ராஜ்யசபா: அன்புமணி, எம்.ஏ.எம். ராமசாமி வேட்புமனு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட மத்திய நலத்துறை அமைச்சரும், பா.ம.க. நிறுவனர் ராமதாசின் மகனுமான டாக்டர் அன்புமணி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அதே போல காங்கிரஸ் சார்பில் சிவகங்கை முன்னால் எம்.பியான சுதர்சன நாச்சியப்பன் போட்டியிடவுள்ளார்.

பிரபல தமிழக தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் கர்நாடகத்தில் இருந்து முன்னாள் பிரதமர் தேவே கெளடாவின் கட்சியின் ஆதரவுடன் ராஜ்யசபாவுக்குப் போட்டியிடுகிறார்.

அதே போல ரிலையன்ஸ் அதிபர் அனில் அம்பானி உத்தரப் பிரதேசத்தில் இருந்து முலாயம் சிங் ஆதரவுடன் போட்டியிடுகிறார்.

பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடுவும் கர்நாடகத்தில் இருந்து போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தமிழகம்:

தமிழகத்தில் இருந்து 6 ராஜ்யசபா எம்.பிக்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். எம்.எல்.ஏக்களின் பலத்தை வைத்து அதிமுக சார்பில் 4 எம்.பிக்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

மீதியுள்ள இரு இடங்களில் ஒன்றை பா.ம.கவுக்குத் தர கடந்த மக்களவைத் தேர்தலின்போதே திமுக உறுதியளித்தது. இதனால் எம்.பியாகமலேயே நேரடியாக அமைச்சர் பதவியைப் பிடித்தார் அன்புமணி.

திமுக-பா.ம.க. எம்எல்ஏக்கள் வாக்களித்தாலே அன்புமணி எம்.பியாகிவிட முடியும். இது தவிர திமுக வசம் மேலும் பல வாக்குகள் (எம்.எல்.ஏக்கள்) உள்ளனர். இவர்களும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் வாக்களித்து இன்னொரு எம்.பியைத் தேர்வு செய்ய முடியும்.

அந்த இடம் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் போட்டியிடுவதற்காக தனது மக்களவைத் தொகுதியை விட்டுத் தந்த சுதர்சன நாச்சியப்பனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

முயன்று தோற்ற பீட்டர், ஜெயந்தி:

முன்னதாக ஜெயந்தி நடராஜனுக்கு அந்தப் பதவியைப் பெற்றுத் தர காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் முயன்றார். திமுக தலைவர் கருணாநிதிக்கு நெருக்கமான எஸ்றா சற்குணம் மூலமாக இந்தப் பதவியைப் பிடிக்க பீட்டர் அல்போன்ஸ் முயன்று பார்த்தார்.

இதற்கிடையே மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலை தமிழகத்தில் இருந்து எம்.பியாக்கலாம் என காங்கிரஸ் மேலிடம் யோசித்து வருவதாக செய்திகள் வந்தன.

ஆனால், மக்களவை சீட்டை விட்டுத் தந்த தனக்கே அந்தப் பதவியைத் தர வேணடும் என மேலிடத்திடம் பேசி இடத்தைப் பிடித்துவிட்டார் சுதர்சன நாச்சியப்பன். இதற்கு சிதம்பரத்தின் பரிந்துரையும் இருந்ததாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ராஜ்யசபா எம்.பி. தேர்தல் வரும் 28ம் தேதி நடக்கவுள்ளது.

இன்று அன்புமணி தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தபோது திமுகவின் சார்பில் ஸ்டாலின், பொன்முடி, மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன் ஆகியோரும் உடனிருந்தனர்.

எம்.ஏ.எம். ராமசாமி:

ஸ்பிக் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களின் அதிபரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிக நெருக்கமானவருமான எம்.ஏ.எம். ராமசாமி இன்று கர்நாடகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருக்கு தேவே கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் ஆதரவு தெரிவித்துள்ளது.

சமாஜ்வாடி சார்பில் அம்பானி:

இதற்கிடையே ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபர் அனில் அம்பானி உத்தரப் பிரதேசத்தில் இருந்து சமாஜ்வாடிக் கட்சியின் சார்பில் ராஜ்யபசாவுக்குப் போட்டியிடுகிறார்.

ஏற்கனவே அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சனையும் ராஜ்யசபாவுக்கு சமாஜ்வாடிக் கட்சி நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அக் கட்சியின் தலைவரும் முதல்வருமான முலாயம் சிங் யாதவின் வலதுகரமான அமர்சிங்குக்கு அமிதாப் மற்றும் ரிலையன்ஸ் குடும்பம் மிக நெருக்கமானது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+