ஜெயாவே விடுதலையாகும்போது நாங்களும் விடுதலையாவோம்: இளங்கோவன்
டெல்லி:
குற்றவாளியாக கருதப்பட்டவர்களே விடுதலையாகும்போது நாங்களும் விடுதலையாவோம் என டெஸ்மா வழக்கில் குற்றப் பத்திரிக்கையை வாங்கிக் கொண்ட காங்கிரஸ் முன்னாள் செயல் தலைவர் இளங்கோவன் கூறினார்.
அரசு ஊழியர்கள் போராட்டத்தைத் தூண்டியதாக அவர் மீது தமிழக அரசு வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் இன்று எழும்பூர் தலைமை பெருநகர நீதிமன்றத்தில் இளங்கோவன் ஆஜரானார். அப்போது அவருக்கு குற்றப் பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது. விசாரணை இரு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
நீதிமன்றத்துக்கு வந்த இளங்கோவனை வரவேற்க ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கூடியிருந்தனர். நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
டான்சி ஊழல் வழக்கில் குற்றவாளிகளாகக் கருதப்பட்டவர்களே விடுதலையாகிவிட்டனர். எங்கள் மீது போலீசார் பொய் வழக்குப் போடட்னர். இதனால் நாங்களும் விடுதலையாவோம். பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்காக நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன். ஜெயலலிதா எத்தனை வழக்கு போட்டாலும் சரி என்றார்.
ஜெவுக்கு மனசாட்சி கிடையாது: வைகோ
இந் நிலையில் இன்று பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வைகோ தனது வழக்கறிஞர் மூலம் நிருபர்களின் கேள்விகளுக்கு அளித்த பதிலில்:
ஜெயலலிதா மீதான டான்சி வழக்கில் தீர்ப்பு 14 மாதங்களாக தயாரிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா தனது மனசாட்சிக்கு பதில் தந்து வருந்த வேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். மனசாட்சி இருந்தால் தானே வருந்துவதற்கு.
முதல்வருக்கு உரிய நடத்தை விதிகளை மீறிய ஜெயலலிதா பதவி விலக வேண்டும். அவர் பதவி நீடிக்கும் ஒவ்வொரு நிமிடமும் அநீதியானது.
தனது விடுதலைக்கு கடவுளுக்கு நன்றி சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா. கடவுளுக்காக நான் அனுதாபப்படுகிறேன் என்றார் வைகோ.
அதிமுகவினருக்கு சுவாமி கண்டனம்:
டான்சி வழக்கில் ஜெயலலிதாவிற்கு வெற்றி கிடைத்துவிட்டது போல நினைத்து அதிமுகவினர் கொண்டாட்டம் போட்டு வருவதை முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும் என ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதில் ஜெயலலிதாவுக்கு வெற்றி ஏதுமில்லை. கடுமையான கண்டனத்துடன் தான் ஜெயலலிதாவை நீதிபதிகள் விடுவித்துள்ளனர். எழுத்துப்பூர்வமான சட்டத்தின்படி போதிய ஆதாரம் இல்லாததால் தப்பியிருக்கிறார் ஜெயலலிதா. இதனால் நீதிக்குப் பணிந்து அதிமுகவினர் செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications