற்ற கடமைப்பட்டுள்ளோம். அவர்களுக்கு பதில்களையும், சீர்திருத்தங்களையும், பொறுப்பு கூறலையும் நாம் வழங்க கடமைப்பட்டுள்ளோம். அதை வழங்குவதில்தான் அரசு உறுதியாக உள்ளது'' என கூறியுள்ளார்.
இதில் தர்மேந்திர பிரதான் காங்கிரஸ் கட்சியை தான் விமர்சனம் செய்துள்ளார். அதுமட்டுமின்றி போராட்டங்களுக்கு செவிசாய்த்து சீர்த்திருத்தங்கள் கொண்டு வர மத்திய அரசு தயாராக இருப்பதை வெளிப்படுத்தி உள்ளார். இருப்பினும் ராஜினாமா செய்வது தொடர்பாக அவர் எந்த விஷயத்தையும் குறிப்பிடவில்லை. இதனால் போராட்டங்கள் தொடர்ந்தாலும் கூட தர்மேந்திர பிரதான் இப்போதைக்கு ராஜினாமா முடிவில் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications
