நீதிமன்றம் கேள்வி கேட்க முடியாது: காளிமுத்து
சென்னை:
சட்டமன்ற அளித்த தீர்ப்பு குறித்து நீதிமன்றம் கேள்வி கேட்க முடியாது என்று தமிழக சட்டசபை சபாநாயகர் காளிமுத்து கூறினார்.
பத்திரிக்கையாளர்களின் மீது சட்டசபை எடுத்த நடவடிக்கைகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது பற்றி ஜூனியர் விகடனுக்கு காளிமுத்து அளித்துள்ள பேட்டியில்,
சட்டசபை தொடர்பான விஷயங்களில் எந்த ஒரு முடிவை எடுக்கவும் எனக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம் என்ற உரிமையை எந்த சட்டமும் பத்திரிக்கைகளுக்கு வழங்கவில்லை.
சட்டமன்றத்திற்கு வானளாவிய அதிகாரம் இருப்பதாக நான் சொன்னதும் இல்லை. நினைப்பதும் இல்லை. ஆனால், நீதிமன்றத்திற்கு எந்த அளவு அதிகாரம் உள்ளதோ அதே அளவு அதிகாரம் சட்டசபைக்கும் உண்டு. சட்டமன்றத் தீர்ப்பை கேள்வி கேட்க நீதிமன்றத்துக்கு உரிமையில்லை.
நான் எடுத்த முடிவு சரியானதே, நடுநிலையானதே என்பதில் உறுதியுடன் உள்ளேன். இப்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலைகள் அனைத்துக்கும் பொறுப்பேற்றுக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன். இதனால் என்ன பின் விளைவுகள் நேர்ந்தாலும் அதை சந்திக்கத் தயாராக இருக்கிறேன்.
என் மனசாட்சியை மீறி நான் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.
படுக்கையறையில் நுழையச் சொன்னது யார்?
இதற்கிடையே ராமும் ஜூனியர் விகடனுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
ஏதோ தாவூத் இப்ராகிம் கும்பலை மடக்குவது மாதிரி சென்னை போலீசார் எனது காரை பெங்களூரில் தடுத்து நிறுத்தினர். இதைச் செய்யச் சொன்னது சென்னை போலீஸ் கமிஷ்னர். எனது தலைமை நிருபர் ஜெயந்தின் வீட்டு படுக்கயைறைக்குள் போலீஸ் நுழைந்தது. இதைச் செய்யச் சொன்னதும் போலீஸ் கமிஷ்னர் விஜய்குமார் தான்.
இதற்கு அவர் பொறுப்பேற்க வேண்டும். அவர் நியாயமானவராக இருந்திருந்தால் சட்டத்துக்கு புறம்பாக செயல்பட மாட்டேன் என தலைமையிடம் சொல்லியிருக்கலாம். முடியாவிட்டால் பதவி விலக முன் வந்திருக்கலாம்.
எனது நிருபர் மாலினி பார்த்தசாரதி எனக்கு ஒரு வகையில் சகோதரி முறை வேண்டும். என் உறவினர் அவர். இந்த விவரம் கூட அறியாமல் சில போலீசார் என் வீட்டு வாட்ச்மேனிடம் போய் மாலினி ராமின் மனைவியா என்று அபத்தமாகப் பேசியுள்ளார்கள். என்கெளன்டரில் கொல்வோம் என வாட்ச்மேனை மிரட்டியிருக்கிறார்கள்.
இதற்கு விஜய்குமார் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும். பதவி விலக வேண்டும் என்று கூறியுள்ளார் ராம்.












Click it and Unblock the Notifications