போகிறது பொடா: காலி செய்யும் வேலை தீவிரம்
டெல்லி:
கடும் விமர்சனத்துக்குள்ளான பொடா சட்டத்தை ரத்து செய்வது தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளை மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு தொடங்கியுள்ளது.
பொடா சட்டத்தின் கீழ் 30 சர்வதேச, உள்நாட்டுத் தீவிரவாத அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன. இந் நிலையில் இச் சட்டத்தை நீக்கினால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து வெளியுறவுத்துறை மற்றும் உளவுப் பிரிவுகளின் அதிகாரிகளுடன் உள்துறை அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர்.
அதே போல பொடா ரத்தானால், அந்த வழக்குகளின் நிலைமை என்னவாகும் என்பது குறித்து சட்ட அமைச்சக அதிகாரிகளுடனும் உள்துறை மூத்த அதிகாரிகள் கலந்தாலோசித்து வருகின்றனர்.
கிரிமினல் சட்ட விதிகளை மிகவும் கடுமையாக்கிவிட்டு பொடாவை நீக்கலாம் என்ற முடிவுக்கு உள்துறை வந்துள்ளது. பிற துறைகளின் ஆலோசனைகளையும் பெற்ற பின்னர் இந்த விஷயத்தில் மிக விரைவில் முடிவெடுக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாளை திரும்புகிறார் வைகோ:
இந் நிலையில் பொடா வழக்கில் ஜாமீனில் இருக்கும் வைகோ நாளை அமெரிக்காவில் இருந்து நாடு திரும்புகிறார்.
உயர் நீதிமன்ற அனுமதியோடு, தனது பேத்தியை மகளிடம் விட்டுவிட்டு வர மனைவியோடு கடந்த 4ம் தேதி அமெரிக்கா சென்றார் வைகோ.
டிக்கெட் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கலால், நீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்குள் அங்கிருந்து திரும்ப முடியாத சிக்கல் ஏற்பட்டதால், காலக் கெடுவை நீட்டிக்க அனுமதி கோரிப் பெற்றார் வைகோ.
இதையடுத்து இன்று அதிகாலை சிகாக்கோவில் இருந்து புறப்பட்ட வைகோ நாளை காலை சென்னை வநது சேருகிறார்.












Click it and Unblock the Notifications