நட்ராஜ் நாளை பதவியேற்பு: விஜய்குமார் நீக்கம் பற்றி புது தகவல்கள்
சென்னை:
சபாநாயகர் காளிமுத்துவால் கைது உத்தரவு இடப்பட்ட நாள் முதல், உச்ச நீதிமன்றம் இந்தக் கைதுக்குத் தடைவிதிக்கும் வரை இடைப்பட்ட நாட்களில் இந்து, முரசொலி ஆசிரியர்கள் மற்றும் நிருபர்களில் ஒருவரைக் கூட கைதுசெய்யத் தவறியதனாலேயே சென்னை போலீஸ் கமிஷ்னர் விஜய்குமாரை முதல்வர் ஜெயலலிதா மாற்றம்செய்ததாக தகவல்கள் வருகின்றன.
பண்ணையார் எண்கெளன்டர் விவகாரத்தில் ஏற்பட்ட நெருக்குதல்களைவிட, இந்தக் கைது உத்தரவுகளை சரியாகஅமலாக்காமல் விட்டதால் தான், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமியைக் கைது செய்யத் தவறியதற்காகஸ்ரீபால் தூக்கி அடிக்கப்பட்டார்.
கண்ணகி சிலையை லாரி மோதியது (மோத விட்டது முதல்?), திமுக பேரணியில் வீரமணியை விட்டு வெட்டு-குத்துநடத்தியது, கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்தது என அனைத்து வகைகளிலும் அரசுக்கு ஆதரவாகசெயல்பட்ட முத்துக் கருப்பன் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு, சஸ்பெண்டும் செய்யப்பட்டார்.
இந் நிலையில் அவர்களுக்கு ஏற்பட்ட கதியே முதல்வருக்கு மிக நெருக்கமாக இருந்த விஜய்குமாருக்கும்ஏற்பட்டுள்ளது. ராணி மேரிக் கல்லூரி விவகாரத்தில் மாணவிகளை ஒடுக்கியது, சென்னை மாநகராட்சித் தேர்தலில்புகுந்து விளையாடிய அதிமுகவினரைக் கண்டுகொள்ளாமல் விட்டது, எண்கெளன்டர்கள் நடத்தியது என அரசுக்குவிசுவாசமாகவே இருந்தார் விஜய்குமார்.
அரசியல்ரீதியில் இவர் விமர்சிக்கப்பட்டாலும் லஞ்ச- ஊழல் என விஜய்குமார் மீது எந்தவிதமான தனிப்பட்டகுற்றச்சாட்டும் கிடையாது. அந்த விஷயத்தில் மிக நேர்மையாகவே இருந்தார்.
இந் நிலையில் பண்ணையார் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடச் செய்ய மத்திய அமைச்சர்கள்திருநாவுக்கரசர், பொன். ராதாகிருஷ்ணன் மூலம் பிரதமர் வாஜ்பாய்க்கும் துணைப் பிரதமர் அத்வானிக்கும் நாடார்சமூகத்தின் முக்கிய விஐபிக்கள் நெருக்குதல் கொடுத்து வருகின்றனர்.
இந்த விஷயத்தில் விஜய்குமார் மீது தான் நேரடியாகக் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இதிலிருந்துவிஜய்குமாரைக் காப்பாற்ற தமிழக அரசு தயாராகவே இருந்தது.
ஆனால் இந்து, முரசொலி விஷயத்தில் ரெய்டுகள், சோதனைகள் நடத்தியதோடு விஜய்குமார் நிறுத்திக்கொண்டதாகவும், கைது நடவடிக்கையில் இறங்கவில்லை என்றும் அவர் மீது ஆட்சியாளர்களுக்கு கோபம்ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இதனால் தான் அவர் அதிரடியாகத் தூக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.
இதற்கிடையே வீரப்பனைப் பிடிக்கும் படையில் பணியாற்றுவதில் தான் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக விஜய்குமார்கூறியுள்ளார்.
புதிய கமிஷ்னராக நியமிக்கப்பட்டுள்ள ஆர். நட்ராஜ், திருநெல்வேலியைச் சேர்ந்தவர். இவரது மனைவி சார்ட்டர்ட்அக்கெளன்டன்ட் ஆவார். இவருக்கு இரு மகன்கள் உள்ளனர்.
அதிரடிப் படையின் ஏ.டி.ஜி.பியாக நியமிக்கப்படும் முன் இவர் மதுவிலக்குப் பிரிவு ஐ.ஜியாக இருந்தார். அதற்குமுன் மதுரை கூடுதல் எஸ்.பி, காத்மாண்டுவில் இந்திய வெளியுறவுத்துறையின் அதிகாரி, மத்திய ரிசர்வ் படையின்அதிகாரியாக காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்களில் பணியாற்றியுள்ளார்.
சென்னை கமிஷ்னராக இவர் நாளை பதவியேற்பார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications