ஜெ. ஒரு பயந்தாங்கொள்ளி: சு.சுவாமி அட்டாக்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா ஒரு பயந்தாங்கொள்ளி என்றும் சாமுண்டீஸ்வரி கோயிலுக்குப் போனாலும் அவர் செய்த பாவம் தீராது என்றும் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறினார்.
இன்று நிருபர்களிடம் அவர் பொளந்து கட்டியதாவது:
தமிழ்நாட்டில் எமர்ஜென்சி இருப்பதாக தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பிக்கள் கூறியிருக்கிறார்கள். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வற்புறுத்தலினால்தான் இந்த கைது நடந்திருக்கிறது என்பதை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்டவர்களிடம் அவர்கள் எடுத்துச் சொல்ல வேண்டும்.
ஜெயலலிதா மீது நிறைய வழக்குகள் உள்ளன. மேலும் வெளிநாட்டிலும் நிறைய பணம் போட்டு வைத்துள்ளார். இதையெல்லாம் சொல்லி மிரட்டித்தான் ஜெயேந்திரர் மீது நடவடிக்கை எடுக்க வைத்துள்ளார் சோனியா. அனைத்து மடங்களையும் சொரூபானந்தா என்ற மடாதிபதியின் தலைமையின் கீழ் கொண்டு வர சோனியா முயற்சிக்கிறார். சொரூபானந்தா ஒரு காங்கிரஸ் அனுதாபி.
ஜெயலலிதா சரியான பயந்தாங்கொள்ளி. சசிகலா அவரை குரங்காட்டி போல் ஆட்டுகிறார். சசிகலாவை கழட்டி விட்டால்தான் ஜெயலலிதாவிடம் நான் பேச முடியும். ஜெயலலிதா கெட்டிக்காரர். அவருக்கு தேச பக்தி உண்டு.
ஜெயேந்திரர் மீதான வழக்கு நிற்காது. உஷா, சொர்ணமால்யா என்று சொல்லிக் கொண்டே போகிறார்கள். ஜெயேந்திரர் மீது ஜெயலலிதா எடுத்த நடவடிக்கை சரியானதல்ல. இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டியதில்லை. அப்புவை தேடப்படும் குற்றவாளி என்று ஏன் அறிவிக்கவில்லை? அவருக்கு மேலிடத் தொடர்புகள் நிறையவே உள்ளது.
முதல்வர் பதவியில் நீடிக்க ஜெயலலிதாவுக்கு எந்த தகுதியும் கிடையாது. ஜெயலலிதா மைசூர் சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டாலும் இந்த பாவத்தை தீர்க்க முடியாது.
ஜெயேந்திரர் கைது இந்து மதத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல். ஜெயலலிதாவுக்கு உண்மையான நண்பன் என்ற முறையில் சொல்கிறேன், ஜெயேந்திரர் மீதான வழக்கை உடனே அவர் வாபஸ் பெற வேண்டும்.
ஜெயலலிதாவுக்கு இரண்டு எஸ்கள் எதிரியாக உள்ளனர். ஒன்று சோனியா, மற்றொன்று சசிகலா. ஒரு எஸ் மட்டுமே நண்பராக உள்ளார். அதுதான் இந்த சுப்பிரமணியம் சுவாமி.
ராஷ்ட்ரீய சுவாபிமான் மன்ஞ் எனப்படும் தேசிய தன்மான இயக்கம் முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ளது. நான் அதன் நிறுவனர்.
இதன் முதல் கூட்டம் வரும் 22ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. 2வது கூட்டம் அடுத்த மாதம் 2வது அல்லது 3வது வாரத்தில் சென்னையில் நடைபெறும். இக் கூட்டத்துக்கு ஆர்.எஸ்.எஸ், விசுவ இந்து பரிஷத் தனது உறுப்பினர்களை அனுப்ப வேண்டும் என்று சும்மா போட்டுத் தாக்கினார் சுப்பிரமணியம் சுவாமி.












Click it and Unblock the Notifications