தூண்டிவிடவும் தெரியாது, தூண்டில் போடவும் தெரியாது: குற்றப் பத்திரிக்கையை பெற்ற கருணாநிதி பேட்டி
சென்னை:
அரசு ஊழியர் போராட்டத்தைத் தூண்டியதாக டெஸ்மா சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கில் திமுக தலைவர் கருணாநிதி இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரிடம் இரு குற்றப் பத்திரிக்கைகளின் நகல்கள் வழங்கப்பட்டன.
அரசு ஊழியர் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தூண்டி விட்டதாக கருணாநிதி, கம்யூனிஸ்ட் தலைவர்கள் நல்லகண்ணு, வரதராஜன், காங்கிரஸ் முன்னாள் செயல் தலைவர் இளங்கோவன் ஆகியோர் மீது தமிழக அரசு டெஸ்மா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது தமிழக அரசு.
இவர்கள் மீது போலீசார் குற்றப் பத்திரிக்கையும் தாக்கல் செய்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக நல்லகண்ணு, வரதராஜன், இளங்கோவன் ஆகியோருக்கு சென்னை எழும்பூர் கூடுதல் குற்றவியல் நீதிமன்றம், போலீசார் தாக்கல் செய்த குற்றப் பத்திரிக்கையின் நகல்களை வழங்கியது.
நகலைப் பெற இன்று கருணாநிதி ஆஜராகுமாறு கோரப்பட்டிருந்தார். அதன்படி இன்று கருணாநிதி நீதிமன்றத்தில் ஆஜரானார். இதையடுத்து ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்களும் நீதிமன்ற வளாகத்தில் குழுமினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து அடியோடு ஸ்தம்பித்தது. அவர்கள் கருணாநிதிக்கு ஆதரவாகவும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பியபடி இருந்தனர்.
தன்னால் இரண்டு மாடிகள் ஏறி வர முடியாது என்பதால் குற்றப் பத்திரிக்கையை வெளியிலேயே வழங்குமாறு கருணாநிதியின் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் நீதிமன்றம் வரை நான் வந்துள்ளதால், இதையே நான் நேரில் ஆஜரானதாகக் கருத வேண்டும் என்றும் அதில் கோரப்பட்டிருந்தது.
இதையடுத்து கருணாநிதியின் வயதைக் கருத்தில் கொண்டு, மாடி ஏறி வர வேண்டாம் என்று கூறிவிட்ட கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் அருள்ராஜ், குற்றப் பத்திரிக்கைகளை நீதிமன்றத்தின் வெளியிலேயே கருணாநிதியிடம் வழங்குமாறு நீதிமன்ற அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து அந்த அதிகாரி குற்றப் பத்திரிக்கையை நீதிமன்றத்தின் வெளியே எடுத்து வந்தார். காரில் அமர்ந்திருந்த கருணாநிதியின் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராமசாமி இந்தக் குற்றப் பத்திரிக்கைகளை பெற்றுக் கொண்டார். இதையடுத்து இந்த வழக்கை டிசம்பர் 24ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
190 பக்கங்கள் கொண்ட போலீசாரின் இந்தக் குற்றப் பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
டெஸ்மா சட்டப்படி அரசு ஊழியர் போராட்டம் தடை செய்யப்பட்டிருந்த நிலையிலும் போராட்டத்தைத் தூண்டுவிடும் வகையில் கருணாநிதி செயல்பட்டது குற்றமாகும். போராட்டத்தை தடை செய்தது உச்ச நீதிமன்றமே சரி என்று கூறிவிட்ட நிலையிலும் அறிக்கைகள், பேச்சுக்கள் மூலம் போராட்டத்தை தொடர்ந்து தூண்டினார் கருணாநிதி.
இதன் மூலம் நீதிமன்றத்தையே துச்சமாக மதித்து செயல்பட்டார். இதனால் டெஸ்மா சட்டத்தின் 4,5வது பிரிவுகளின் கீழ் இரு குற்றப் பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
சுமார் 15 நிமிடங்கள் கருணாநிதி எழும்பூர் நீதிமன்ற வளாகத்தின் வெளியே இருந்தார். அவருடன் நிர்வாகிகளான ஸ்டாலின், துரைமுருகன், ஆற்காடு வீராசாமி மற்றும் திமுக வழக்கறிஞர்களும் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.
தூண்டவும் தெரியாது, தூண்டில் போடவும் தெரியாது
எனக்குத் தூண்டி விடவும் தெரியாது, தூண்டில் போடவும் தெரியாது என்று தன் மீது தொடரப்பட்டுள்ள டெஸ்மா வழக்கு தொடர்பாக கருணாநிதி கருத்துத் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு ஊழியர் வேலை நிறுத்தப் போராட்டத்தை நான் தூண்டி விட்டதாக டெஸ்மா வழக்கை போட்டுள்ளனர். நியாயமான காரணங்களுக்காகப் போராடுபவர்களை ஆதரித்துக் கருத்துக் கூறுவது, அவர்களுக்கு தார்மீக ஆதரவு தெரிவிப்பது தவறு என்றால் எதிர்க் கட்சிகளே செயல்பட முடியாது.
முந்தைய திமுக ஆட்சியின்போது, அதிமுகவினர் எத்தனையோ போராட்டங்களை நடத்தினர், எத்தனையோ போராட்டங்களுக்கு துணையாக இருந்தனர். ஆனால் எனக்கோ, திமுகவுக்கோ தூண்டி விடவும் தெரியாது, தூண்டில் போடவும் தெரியாது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications