ஜெவுக்கு எதிராக வீடுகளில் கருப்புக் கொடி: விவசாயிகள் சங்கம் முடிவு
தஞ்சாவூர்:
விரைவில் தஞ்சாவூர் வருகை தரவுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக வீடுகள், வீதிகள் தோறும் கருப்புக்கொடி ஏற்றி வைத்து போராட்டம் நடத்தப் போவதாக தமிழக விவசாயிகள் சங்கம் கூறியுள்ளது.
இதுகுறித்து தஞ்சையில் சங்கத்தின் தலைவர் முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
காவிரி நீர் பிரச்சினையில் முதல்வர் ஜெயலலிதா ஆழந்த அமைதி காத்து வருகிறார். இதனால், தஞ்சை உள்ளிட்டகாவிரி பாசனப் பகுதி விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே ஜெயலலிதா தஞ்சாவூர் வரும்போது, அவருக்கு கண்டனம் தெரிவித்து, வீடுகள் தோறும், வீதிகள் தோறும்,நிறுவனங்கள்தோறும் கருப்புக் கொடிகளை ஏற்றியும், கறுப்புத் துணிகளை தொங்க விட்டும் எங்களது எதிர்ப்பைக்காட்டுவோம் என்றார்.
திசை திருப்புகிறார் ஜெ: நல்லகண்ணு
இதற்கிடையே காவிரிப் பிரச்சினையைத் தீர்க்காமல் மக்களை திசை திருப்பும் செயலில் முதல்வர் ஜெயலலிதாஈடுபட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் நல்லகண்ணு குற்றம் சாட்டியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், காவிரிப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு முக்கியப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விட்டு விட்டு, பலி கொடுக்கத் தடை போன்ற மக்களை திசை திருப்பும் புதுப்புது பிரச்சினைகளை கிளப்பி விட்டு வருகிறார் ஜெயலலிதா என்றார்.


Click it and Unblock the Notifications
