அமெரிக்காவிலிருந்து திரும்புவதில் தாமதம்: அனுமதி கோரி வைகோ மனு
சென்னை:
அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்புவதற்கான தேதியை 2 நாட்கள் நீட்டிக்கக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.
தனது 11 மாத பேத்தியை மகளுடன் விட்டுவிட்டு வருவதற்காக அமெரிக்காவின் சிகாகோ நகருக்குச் சென்றுள்ளார் வைகோ. பொடா சட்டத்தின் கீழ் கைதாகி ஜாமீனில் இருப்பதால் உயர் நீதிமன்றத்தின் அனுமதி பெற்றுத்தான் வைகோ அமெரிக்கா சென்றார்.
வெளிநாடு செல்ல அவருக்கு அனுமதி அளித்த நீதிமன்றம், வைகோவின் பாஸ்போர்ட்டைத் திருப்பித் தருமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், ஜூன் 20ம் தேதிக்குள் வைகோ சென்னை திரும்பிவிட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந் நிலையில் உயர் நீதிமன்றத்தில் வைகோவின் சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், ஜூன் 20 ம் தேதி இரவுதான் அமெரிக்காவிலிருந்து நான் கிளம்பவுள்ளேன். எனவே நான் சென்னை வரும் தேதியை ஜூன் 20க்குப் பதில் 22 ஆக மாற்றி அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளார் வைகோ.


Click it and Unblock the Notifications
