பொடா: மத்திய அரசின் சமாதானத்தை ஏற்க கருணாநிதி மறுப்பு
சென்னை:
பொடா மறு ஆய்வுக் கமிட்டிக்கு அதிக அதிகாரம் வழங்குவதாகக் கூறுவதையெல்லாம் ஏற்க முடியாது என்று திமுககூறியுள்ளது. பொடா சட்டத்தையே ஒட்டுமொத்தமாக வாபஸ் பெற வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதிமீண்டும் கோரியுள்ளார்.
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பொடா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாக புகார்எழுந்துள்ளதால், பொடா வழக்குகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க நீதிபதி அருண் சகார்யா தலைமையில்கமிட்டி அமைக்கப்பட்டது.
அதிகாரம் இல்லாத இந்தக் கமிட்டி அனுப்பிய நோட்டீஸ்களுக்கு தமிழக அரசு பதில் கூட அனுப்பவில்லை.
ஒரு வாரத்தில்...
இந் நிலையில் பொடாவுக்கு எதிராக சிறை நிரப்பும் போராட்டம் நடத்த திமுக திட்டமிட்டுள்ளதாலும், இதைக்காரணமாக வைத்து கூட்டணியைவிட்டு திமுக வெளியேறுவதைத் தடுக்கவும் இந்தக் கமிட்டிக்கு அதிக அதிகாரம்வழங்க சட்டத் திருத்தம் கொண்டு வரப் போவதாக நேற்று மத்திய அரசு அறிவித்தது.
இந்த சட்டத் திருத்தம் தொடர்பான ஜனாதிபதியின் அவசர அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியாகும் என மத்தியஅரசு இன்று தெரிவித்துள்ளது.
ஏற்க திமுக மறுப்பு:
ஆனால், பொடா சட்டத்தைத் திருத்துவதாகக் கூறும் மத்திய அரசின் அறிவிப்பை ஏற்க திமுக மறுத்துள்ளது. இதுகுறித்து கருணாநிதி இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பொடா விஷயத்தில் எங்களது நிலையில் எந்த மாற்றமும் இல்லை. அந்தச் சட்டத்தை மாநில அரசு தவறாகப்பயன்படுத்துவதைத் தடுக்க மத்திய அரசு முயற்சிக்கவில்லை.
இதுவரை தமிழகத்தில் பொடா சட்டத்தின் கீழ் 25 பேர் கைதாகியுள்ளனர். வைகோ, நெடுமாறன் போன்றவர்கள்ஒரு வருடமாக சிறையில் உள்ளனர். பத்திக்கை ஆசிரியர் கோபாலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் இந்தச் சட்டம் முற்றிலும் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் அதில் திருத்தம் கொண்டுவந்து என்ன புண்ணியம்?. அந்த சட்டமே தேவையில்லை என்பதே எங்களது நிலை.
பொடாவை தவறாகப் பயன்படுத்தி, கைதுகளைச் செய்த பிறகு தான் மறு ஆய்வுக் குழு தனது வேலையையேஆரம்பித்தது. அப்படி இருக்கும்போது பொடாவை மறு ஆய்வு செய்யப் போவதாக சொல்வது நகைப்புக்குரியது.பொடா தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க வேண்டுமா, அப்படியானால் பொடா சட்டத்தை வாபஸ் பெற்றாகவேண்டும். அது தான் ஒரே வழி.
இதனால் பொடாவுக்கு எதிராக நாங்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி வரும் டிசம்பர் 1ம் தேதி சிறை நிரப்பும்போராட்டம் நடத்துவோம்.
திமுகவை விட்டு விலக வேண்டுமா இல்லையா என்பது குறித்து பா.ஜ.க. தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.
தமிழக ஆளுனர் ராம் மோகன் ராவ் அடிக்கடி சொந்த வேலையாக வெளியூர் போய்விடுவதை கண்டித்துஜனாதிபதி அப்துல் கலாம் கடிதம் எழுதியுள்ளது தொடர்பாகக் கேட்டபோது, அது குறித்து எனக்கு ஏதும்தெரியாது. ஆனால், ராம்மோகன் ராவ் பதவியேற்றபோது அவரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தேன்.
அப்போது, குமரி முனையில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனப் பூச்சு பூச ஏற்பாடு செய்யவேண்டும் என்று கோரினேன். ஆனால், இதுவரை ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார் கருணாநிதி.
பிரதமருடன் மதிமுக தலைவர்கள் சந்திப்பு:
பொடா சட்ட மறு ஆய்வுக் குழுவுக்கு அதிக அதிகாரம் தரப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில்இன்று பிரதமர் வாஜ்பாயை மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன், அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர்நேரில் சந்தித்துப் பேசினர்.
மறு ஆய்வுக் குழுவுக்கு அதிக அதிகாரம் தரும் பிரதமரின் முடிவுக்கு அவர்கள் நேரில் பாராட்டுத் தெரிவித்தனர்.அதே நேரத்தில் மறு ஆய்வுக் குழுவின் செயல்பாட்டை துரிதப்படுத்தி வைகோவை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரினர்.
அதே போல பொடா மிரட்டலால் டெல்லியிலேயே தங்கியிருக்குமாறு பிரதமரால் அறிவுறுத்தப்பட்ட கண்ணப்பன்விவகாரம் குறித்தும் அவர்கள் பேசினர்.
மறு ஆய்வுக் குழுவுடன் சந்திப்பு:
முன்னதாக பொடா மறு ஆய்வுக் கமிட்டியின் தலைவர் நீதிபதி அருண் சகாரியாவையும் மதிமுக தலைவர்கள்சந்தித்தனர்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய எல்.கணேசன், பொடாவுக்கு எதிராக திமுக நடத்தும் சிறை நிரப்பும் போராட்டத்தில்மதிமுகவும் ஈடுபடுவது குறித்து வைகோ முடிவு செய்வார். மதிமுக, பா.ஜ.க. இடையே எந்த பிரச்சனையும் இல்லை.பொடா விஷயத்தில் முதலில் மத்திய அரசுக் கூட்டணியின் உதவியை மதிமுக நாடவே இல்லை என்றார்.
புலிகளை மதிமுக தொடர்ந்து ஆதரிக்குமா என்று கேட்டபோது, இது சம்பந்தமே இல்லாத கேள்வி. இதற்கு பதில்சொல்ல நான் தயாராக இல்லை என்றார் கணேசன்.












Click it and Unblock the Notifications