கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம்: ரஷ்ய நிறுவனத்திடம் லஞ்சம் கேட்ட தமிழக அதிகாரிகள்
சென்னை:
கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டத்திற்கான டெண்டர் வழங்க தமிழக அரசு அதிகாரிகள் ரூ.50 கோடி லஞ்சம் கேட்டதாக ரஷ்ய நிறுவனம் புகார் கூறியுள்ளது. இதற்கான ஆதாரங்களையும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
சென்னை நகரின் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க மீஞ்சூரில் கடல் நீரை குடி நீராக மாற்றும் திட்டத்தை ரூ,1,750 கோடி செலவில் அமலாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான டெண்டர்கள் கோரப்பட்டன.
இதையடுத்து இத் திட்டத்தை நிறைவேற்ற இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு நிறுவனமும், ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு நிறுவனமும் முன் வந்து டெண்டர்களை சமர்பித்தன.
முதலில் ரஷ்ய நிறுவனத்திற்கு டெண்டர் தர முடிவு செய்த அரசு பின்னர் டெண்டர் தர மறுத்துவிட்டது. இதை எதிர்த்து அந்த ரஷ்ய நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அந்த வழக்கில், தமிழக அரசு அதிகாரிகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரூ. 50 கோடி லஞ்சம் கேட்டனர். அதை நாங்கள் தர மறுத்ததால் எங்களுக்கு டெண்டர் தரும் முடிவை மாற்றிக் கொண்டனர். எனவே வேறு யாருக்கும் டெண்டர் தருவதை நிறுத்தி உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று ரஷ்ய நிறுவனம் கோரியிருந்தது.
இதனையடுத்து நீதிபதி கோவிந்தராஜ் டெண்டர் தொடர்பான இறுதி முடிவு எடுப்பதை அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந் நிலையில் தமிழக அரசு சார்பில் கடந்த வாரம் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், ரஷ்ய நிறுவனம் சிவில் பணிகளை செய்யும் நிறுவனம் என்பதால்தான் டெண்டர் தரப்படவில்லை. எனவே உயர் நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி முருகேசன் முன்பு மறுபடியும் விசாரணைக்கு வந்தது. அப்போது ரஷ்ய நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் மோகனம் பராசரன் கூறியதாவது:
அரசு அதிகாரிகள் ரஷ்யாவின் தலைமை நிறுவனத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரூ.50 கோடி லஞ்சம் கேட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. அவர்கள் தொடர்பு கொள்ள பயன்படுத்திய தொலைபேசி எண்ணையும், அவர்கள் பேசியதையும் டேப்பில் பதிவு செய்துள்ளோம். அந்த ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம்.
இது தொடர்பாக துறையின் உயர் அதிகாரியை சென்னையில் உள்ள ரஷ்ய தூதுருடன் நாங்கள் சந்திக்க சென்றபோது 1 மணி நேரத்திற்கும் அதிகமாக காக்க வைத்தனர். எந்த ஒரு இடத்திலும் ஒரு வெளிநாட்டுத் தூதருக்கு இதுபோன்ற காத்திருப்பு அவமரியாதை நேர்ந்ததில்லை. தமிழகத்தில் தான் இது நடந்துள்ளது.
மேலும் அரசு தரப்பில் கூறப்பட்டதுபோல் ரஷ்ய நிறுவனம் சிவில் சம்பந்தமான பணிகளைச் செய்யும் நிறுவனம் அல்ல. கடல் நீரைக் குடிநீராக மாற்றுவதில் வேதிப் பொருட்களின் பங்கும், அதைப் பயன்படுத்தும் ஆளுமையும் முக்கியம். அதில் இந்த ரஷ்ய நிறுவனம் முழு அனுபவம் பெற்றுள்ளது.
எனவே லஞ்சம் பெரும் உள் நோக்கத்தின் காரணமாகவே டெண்டரைத் தர அரசு மறுத்துள்ளது என்றார்.
அரசின் சார்பில் அட்வகேட் ஜெனரல் சந்திரன் ஆஜராகி வாதாடினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி முருகேசன் மறுதேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications