தமிழகத்துக்கு காவிரி நீர் தர கர்நாடகம் மறுப்பு
பெங்களூர்:
தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறந்துவிட முடியாது கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா திட்டவட்டமாகக்கூறியுள்ளார்.
காவிரிக் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில், 7 டி.எம்.சி. தண்ணீரைஉடனடியாகத் திறந்து விட வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ்கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பாக கர்நாடகம் தனது பதிலை 26ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று குழுவின் தலைவரும்மத்திய நீர்வளத்துறைச் செயலாளருமான துக்கல் கூறினார்.
இந் நிலையில், பெங்களூரில் ஒரு கருத்தரங்கைத் துவக்கி வைத்துப் பேசிய கிருஷ்ணா,
தமிழகத்திற்குத் திறந்து விட கர்நாடகத்தில் தண்ணீர் இல்லை. இப்போது நம்மிடம் இருக்கும் நீர் கர்நாடகத்தின்குடிநீர் தேவைக்கே சரியாக இருக்கும். அதையும் திறந்து விட வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கக் கூடாது.இப்போதுள்ள நிலையில் நீரைத் திறந்து விடச் சொல்பவர்கள், முட்டாள்களாகவே இருக்க முடியும் என்றார்.
இந்த வருடமேனும் காவிரி கண்காணிப்புக் குழு மூலம் தங்கள் துயருக்கு விடிவு கிடைக்கும், சம்பா பயிர்களைக்காக்க காவிரி நீர் வரும் என்ற தஞ்சை விவசாயிகளின் எதிர்பார்ப்பை, கிருஷ்ணா தனது பதிலால் கானல்நீராக்கியுள்ளார்.
இதற்கிடையே கர்நாடக காவிரி ஆற்றுப் படுகையில் ரூ.5,000 கோடி செலவில் பெரிய மற்றும் சிறியஅணைகளைக் கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. காவிரி நடுவர் மன்றம் கர்நாடகத்திற்கு ஒதுக்கியுள்ளகாவிரி நீர்ப் பங்கில் மட்டுமே இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
இதை திமுக, பா.ம.க. கட்சிகள் கடுமையாக எதிர்த்துள்ளன. இது தொடர்பாக திமுகவின் முதன்மைச் செயலாளர்துரைமுருகன், கர்நாடகம் இந்தத் திட்டங்களை நிறைவேற்றினால், ஏற்கனவே காவிரி நீர் இன்றி வாடும் தமிழகம்,நிரந்தரமாகப் பாலைவனமாகி விடும். காவிரி கண்காணிப்புக் குழு இதைத் தடை செய்ய வேண்டும் என்றுகூறியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், இத் திட்டங்களினால் மேட்டூர் அணை நிரந்தரமாக வறண்டு விடும்,இவற்றைச் செயல்படுத்த தடை கோரி தமிழக அரசு வழக்குத் தொடர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications