முதல் முறையாக லாபம் பார்க்கும் தமிழக பஸ்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கடந்த 18 ஆண்டுகளில் முதல் முறையாக தமிழகத்தில் போக்குவரத்துக் கழகங்கள் லாபத்தில் இயங்க ஆரம்பித்துள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

அதே நேரத்தில் போக்குவரத்துக் கழகங்களுக்கு புதிய ஊழியர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள், இப்போதைக்கு ஊழியர்களுக்கு பதவி உயர்வும் வழங்கப்பட மாட்டாது என்றும் அறிவித்துள்ளார்.

சட்டசபையில், போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் விஸ்வநாதன் பேசுகையில்,

தமிழகத்தில் உள்ள 7 போக்குவரத்துக் கழகங்களும் இப்போது தான் முதல் முறையாக நஷ்டத்தில் இருந்து வெளியேறியுள்ளன. கடந்த 18 ஆண்டுகளில் முதல் முறையாக அவை ரூ. 43 லட்சம் லாபம் ஈட்டியுள்ளன.

இதுவரை அந்தக் கழகங்களால் ஏற்பட்ட ரூ. 2,166.39 கோடி இழப்பும் ஈடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் மட்டும், முறையற்ற நிர்வாகத்தால், போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ. 1,498.20 கோடி நஷ்டம் ஏற்பட்டது.

2001ம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதாவின் அரசு பதவியேற்ற பின்னர் நஷ்டம் குறைக்கப்பட்டது. முதல் ஆண்டில் ரூ. 98 கோடியாக இருந்த நஷ்டம், 2002ம் ஆண்டில் ரூ. 4.21 கோடியாகக் குறைந்தது. இதற்கு முதல்வர் எடுத்த தைரியமான நடவடிக்கைகளே காரணம்.

இந்த ஆண்டில் அந்த நிறுவனங்கள் ரூ. 43 லட்சம் லாபத்தை ஈட்டியுள்ளன. இது சிறிய அளவாக இருக்கலாம், ஆனால், கடந்த 18 ஆண்டுகளில் முதல் முறையாக இந்தக் கழகங்கள் இப்போது தான் லாபத்தைப் பார்த்துள்ளன.

மத்திய அரசு அடிக்கடி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருவதால் கழகங்களுக்கு பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 12 முறை பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. டீசலின் விலை 3 வருடத்தில் ரூ. 6.42 கூடிவிட்டது. இதனால் கழகங்களுக்கு ஏற்பட்ட கூடுதல் செலவு மட்டும் ரூ. 330 கோடியாகும்.

போக்குவரத்துக் கழகங்களில் புதிய ஊழியர்களை நியமிக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை. மேலும், இப்போதைக்கு பதவி உயர்வும் வழங்கப்படாது. போக்குவரத்துக் கழகங்களை தனியார்மயமாக்கும் பிரச்சினை தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தீர்ப்பு வந்தபின் அது குறித்துப் பரிசீலித்து முடிவெடுக்கப்படும்.

2,375 பஸ்களை உடனடியாக மாற்ற வேண்டிய சூழல் நிலவுகிறது. இந்த ஆண்டில் தமிழகப் போக்குவரத்துக் கழக வளர்ச்சி நிதியில் இருந்து கடன் பெற்று 1,325 புதிய பஸ்கள் வாங்கப்படும்.

சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களை இரு வழிப் பாதை மூலம் இணைக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. இதற்காக 7,300 சதுர மீட்டர் நிலத்தை தமிழக அரசு இலவசமாக ரயில்வேக்கு அளிக்கவுள்ளது.

சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் தஞ்சையில் புதிய விமான நிலையம் அமைக்க மத்திய அரசுடன் பேசப்படும். அதே போல மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக்கவும் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்படும்.

அதே போல கோவை விமான நிலையத்துக்காக 45.96 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது என்றார் விஸ்வநாதன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+