குழந்தையுடன் ராதிகா செல்வி தீவிர பிரச்சாரம்: மோதிரம், சங்கிலிகள் அணிவித்து தடபுடல் வரவேற்பு
தூத்துக்குடி:
திருச்செந்தூர் தொகுதியின் திமுக வேட்பாளர் ராதிகா செல்வி தனது பச்சைக் குழந்தையுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். வழிநெடுக அக் குழந்தைக்கும் தாயாருக்கும் பெண்கள் ஆரத்தி எடுத்து வாழ்த்துத் தெரிவித்தனர்.
பல இடங்களில் குழந்தைக்கு தங்க மோதிரம், தங்கச் சங்கிலிகளையும் வெங்கடேச பண்ணையாரின் ஆதரவாளர்கள் அணிவித்தனர்.
சென்னையில் இருந்து தனது 3 வாரக் கைக் குழந்தையுடன் தூத்துக்குடிக்கு வந்த ராதிகா செல்வி, வந்தவுடன் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டார். ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான திமுகவினரும், பண்ணையாரின் ஆதரவாளர்களும் ராதிகாவை வரவேற்றனர்.
அவரது பிரச்சாரத்துக்காக நாடார் சமூகத்தைச் சேர்ந்த பிரபலம் ஒருவர் 5 டயோடா குவாலிஸ் கார்களையும், ஒரு போர்ட் காரையும் வழங்கியுள்ளார்.
அந்த புத்தம் புதிய போர்ட் காரில் திருச்செந்தூர் கிளம்பிய ராதிகாவுக்கு வழியெங்கும் நாடார் சமூகத்தினரும் பொது மக்களும் பெரும் வரவேற்பு அளித்தனர்.
நூற்றுக்கணக்கான கார்களில் பண்ணையாரின் ஆதரவாளர்களும் திமுகவினரும் சரத்குமார் மற்றும் விஜய்காந்தின் ரசிகர்கள் தொடர்ந்து வர சண்முகபுரம் பகுதியில் தடபுடல் ஆரத்தியுடன் ராதிகாவுக்கும் குழந்தைக்கும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதே போல முள்ளக்காடு பகுதியில் கோவில் நிர்வாகிகள் திரண்டு நின்று வரவேற்றனர். குழந்தைக்கு தங்கச் சங்கிலியும் மோதிரமும் அணிவித்தனர்.
ஆத்தூர் பகுதிக்கு ராதிகாவின் கார் வந்தபோது யானையை வைத்து குழந்தைக்கு ஆசி வழங்கினர் அப் பகுதி நாடார் சமூகத்தினர். அங்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கிக் கொண்டிருந்த மருத்துவ ஊழியர்களும் ஓடி வந்து குழந்தைக்கு சொட்டு மருந்து அளித்தனர்.
மூலக்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள், பெரும்பாலும் பெண்கள் கூடி நின்று ராதிகாவையும் குழந்தையையும் வாழ்த்தி கோஷமிட்டனர். பின்னர் தனது சொந்த ஊரான அம்மன்புரம் வந்த ராதிகா, தனது கணவர் வெங்கடேச பண்ணையாரின் சமாதிக்குச் சென்றார்.
குழந்தையை சமாதியின் அருகே வைத்துவிட்டு ராதிகா செல்வி, கதறி வெடித்து அழ, அப் பகுதியில் கூடியிருந்தவர்கள் அனைவரும் கண்கலங்கினர். 15 நிமிடம் சமாதியில் அமைதியாக, கண்ணீரை வடித்தபடி ராதிகா அமர்ந்திருந்தார்.
பின்னர் தனது வீட்டுக்கு வந்த ராதிகாவுக்கு ஏராளமான பொது மக்கள் வரவேற்பளித்தனர். சிறிது நேரம் வீட்டில் அமர்ந்திருந்த ராதிகா, கைக் குழந்தையுடன் உடனடியாக தொகுதிக்குள் பிரச்சாரத்துக்குக் கிளம்பினார்.
அப் பகுதியைச் சேர்ந்த எம்.ஜி.ஆர். மன்றத்தினர் 25 பேர் அவர் முன்னிலையில் திமுகவில் சேர்ந்தனர். இதையடுத்து அடைக்கலபுரம் பகுதியில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராதிகா,
இங்கே வெட்கம், மானம், ரோஷம் இல்லாத ஒரு கூட்டம் (அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அண்ட் கோ) நடமாடிக் கொண்டிருக்கிறது. பணத்தை வைத்துக் கொண்டு எதையும் செய்துவிடலாம் என அந்தக் கும்பல் நினைக்கிறது.
பணம் பத்தும் செய்யும் தான். ஆனால், மக்கள் பதினொன்னாவதையும் செய்ய முடியும். என்னைப் போன்ற ஒரு சூழல் எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது. மனித உரிமைகளை மதிக்காத ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்ட திமுகவுக்கு வாக்களியுங்கள்.
என் கணவனை சுட்டுக் கொன்றிருக்கிறார் ஜெயலலிதா. நான் ஒரு பெண். என்னால் கம்பு, கட்டையை எடுத்துக் கொண்டு போய் யாரையும் தாக்க முடியாது. ஆனால், என்னால் அரசியல்ரீதியில் பழி வாங்க முடியும். ஆணவத்துக்கு சாட்டையடி தர முடியும். அத்தோடு மக்களுக்கும் ஜெயலலிதாவிடம் இருந்து விடுதலை வாங்கித் தர முடியும் என்றார்.












Click it and Unblock the Notifications