ஜெவுடன் ஒரே மேடையில்.. இது வாஜ்பாயின் துர்பாக்கியம்: வைகோ
திருச்சி:
அரசு ஊழியர்கள் விஷயத்தில் முதல்வர் ஜெயலலிதா கூறுவதெல்லாம் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
திருச்சியில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
மதிமுக கடந்த 1994-ம் வருடம் மே 6-ம் தேதி தொடங்கப்பட்டது. இன்றோடு 10 வருடம் முடிந்து நாளை 11-வது வருடத்தில் மதிமுக அடி எடுத்து வைக்கிறது.
9-ம் வருட தொடக்க விழா 2002-ம் வருடம் மே 6ம் தேதி தொடங்கி தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. கடைசி நிகழ்ச்சியான ஜுன் 29ம் தேதி திருமங்கலம் நிகழ்ச்சியில் பேசியதற்காக நானும் என்னுடன் 8 மதிமுகவினரும் பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டோம்.
நாங்கள் கைது செய்யப்படுவதற்கு காரணமாக அமைந்த அதே திருமங்கலத்தில் 11-வது வருட தொடக்க விழா நடக்கிறது.
பொடா மறு ஆய்வு குழு எங்களுக்கு சாதகமாக தீர்ப்பளித்தது. ஆனால் தமிழக அரசு அந்த வழக்கை நடத்துவோம் என்று உச்ச நீதிமன்றத்துக்குப் போனார்கள். தமிழக அரசு தொடுத்த இந்த வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.
இது குறித்து முதல்வர் ஜெயலலிதா கூறும் போது, பொடா மறு ஆய்வு குழுவின் முடிவு ஒரு கருத்துதான்; தீர்ப்பு அல்ல என்று உலகின் மாபெரும் சட்ட மேதை போல கூறி இருக்கிறார். உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கரே 2 நாட்களுக்கு முன்பு, சென்னை உயர் நீதிமன்றம் வைகோவை விடுதலை செய்ய அரசுக்கு உத்தரவிட்டு இருக்கலாம் என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
ஜெயலலிதாவின் அடக்கு முறையால் அரசு ஊழியர்கள் ஆளான மனத் துயரம் எல்லாருக்கும் தெரியும். இப்போது நான கெடுதல் செய்யவில்லை, தேர்தலுக்குப் பின்னரும் நடவடிக்கை எடுக்க மாட்டேன் என்று ஜெயலலிதா ஜமுக்காளத்தில் வடி கட்டிய பொய்யை சொல்கிறார். ஜெயலலிதா சித்த பிரமை பிடித்தவர் என்பதையே இது காட்டுகிறது.
எல்லா தரப்பு மக்களின் வெறுப்புகளையும் சம்பாதிக்கும் திறமை ஜெயலலிதாவுக்கு மட்டும்தான் இருக்கிறது.
மகளிர் சுய உதவி குழுவினர், அரசு அதிகாரிகள் ஆள் பிடிக்கும் வேலையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். புதுக்கோட்டையில் பெரியார் சிலைக்கு சீல் வைத்து இருக்கிறார்கள். சொந்த கட்டிடத்தில் இருக்கும் சிலையை எப்படி மறைக்கிறார்கள். ஜெயலலிதாவின் உத்தரவுப் படிதான் இதெல்லாம் நடக்கிறது.
அழிவு ஒட்டு மொத்தமாக வரும் என்பார்கள். அப்படித்தான் ஜெயலலிதாவுக்கு இப்போது அழிவு வந்திருக்கிறது.
98-ல் அண்ணா பிறந்த நாள் கூட்டத்துக்கு பிரதமர் வாஜ்பாய் வந்தபோது, அவருடன் மேடையில் ஏற மாட்டேன் என்று ஜெயலலிதா கூறினார். ஒரு ஓட்டில் வாஜ்பாய் அரசை கவிழ்த்தார். வாஜ்பாய் தமிழ்நாட்டுக்கு வந்தால் அவரை விரட்டி அடியுங்கள் என்று கூறினார். இப்போது அவருடன் ஒரே மேடையில் பேசும் துர்பாக்கியம் வாஜ்பாய்க்கு நேர்ந்ததை நினைத்து நான் வருத்தப்படுகிறேன்.
இனி பா.ஜ.கவுடன் கூட்டணி சேர மாட்டோம். திராவிட இயக்கத்தை பலப்படுத்துவதே என் பணியாகும். திமுக கூட்டணியின் வெற்றி பிரகாசமாக இருக்கிறது என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications