சரத்பவார், முலாயம், லல்லு, கம்யூனிஸ்டுகள் கூட்டணிக்கு ஜெ. முயற்சி
சென்னை:
பாரதிய ஜனதாக் கட்சியுடன் கூட்டணி வைக்கும் எண்ணம் அதிமுகவுக்கு இல்லை என்பதை முதல்வர் ஜெயலலிதாதிட்டவட்டமாக அறிவித்து விட்டார். அத்தோடு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய அளவில் புதிய கூட்டணிஉருவாகப் போவதையும் அவர் தெரிவித்துவிட்டார்.
தமிழக சட்டசபையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்திற்குப் பிறகு முதல்வர் ஜெயலலிதா நீண்ட உரையைஆற்றினார். அவரது பேச்சில் இருந்த படு காரம், அதிமுகவினருக்கே ஆச்சரியத்தையும், வியப்பையும்ஏற்படுத்தியுள்ளது.
காவிரிப் பிரச்சினை குறித்துப் பேசத் தொடங்கிய முதல்வர் படிப்படியாக அரசியல் கூட்டணிக்குத் தாவினார்.பா.ஜ.க., காங்கிரஸ், ஜனதாதளம் அல்லாத புதிய கூட்டணி மத்தியில் வர வேண்டும். அந்தக் கூட்டணி ஆட்சியைப்பிடிக்க வேண்டும், அதற்காக அதிமுக பாடுபடும் என்று ஜெயலலிதா பேசப் பேச சட்டசபையில் சூடு பரவியது.
சமீபத்தில் இந்தியா டுடே வார இதழ் நடத்திய கருத்துக் கணிப்பில், நாட்டின் அடுத்த பிரதமரை நிர்ணயிக்கப்போகும் கிங் மேக்கர்களாக ஜெயலலிதா, சரத் பவார், முலாயம் சிங் யாதவ் ஆகியோர்தான் இருப்பார்கள் என்றுமக்கள் நம்புகிறார்கள்.
இந்த மூன்று பேரின் கட்சிகளுக்கும் மொத்தம் 80 எம்.பிக்கள் வரை கிடைப்பார்கள் என்றும் இந்தியா டுடேயின்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
மேலும், கொல்கத்தாவிருந்து வெளியாகும் டெலிகிராப் நாளிதழ் நடத்திய கருத்துக் கணிப்பில், ஜெயலலிதாவேபிரதமராகும் தகுதி படைத்தவர் என்றும், மக்கள் ஆதரவு அவருக்கு மகத்தானதாக இருப்பதாகவும் தகவல்வெளியிட்டுள்ளது.
இதையெல்லாம் மனதில் வைத்தே ஜெயலலிதா புதிய முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. மேலும் சரத்பவாருடன்ஜெயலலிதா ஏற்கனவே கூட்டணி விஷயம் குறித்து பேச ஆரம்பித்துவிட்டதாகவும் அதிமுக வட்டாரத்தில்கூறப்படுகிறது.
இந்தக் கூட்டணியில் ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக், பிகார் ஜாம்பவான் லல்லு பிரசாத் யாதவ், மற்றும்ராம்விலாஸ் பாஸ்வான் போன்றவர்களும் இழுக்கப்படலாம் என்று தெரிகிறது.
கம்யூனிஸ்ட் தலைவர்களையும் சந்தித்து அவர்களுடனும் கூட்டணிக்கு ஜெயலலிதா முயல்வார் என்கிறார்கள்.பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வர விடாமல் தடுக்க கம்யூனிஸ்டுகள் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தரக் கூடும்.
குறைந்தபட்சம் 150 வரை பிடிக்கும் வகையில் தனது கூட்டணி அமைய வேண்டும் என்று ஜெயலலிதாவிரும்புகிறார்.
தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியின் ஓரிடத்தையும் சேர்த்து அதிமுக குறைந்தபட்சம் 35 இடங்களிலாவது வென்றாகவேண்டும் என சமீபத்தில் நடந்த அக் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கூறியுள்ளார் ஜெயலலிதா.
மேலும் தானே பிரதமராகும் ஆசையையும் அக் கூட்டத்தில் ஜெயலலிதா வெளியிட்டார். இதனால்இப்போதெல்லாம் ஜெயலலிதா செல்லும் இடங்களில் அதிமுகவினர் வருங்காலப் பிரதமர் வாழ்க என்றகோஷத்தையும் சேர்த்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் வாஜ்பாயுடனான கருத்து வேறுபாடு முற்றிவிட்டதால் பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்க அவருக்கு விருப்பம்இல்லை. மேலும் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்தால் அதனால் தனக்கு ஏதும் லாபம் இல்லை என்றும் ஜெயலலிதாகருதுகிறார்.
ஓட்டுக் கேட்க காவிரி டெல்டா பகுதிகளுக்கு பா.ஜ.க.வினரோ, காங்கிரஸாரோ சென்றால் மக்கள் அடித்துவிரட்டுவார்கள் என்றும் சட்டசபையில் ஆவேசமாக கூறினார் ஜெயலலிதா. இதனால் அடுத்த மக்களவைத்தேர்தலில் காவிரிப் பிரச்சனையை மையமாகவே வைத்தே தனது வியூகத்தை அமைப்பார் ஜெயலலிதாஎன்கிறார்கள்.
ஏற்கனவே சரத்பவார், காங்கிரஸ் கட்சியுடன் மோதலில் உள்ளார். மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் கூட்டணிஆட்சியில் இருந்தாலும் சோனியா காந்தியை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
அதேபோல, காங்கிரஸ் கட்சியின் ஆதரவை நம்பி பல முறை ஏமாந்த முலாயம் சிங்கும், காங்கிரஸ் மீது கடும்அதிருப்தியுடன் உள்ளார். லல்லு பிரசாத் தீவிரமான ஜெயலலிதா ஆதரவாளர். எனவே புதிதாக ஒரு தேசியகூட்டணியை உருவாக்குவது ஜெயலலிதாவுக்கு கடினமானதாக இருக்காது என்றே தெரிகிறது.
ஜெயலலிதாவின் அதிரடி அறிவிப்பால் மிகவும் அதிர்ந்து போயுள்ளது பா.ஜ.க. தான். வரும் நாடாளுமன்றத்தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என தமிழக பா.ஜ.கவினர் நினைத்திருந்த நிலையில், தமிழகத்தில்பா.ஜ.கவால் எக்காலத்திலும் ஆட்சிக்கு வர முடியாது என்று சட்டமன்றத்தில் அதிரடியாக முழங்கினார் ஜெயலலிதா.
இதனால் திமுகவை பகைத்துக் கொண்டு இப்போது அதிமுகவின் ஆதரவும் இல்லாததால் நடுத்தெருவில் நிற்கும்சூழலில் தமிழக பா.ஜ.க. உள்ளது.
துணைப் பிரதமர் அத்வானியிடம் அதிக நம்பிக்கையுடன் இருந்தார் ஜெயலலிதா. பல விஷயங்களில் அவர்ஜெயலலிதாவுக்கு கை கொடுத்து வந்தார். ஆனால் வாஜ்பாயை தொடர்ந்து ஜெயலலிதா அசிங்கப்படுத்தியதால்ஒரு அளவுக்கு மேல் அவரால் ஜெயலலிதாவை ஆதரிக்க முடியவில்லை.
மத்திய அமைச்சர் கண்ணப்பன் விவகாரத்தில் அத்வானி, ஜெயலலிதாவுக்குக் கை கொடுக்கவில்லை. சமீபகாலமாகதமிழக அரசியல் மற்றும் கூட்டணி விவகாரங்களை வாஜ்பாயே நேரடியாக கவனிக்க ஆரம்பித்துவிட்டார்.
இதனால் தான் சமீபத்தில் அத்வானிக்கே நோஸ்-கட் கொடுத்தார் ஜெயலலிதா. சென்னையில் நடந்த ஜனாகிருஷ்ணமூர்த்தியின் மகள் கல்யாணத்திற்காக சென்னை வந்த அத்வானியை, ஜெயலலிதா சந்திக்கவில்லை.
வரவேற்பு நடந்த மாலையன்று முதல்வரின் பாதுகாப்புப் படையினரை கல்யாண மண்டபத்தில் காவலுக்குநிறுத்தினர் தமிழக போலீசார். இதனால், ஜெயலலிதா எந்த நிமிடமும் வரலாம் என்று எதிர்பார்த்து அத்வானி,குஜராத் முதல்வர் மோடி, ஜனா ஆகியோர் காத்திருந்தனர்.
ஆனால், திடீரென கருப்புப் பூனைப் படையினரை திரும்ப வரவழைத்துவிட்ட ஜெயலலிதா, நிகழ்ச்சிக்கும் வராமல்அத்வானி மீது தனக்குள்ள கோபத்தை நேரடியாகவே வெளிப்படுத்தினார்.
முன்பொறுமுறை வாஜ்பாய் ஆட்சியைக் கவிழ்க்க டெல்லியில் ரூம் போட்டு தங்கி நினைத்த காரியத்தைசாதித்துவிட்டு வந்தவர் ஜெயலலிதா. இப்போது தேசிய அளவில் விஸ்வரூப அவதாரம் எடுக்கும் முயற்சிகளில்இறங்கியுள்ளார் ஜெயலலிதா.
டெல்லி அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட வாஜ்பாய் மற்றும் காங்கிரஸ் பெருந் தலைகள்ஜெயலலிதாவின் முயற்சிகளுக்கு கடிவாளம் போட எல்லா நடவடிக்கைகளிலும் இறங்குவார்கள்.
தேசிய அளவில் புதிய அரசியல் மோதலுக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications