தென் சென்னை: வேட்பாளரை மாற்றுவாரா ஜெ?
சென்னை:
தென் சென்னை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் இஸ்லாமியரான பதர் சயீத் நிறுத்தப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிராமண சமூகத்தினர் ஆயிரக்கணக்கான தந்திகள் அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது.
நங்கநல்லூர் உள்பட இத் தொகுதியில் அடங்கிய பல்வேறு பகுதிகளிலும் பிராமண சமூகத்தினர் பெரும் எண்ணிக்கையில் வசிக்கின்றனர்.
பிராமணர்கள் அதிகம் உள்ளதால் தான் அவர்களின் ஓட்டுக்களை மனதில் வைத்து இந்தத் தொகுதியை பா.ஜ.கவின் இல.கணேசன் குறி வைத்திருந்தார். ஆனால், அவர் தேர்தலில் போட்டியிடவே கூடாது என்று முடிவு செய்த ஜெயலலிதா, தொழிலாளர்கள்- கம்யூனிஸ்ட்டுகள் நிறைந்த வட சென்னையை பா.ஜ.கவுக்கு ஒதுக்கினார்.
இதனால் போட்டியில் இருந்தே இல.கணேசன் விலகிக் கொண்டுவிட்டார். இந் நிலையில் தனது சர்ச் பார்க் காண்வெண்ட் தோழியும், வக்பு வாரியத்தின் தலைவருமாகிய பதர் சயீதை தென் சென்னையில் ஜெயலலிதா நிறுத்தியுள்ளார்.
ஏற்கனவே, பா.ஜ.கவுக்கு இந்தத் தொகுதியைத் தராததால் அதிருப்தியில் உள்ள பிராமண சமூகத்தினர் இப்போது இஸ்லாமியரான பதர் சயீத் நிறுத்தப்பட்டுள்ளதால் எரிச்சலடைந்துள்ளனர். இதனால் அச் சமூகத்தின் அமைப்புகள், முக்கியஸ்தர்கள் சார்பில் முதல்வருக்கு தந்திகள் பறந்து கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
அதில், வேட்பாளரை மாற்றுமாறு அவர்கள் கோரி வருகின்றனர். மேலும் பிராமண சமூகத்தினரின் அதிருப்தி குறித்து உளவுப் பிரிவு போலீசாரும் ஜெயலலிதாவிடம் அறிக்கை தந்துள்ளதாகத் தெரிகிறது.
இந்தத் தொகுதியில் திமுகவின் சார்பில் சக்தி வாய்ந்த டி.ஆர்.பாலு போட்டியிடுவதால் வெற்றி பெற அனைத்து சமூகத்தினரின் வாக்குகளும் அதிமுகவுக்குத் தேவை. இதனால் தென் சென்னை வேட்பாளர் பதர் சயீதை கடைசி நேரத்தில் ஜெயலலிதா மாற்றக் கூடும்.












Click it and Unblock the Notifications