ஆப்கானிஸ்தான்: முதன்முறையாக நடக்கும் தேர்தல்
காபூல்:
ஆப்கானிஸ்தானின் வரலாற்றிலேயே முதன்முறையாக ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க இன்று தேர்தல் நடக்கிறது.
அமெரிக்க, பிரிட்டிஷ் கூட்டுப் படைகளின் மிக பலத்த பாதுகாப்போடு இன்று காலை இதற்கான வாக்குப் பதிவு தொடங்கியது.
தலிபான்கள் மற்றும் பின் லேடன் கும்பலிடம் இருந்து ஆப்கானிஸ்தான் விடுவிக்கப்பட்ட பிறகு ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட ஹமீத்கர்சாய், முதன்முறையாக தேர்தலில் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் முகம்மத் பகீமின் ஆதரவாளர் மற்றும் ஒரு பெண் வேட்பாளர் உள்பட 18 பேர்போட்டியிடுகின்றனர்.
ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகள் இப்போதும் பல படைக் கும்பல்களின் கைகளில் இருக்கும் நிலையில் இந்தத் தேர்தல் எந்தஅளவுக்கு மக்களின் உண்மையான அபிலாஷைகளை பிரதிபலிக்கும் என்று தெரியவில்லை.
பல பகுதிகளில் தேர்தல் நடத்துவதே சாத்தியமில்லாத அளவுக்கு பாதுகாப்பு நிலைமை உள்ளது. இதனால் நாட்டின் பல இடங்களில் வாக்குப்பதிவு நடக்கவில்லை. பாதுகாப்பு உள்ள இடங்களில் மட்டுமே தேர்தல் நடக்கிறது.
நாட்டின் மக்கள் தொகையில் சிறிய விகிதமான சுமார் 1.05 கோடி பேர் மட்டுமே தங்களது பெயர்களை தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்துள்ளனர். இவர்களில் மூன்றில் ஒரு பங்கினராவது வாக்களிப்பார்களா என்று தெரியவில்லை.
இது அமெரிக்கா தனது கைக்கூலிகளைத் தேர்வு செய்ய நடத்தும் தேர்தல் என்று கூறியுள்ள தலிபான்களும் அல்-கொய்தாவும் தேர்தலைநடத்த விட மாட்டோம் என மிரட்டியுள்ளன. இதனால் அமெரிக்கா-பிரிட்டன் தலைமையிலான 27,000 நேடோ படையினர், 1 லட்சம்போலீசார் பாதுகாப்புடன் ஐ.நா. சபை இந்தத் தேர்தலை நடத்துகிறது.
நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 5,000 வாக்குச் சாவடிகளில் பெரும்பாலானவற்றுக்கு ஐ.நா. ஹெலிகாப்டர்கள் மூலமாகத் தான்ஓட்டுப் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன. தேர்தல் முடிவுகள் வெளியாக மூன்று நாட்களாகலாம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications