கோர்ட் வளாகத்தில் கைதிகள் கோஷ்டி மோதல்
தூத்துக்குடி:
கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட இரு தரப்பு கைதிகள் இடையே தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் கடும்மோதல் நடந்தது.
கைதிகள் ஒருவரை ஒருவர் துரத்தித் துரத்தி அடித்துக் கொண்டனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் கொலை வழக்கு தொடர்பாக தாசன், சந்தான ராஜ், மகேஷ், சூசை,வசந்த் மற்றும் வின்ரோ ஆகியோரை போலீஸார் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அதேசமயம், மற்றொரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கண்ணன், நாகராஜன், சுந்தர், முத்துராஜ், முத்துச்சாமி,சங்கர் ஆகியோரும் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டனர். அப்போது கண்ணனுக்கும், தாசனுக்கும்வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் இருவருக்கும் இடையே அடிதடி ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து இரு தரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்டனர். இதில் கண்ணனை, தாசன் தரப்பினர்விரட்டிச் சென்று தாக்கியதில் கண்ணனின் முகம் உடைந்து ரத்தம் கொட்டியது.
அங்கிருந்த போலீஸார் உடனடியாக அருகில் இருந்த காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கவே கூடுதல்போலீஸார் விரைந்து வந்து கைதிகளை துரத்திப் பிடித்து சண்டையை அடக்கினர்.
சமீப காலங்களில், தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் கைதிகளுக்கிடையே இது போல அடிதடி நடப்பது இதுநான்காவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.


