காவிரி: மன்மோகன், தரம்சிங்குக்கு கருணாநிதி கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகளைக் காக்க உடனடியாக தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங், கர்நாடக முதல்வர் தரம்சிங் ஆகியோருக்கு திமுக தலைவர் கருணாநிதி தனித்தனியே கடிதங்கள் எழுதியுள்ளார்.

பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழக காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகளின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இதை கர்நாடக முதல்வரிடம் எடுத்துக் கூறி காவிரியில் உடனடியாக தண்ணீர் திறந்து விட உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

தரம்சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில், கர்நாடகத்தில் தற்போது போதுமான மழை இருப்பதாக அறிகிறேன். கர்நாடக அணைகளிலும் போதிய நீர் இருப்பு உள்ளது. எனவே தயவு செய்து, தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் எனக் கோருகிறேன்.

ஏற்கனவே எங்கள் கூட்டணியின் தலைவர்கள் தங்களை நேரில் சந்தித்து இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக நானும் தனிப்பட்ட முறையில் காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கோரி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

இறுதித் தீர்ப்புக்காக போராட்டம்:

இந் நிலையில் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு விரைவில் அறிவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம் என கருணாநிதி கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், காவிரி நடுவர் மன்றம் தனது இடைக்காலத் தீர்ப்பை மட்டுமே அறிவித்துள்ளது. விரைவில் இறுதித் தீர்ப்பையும் அறிவிக்க வேண்டும்.

நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பை உடனே வெளியிட வேண்டும் என்று கோரி திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி போராட்டத்தில் குதிக்கவும் தயங்காது. போராடும் சூழ்நிலையை தவிர்க்கும் வகையில் மத்திய அரசு நடந்து கொள்ளும் என எதிர்பார்க்கிறோம்.

கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சியில் இருந்தாலும் கூட தண்ணீர் கிடைப்பது கஷ்டம்தான். அங்குள்ள விவசாயிகளின் நிலையை அவர்கள் கூறுகிறார்கள்.

காவிரி டெல்டா விவசாயிகள் என்ற பெயரில் சில விஷமிகள், திமுக உள்ளிட்ட 12 மத்திய அமைச்சர்களும் பதவி விலக வேண்டும் என்று கோரி சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். இதை நான் பொருட்படுத்தவில்லை. காரணம், அவர்கள் விவசாயிகள் அல்ல, விஷமிகள்.

தமிழகத்திற்கு நீர்ப்பாசனத் துறையை ஏன் பெறவில்லை என்று கேட்கிறார்கள். காவிரிப் பிரச்சினையை கையாளும் பொறுப்பு நீர்ப்பாசனத் துறைக்கு உள்ளது. ஒரு வேளை அந்த துறை கர்நாடகத்திற்குக் கொடுக்கப்பட்டிருந்தால் தமிழகத்திற்கு அது ஏற்புடையதாக இருக்காது.

அதேபோல, தமிழகத்திற்குக் கொடுக்கப்பட்டிருந்தால் அது கர்நாடகத்திற்கு ஏற்புடையதாக இருக்காது. அதனால்தான் இரு மாநிலங்களுக்கும் அது கொடுக்கப்படவில்லை என்றார் கருணாநிதி.

காவிரி நடுவர் மன்றம் கடந்த 1989ம் ஆண்டு வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, கருணாநிதியின் வலியுறுத்தலின் பேரில் அமைக்கப்பட்டது.

தமிழகத்திற்கு சாகுபடி காலத்தின்போது205 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் கொடுக்க வேண்டும் என நடுவர் மன்றம் தனது இடைக்காலத் தீர்ப்பில் தெரிவித்துள்ளது. ஆனால் இதை ஒரு ஆண்டு கூட கர்நாடகம் நிறைவேற்றவில்லை என்பதுதான் வேதனையான உண்மை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+