வைகோ கைது: பொடா மறு ஆய்வுக் குழு கேள்வி கேட்க முடியாது- தமிழகம் பதில் மனு
சென்னை:
வைகோ கைது: பொடா மறு ஆய்வுக் குழு கேள்வி கேட்க முடியாது- தமிழக அரசு அதிரடி
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நக்கீரன் ஆசிரியர் கோபால் உள்ளிட்டோர் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது குறித்து பொடா மறு ஆய்வுக் குழுவின் நோட்டீசுக்கு இன்று தமிழக அரசு காட்டமான பதில் அளித்துள்ளது.
இந்த நோட்டீசுக்கு இன்று தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், வைகோ உள்ளிட்டவர்கள் மீது பொடா வழக்கு விசாரணை தனி நீதிமன்றத்தில் நடந்து வருவதால் இந்தக் கைதுகள் சரியா, இல்லையா என்பது குறித்து கேள்வி கேட்க மறு ஆய்வுக் குழுவுக்கு அதிகாரம் இல்லை என்றும், அது குறித்து மாநில அரசிடம் இந்தக் குழு விளக்கம் கேட்கவும் முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த விளக்கத்தை பொடா மறு ஆய்வுக் குழு நாளை பரிசீலிக்க உள்ளது. அதன் பிறகு முடிவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வைகோ மீதான பொடா வழக்குத் தொடர்பான ஆவணங்களையும், கைது சரியா என்பது குறித்து விளக்கம் கேட்டும் தமிழக அரசுக்கு பொடா மறு ஆய்வுக் குழு வழங்கிய காலக்கெடு இன்றுடன் முடிந்தது. இந் நிலையில் கடைசி நாளான இன்று தனது ஆட்சேபங்களை தமிழக அரசு தாக்கல் செய்தது.
இதற்காக சிபிசிஐடி ஐ.ஜி. மற்றும் தமிழக அரசின் வழக்கறிஞர் முத்துக் குமாரசாமி ஆகியோர் நேற்று டெல்லி சென்றனர். இன்று காலை இவர்கள் மறு ஆய்வுக் குழுவின் தலைவர் நீதிபதி சகார்யாவைச் சந்தித்து தமிழக அரசின் சார்பில் பதில் மனுவைக் கொடுத்தனர்.
அதில், இந்தக் குழுவின் அதிகார வரம்பையே தமிழகம் கேள்வி கேட்டுள்ளது.
மதுரை அருகே திருமங்கலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக வைகோ உள்ளிட்ட 9 மதிமுகவினர் பொடாவில் கைதாயினர். இந்த வழக்கு பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந் நிலையில் பொடா மறு ஆய்வுக் குழுவுக்கு சமீபத்தில் அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டன. இந்தக் குழுவின் உத்தரவுகளுக்கு மத்திய, மாநில அரசுகள் கட்டுப்பட வேண்டும் என்று புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து வைகோ வழக்குத் தொடர்பான போலீஸ் டைரி, வழக்கின் ஆவணங்களை டிசம்பர் 2ம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு பொடா மறு ஆய்வுக் குழுவின் தலைவர் நீதிபதி அருண் சகார்யா தமிழக அரசுக்கு இரு முறை நோட்டீஸ் அனுப்பினார்.
இந்த ஆவணங்களை அனுப்பாவிட்டால், அதை வேறு வழியில் தாங்கள் பெறுவோம் என்றும் அதன் பின்னர் வைகோ கைது தொடர்பாக தன்னிச்சையாக முடிவு செய்வோம் எனவும் நீதிபதி அறிவித்திருந்தார்.
இந் நிலையில் தமிழக அரசின் ஆட்சேபம் இந்தக் குழுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நீதிபதி சகார்யா கூறுகையில், எங்களது நோட்டீசுக்கு தமிழக அரசு ஆட்சேபம் தெரிவித்து பதில் மனு தந்துள்ளது. நாங்கள் கேட்ட ஆவணங்கள் எதையும் தமிழக அரசுப் பிரதிநிதிகள் இன்று என்னிடம் தரவில்லை. முதலில் தங்களது ஆட்சேபம் குறித்து நாங்கள் ஒரு முடிவெடுக்க வேண்டும் என தமிழகம் கருதுகிறது.
நாளை எங்கள் குழு கூடி தமிழக அரசின் இந்த ஆட்சேபம் குறித்து விவாதிக்கும் என்றார்.
குறுக்கு விசாரணைகள்:
இதற்கிடையே பொடா நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளிடம் (போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர்) மதிமுக வழக்கறிஞர் குருநாதன் குறுக்கு விசாரணை மேற்கொண்டார். இந்த குறுக்கு விசாரணை நேற்றுடன் முடிவடைந்தது.
இதைத் தொடர்ந்து திருமங்கலம் கூட்டத்தில் இருந்து வைகோவின் பேச்சைக் கேட்ட பொது மக்களான கோட்டீஸ்வரன், மாயாண்டி, முத்துச்சாமி ஆகியோரை குறுக்கு விசாரணை செய்வதற்கும், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கும் கால அவகாசம் கேட்டார் அரசு வழக்கறிஞர் ஜெயக்குமார். 3 பேரும் மதுரையிலிருந்து சொந்த செலவில் வந்து செல்ல வேண்டும் என்பதால் கால அவகாசம் தேவைப்படுவதாக அவர் தெரிவித்தார்.
சாட்சிகள் எப்போது தேவைப்படுகிறார்களோ அப்போது அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டியது அரசு வழக்கறிஞரின் பொறுப்பு. கால அவகாசம் எல்லாம் தர முடியாது என்று கூறிய நீதிபதி, வரும் 8ம் தேதி அந்த 3 பேரையும் ஆஜர் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
நாயுடுவை ஜெ. சந்தித்தது நாடகம்: வைகோ
இதற்கிடையே ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை முதல்வர் ஜெயலலிதா சந்தித்தது வெறும் ஒப்புக்காகத்தான், தமிழக மக்களை ஏமாற்ற அவர் நடத்திய நாடகம் அது என்று வைகோ கூறினார்.
பொடா நீதிமன்றத்தில் போலீஸாரின் எதிர்ப்புகளையும் மீறி அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஓய்வுக்காக ஹைதராபாத் சென்ற ஜெயலலிதா அப்படியே, சென்னைக்கு குடிநீர் கோரி நாயுடுவுடன் பேச்சு நடத்தியது, சென்னை மக்களை அவமானப்படுத்தும் செயல்.
இலங்கைத் தமிழர்களுக்கு உரிமைகள் கிடைக்கும் வகையில் அமைதிப் பேச்சுவார்த்தை அமைய வேண்டும். அது இல்லையென்றால், தமிழ் ஈழத்தைத் தவிர வேறு வழியில்லை என்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கூறியிருப்பதில் தவறில்லை. அவரது கருத்தில் நூற்றுக்கு நூறு சதவீதம் எனக்கும் உடன்பாடானதே என்றார்.












Click it and Unblock the Notifications