தயாரிப்பாளரை சுட்ட பாலகிருஷ்ணா கைது
ஹைதராபாத்:
சினிமா தயாரிப்பாளரையும், அவரது நண்பரையும் துப்பாக்கியால் சுட்ட தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா இன்று காலை கைது செய்யப்பட்டார்.
மறைந்த ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவின் மகனான பிரபல நடிகர் பாலகிருஷ்ணா தனது வீட்டுக்கு வந்த படத் தயாரிப்பாளர் சுரேஷ் மற்றும் அவரது நண்பரான ஜோதிடர் சத்யநாராயணா ஆகிய 2 பேரையும் துப்பாக்கியால் சுட்டார்.
காயமடைந்த 2 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவத்தில் காயமடைந்ததாக பாலகிருஷ்ணாவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் மீது கொலை முயற்சி மற்றும் ஆயுதம் வைத்து இருந்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நேற்று இரவு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து இன்று அதிகாலை பாலகிருஷ்ணாவை போலீசார் கைது செய்தனர்.
பின்பு அவரை ஹைதராபாத் பெருநகர மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினார்கள். நாளை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும், அதுவரை மருத்துவமனையில் சேர்க்குமாறும் உத்தரவிட்டார். இதனையடுத்து பாலகிருஷ்ணா மீண்டும் அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ரசிகர்கள் ரகளை:
பாலகிருஷ்ணா கைது செய்யப்பட்டபோது மருத்துவமனைக்கு வெளியே கூடி இருந்த அவரது ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். சில ரசிகர்கள் தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டபோது, அவர்களை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications