கருணாநிதியுடன் சுர்ஜித் சந்திப்பு: திமுக-காங்- மதிமுக- இடதுசாரிகள் கூட்டணி நிச்சயம்
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஹகிஷன் சிங் சுர்ஜித் இன்று சந்தித்துப் பேசினார். நாடாளுமன்றத் தேர்தலில் திமுக-காங்கிரஸ்- மதிமுக- இடதுசாரிக் கட்சிகளின் கூட்டணி அமைப்பது தொடர்பாக இருவரும் விவாதித்தனர்.
நேற்றிரவு சென்னை வந்த சுர்ஜித், இன்று காலை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டுக்குச் சென்றார். அவரை திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் வரவேற்று அழைத்துச் சென்றார்.
இதன் பின்னர் கருணாநிதியும் சுர்ஜித்தும் 1 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய சுர்ஜித்,
கருணாநிதி பெரிய தலைவர். தமிழக அரசியலில் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் அவரது பங்கு முக்கியமானது என நாங்கள் நினைக்கிறோம். தமிழகத்தில் மதவெறி சக்திகளுக்கு எதிரான வலுவான கூட்டணியை அவர் அமைத்துக் காட்டுவார்.
பா.ஜ.க. தலைமையிலான மதவாத சக்திகளை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வீழ்த்தியாக வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸால் மட்டுமே பா.ஜ.கவை வீழ்த்த முடியும். தேசிய அளவில் உள்ள மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இது அவசரமும் கூட என்றார்.
பின்னர் கருணாநிதி கூறியதாவது:
பிற்போக்கு சக்திகளை முறியடிக்க முற்போக்கு சக்திகளை ஒருங்கிணைப்பது என்று முடிவெடுத்துள்ளோம். திமுக, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை ஒரே அணியில் இடம் பெறுவது நிச்சயம் என்றார்.
அப்படியானால் பா.ம.க. யாருடன் உள்ளது? அது அந்தரங்கத்தில் தொங்கிறதா என்று நிருபர்கள் கேட்டனர்.
இதற்கு பதிலளித்த கருணாநிதி, நீங்கள் இப்படியொரு கேள்வியைக் கேட்டுவிட்டு நான் சொன்னதாகப் போட்டுவிடாதீர்கள். அந்தரத்தில் தொங்குவதாக நீங்கள் சொல்லலாம். என்னைப் பொறுத்தவரை பா.ம.க. எங்கிருந்தாலும் என் மதிப்புக்குறியவர்கள். எங்களுடன் கூட்டணி வைப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இப்போதும் உண்டு. நம்பிக்கை தானே மனிதனை வாழ வைக்கும் என்றார்.
அவர் தொடர்ந்து பேசுகையில், நான் விஷ ஜந்துக்கள் என பா.ஜ.வினர் அனைவரையும் சொன்னதாக அக் கட்சியின் தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார். நான் அனைவரையும் அப்படித் சொல்ல நாகரீகம் தெரியாதவன் அல்ல. ஒரு சிலர் என்று தான் சொன்னேன். அதற்கு அவர் இப்படி ஒரு அர்த்தம் கற்பித்தால் நான் பொறுப்பல்ல என்றார் கருணாநிதி.
முஸ்லீம் லீக் தலைவர் சந்திப்பு:
இதையடுத்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளரும் எம்.பியுமான அகமத், கருணாநிதியை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து கூட்டணி குறித்துப் பேசினார்.
இதற்கிடையே, திருச்சியில் நடந்த இந்திய தேசிய லீக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications