காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பூரண மது விலக்கு: வாசன்
சென்னை:
தமிழகத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பூரணமாக மது விலக்கை அமல்படுத்துவோம், அனைத்து மதுக் கடைகளையும் நிரந்தரமாக மூடுவோம் என அக் கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
அரசே மதுக் கடைகள் திறந்துள்ளதை எதிர்த்து குமரி ஆனந்தனின் காந்தி பேரவை சார்பில், சென்னையில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
வள்ளுவர் கோட்டம் எதிரே நடந்த இந்தப் போராட்டத்தை வாசன் தொடங்கி வைத்துப் பேசுகையில்,
பூரண மதுவிலக்கே காமராஜரின் கோட்பாடு, குறிக்கோள். தற்போது தமிழகத்தில் அரசே மதுக் கடைகளை திறந்து வைத்து இளைஞர்களை சீரழிக்கத் தொடங்கியுள்ளது. உடனடியாக இந்த மதுக் கடைகளை மூட வேண்டும். இல்லாவிட்டால் அரசை எதிர்த்துப் பெரும் போராட்டம் நடத்துவோம்.
தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் காமராஜரின் ஆட்சி மீண்டும் வந்தால், பூரண மது விலக்கை அமல்படுத்துவோம்.
கள்ளச் சாராய சாவுகளை தடுக்க தமிழக அரசு புதிய திட்டம் கொண்டு வர வேண்டும் என்றார்.
எரிசாராயம் பறிமுதல்:
இதற்கிடையே கள்ளச் சாராயம் தயாரிக்க உதவும் எரிசாரயத்தை (ஸ்பிரிட்) கடத்திய 6 பேர் கைது செய்யப்பட்டு, 170 கேன்களில் பதுக்கப்பட்டிருந்த எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்டதாகும்.
சென்னை அருகே பொன்னேரியில் கள்ளச் சாராயத்திற்கு 16 பேர் பலியான சம்பவத்தையடுத்து தமிழகம் முழுவதும் கள்ளச் சாராய வேட்டை தீவிரமாகியுள்ளது. பூந்தமல்லி அருகே போலீஸார் ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் 5 கேன்களில் எரிசாராயம் இருந்தது.
இதையடுத்து கார் டிரைவர் குட்டியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சோழிநங்கநில்லூர் அருகே உள்ள செம்மஞ்சேரி பகுதியில் உள்ள ஒரு கிட்டங்கியில் போலீஸார் சோதனை நடத்தி அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 165 கேன் எரிசாராயத்தைப் பறிமுதல் செய்தனர். 5 பேரையும் கைது செய்தனர்.
இவர்களுக்கும் பொன்னேரி கள்ளச் சாராய சம்பவத்திற்கும் தொடர்பு உள்ளதா என்று விசரணை நடந்து வருகிறது.


Click it and Unblock the Notifications
