மே 8 முதல் கூட்டங்கள், ஊர்வலங்களுக்குத் தடை
சென்னை:
மே 8ம் தேதி மாலை 5 மணிக்குப் பிறகு வாக்குப் பதிவு முடியும் வரை அரசியல் கட்சிகள் கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தக்கூடாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சாரங்கி தடை விதித்துள்ளார்.
சினிமா, டிவி, பத்திரிகைகள் மூலமாக விளம்பரம் செய்வதும் தடை விதிக்கப்படுகிறது. இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள்மூலமாக யாருக்கும் பிரசாரம் செய்யக் கூடாது என்றும் கூறியுள்ளார் சாரங்கி.
அதே போல தமிழகத்தில் வாக்குப் பதிவு நாளான மே 10-ம் தேதி, கூடும் வாரச் சந்தைகளை அடுத்த நாளுக்கு தள்ளிவைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அனைவரும் வாக்களிக்க வசதியாக வாரச் சந்தைகள் தள்ளிவைக்கப்படுன்றன. இந்த ஏற்பாட்டைச் செய்யுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
வாக்குச் சாவடியிலும், வாக்குச் சாவடியில் இருந்து 100 மீட்டர் தூரம் வரையிலும் செல்போன்கள், கார்டுலெஸ் போன்கள்,வயர்லெஸ் செட்டுகள் ஆகியவற்றை யாரும் எடுத்து செல்லவோ, பயன்படுத்தவோ கூடாது. ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்இடத்திலும் அதை சுற்றிலும் இவற்றை பயன்படுத்தக் கூடாது. இதை மீறுவோரின் செல்போன்கள் பாதுகாப்பு பணியில் உள்ளஅதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படும்.
அதே நேரத்தில் வாக்குப்பதிவு பணியிலும், ஓட்டு எண்ணிக்கை பணியிலும் உள்ள அதிகாரிகளுக்கு இந்தத் தடை பொருந்தாதுஎன்று அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications