நான் தான் ஸ்ரீதேவியின் கணவன்: ஆந்திர நபர் திடீர் வழக்கு
சென்னை:
நடிகை ஸ்ரீதேவியின் முதல் கணவர் நான் என்றும், அவரை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் எனக் கோரி ஆந்திராமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
ஸ்ரீதேவி பிரபல இந்தி நடிகர் அனில்கபூரின் சகோதரரும், திரைப்பட தயாரிப்பாளருமான போனிகபூரைத் திருமணம்செய்துள்ளார்.
இந் நிலையில், ஸ்ரீதேவி தனது மனைவி என்றும், அவரை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றும் கோரி ஆந்திராவைச்சேர்ந்த விச்சராபு ராமகிருஷ்ண கவுடு என்பவர் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
எனக்கும், நடிகை ஸ்ரீதேவிக்கும் கடந்த 15-03-92ம் தேதி இந்து முறைப்படி சென்னையில் குடும்பத்தினர் முன்னிலையில்திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பின் ஸ்ரீதேவியின் வீட்டில், நாங்கள் இருவரும் தம்பதியராக வாழ்ந்தோம். 3 நாட்களுக்குப்பின் நான் எனது சொந்த ஊரான அடங்கிவரிப்பாலம் என்னுமிடத்துக்கு ஒரு வேலை விஷயமாக சென்று விட்டு, சென்னைதிரும்பிய போது, என்னுடன் வாழ மறுத்து விட்டார் ஸ்ரீதேவி.
பின்னர், அவரை சமாதானப்படுத்தி அவரை எனது சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றேன். அங்கு இரண்டு நாட்கள் இருந்தஸ்ரீதேவி, சென்னை சென்று விட்டு ஒரு வாரத்தில் திரும்பி வந்து விடுவதாகக் கூறி விட்டு வந்தார். ஆனால், அதன் பிறகு அவர்திரும்பவில்லை. இதனால், அவருக்குப் பதிவுத் தபாலில் நோட்டீஸ் அனுப்பினேன்.
அதைப் பெற்றுக் கொண்ட ஸ்ரீதேவி எந்த பதிலும் அளிக்கவில்லை. இதைத் தொடர்ந்து, ஆந்திரா குண்டூர் மாவட்டம்தெனாலியில் உள்ள நீதிமன்றத்தில், ஸ்ரீதேவியைச் சேர்த்து வைக்கக் கோரி மனுத் தாக்கல் செய்தேன். என் மனுவை விசாரித்தநீதிமன்றத்தில் ஸ்ரீதேவிக்கு நோட்டீஸ் அனுப்பியது.
ஆனால் நோட்டீசை பெற்றுக் கொண்ட ஸ்ரீதேவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. என்னுடன் அவர் சமாதானம் பேசியதையடுத்துமனுவை வாபஸ் பெற்றேன். இதையடுத்து, கடந்த 22-12-1994 தேதி முதல் 17-01-2003ம் தேதி வரை கணவன் மனைவியாகவாழ்ந்தோம்.
இந் நிலையில், நான் என் சொந்த ஊருக்குச் சென்ற போது, விபத்து ஒன்றில் சிக்கினேன். அதில், எனது வலது கையில் எலும்புமுறிவு ஏற்பட்டது. அச் சமயம் என்னை வந்து சந்திக்கும்படி ஸ்ரீதேவிக்கு பல முறை தகவல் தெரிவித்தேன். ஆனால்,அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை.
இதனால், கடந்த டிசம்பர் 12ம் தேதி ஸ்ரீதேவிக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பினேன். ஆனால், அதைப் பெற்றுக் கொள்ள மறுத்துதிருப்பி அனுப்பி விட்டார். என்னை ஸ்ரீதேவியுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணையை ஏப்ரல் 22ம் தேதிக்கு முதன்மை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி புஷ்பா தள்ளிவைத்தார்.அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி ஸ்ரீதேவிக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.
இந் நிலையில் ராமகிருஷ்ண கவுடு பற்றி ஒரு பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே இதே போன்ற வழக்கைநடிகை ஜெயப்பிரதா மீதும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா மீதும் தொடர்ந்திருக்கிறார்.
15-03-1981ல் ஜெயப்பிரதாவை மணந்ததாகவும், அவர் தன்னுடன் சேர்ந்து வாழ மறுப்பதாகவும் 1982ம் ஆண்டு ஏப்ரல் மாதம்சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். ஆனால் இந்த மனு நிராகரிக்கப்பட்டது.
இதனையடுத்து 30-11-1991ம் தேதி பிரியங்கா காந்தியை திருமணம் செய்ததாகவும், அவரைத் தன்னுடன் சேர்த்து வைக்குமாறும்கோரி டெல்லி சிவில் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். மனுவைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம், பொய் வழக்குதொடர்ந்ததற்காக ராமகிருஷ்ணாவை சில நாட்கள் சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டது.
இப்போது ஸ்ரீதேவியை சொந்தம் கொண்டாடி வழக்கு தொடர்ந்திருக்கிறார் கவுடு.












Click it and Unblock the Notifications