ஜார்க்கண்ட்: நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவில்லை- 15ம் தேதிக்கு ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

ராஞ்சி & டெல்லி:

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஜார்க்கண்டில் இன்று சிபுசோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா-காங்கிரஸ் கூட்டணிஅரசு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை.

சட்டசபையில் தொடர்ந்து பெரும் அமளி நிலவியதால் அவை 6 முறை ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து கூச்சல்-குழப்பம்நிலவியதால் அவையை 15ம் தேதிக்கு இடைக்கால சபாநாயகர் ஒத்தி வைத்தார்.

81 எம்எல்ஏக்கள் கொண்ட அவையில் இந்தக் கூட்டணியும், பாஜக-ஐக்கிய ஜனதா தளக் கூட்டணியும் தங்களுக்கு 41எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாக கூறுகின்றன.

இன்று சட்டசபை கூடியதும் ஜார்க்கண்ட் முக்தி மோச்சா-காங்கிரஸ் கூட்டணி எம்எல்ஏக்களுக்கும் பாஜக-ஐக்கிய ஜனதா தளக்கூட்டணி எம்எல்ஏக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவையை இடைக்கால சபாநாயகர்பிரதீப் குமார் 6 முறை ஒத்தி வைத்தார்.

முன்னதாக, கடந்த வாரம் சிபுசோரனை முதல்வராகப் பதவியேற்க ஆளுநர் சையத் ராஸி அழைத்ததை எதிர்த்து ஜனாதிபதியிடம்முறையிட்டது பாஜக. இதையடுத்து பெரும்பான்மையை நிரூபிக்க சிபுசோரனுக்குத் தரப்பட்ட காலக்கெடுவை ஒரு வாரம்குறைத்த ஆளுநர், 15ம் தேதி மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட்டார்.

ஆனால், இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பாஜக வழக்குத் தொடர்ந்தது. இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில்,

பெரும்பான்மையை 11ம் தேதியே (இன்று) நிரூபிக்க வேண்டும் எனவும், இன்று சட்டசபையில் நடக்கும் நிகழ்ச்சிகளைமுழுவதும் வீடியோவாக எடுத்து ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

பா.ஜ.க.-ஐக்கிய ஜனதா தளம் 36 இடங்களில் வென்றது. இவர்களோடு மேலும் 5 சுயேச்சைகளின் ஆதரவும் இருப்பதாக பாஜககூறுகிறது. கடந்த ஒரு வாரமாக இந்த 41 எம்எல்ஏக்களையும் புனிதப் பயணம் என்ற பெயரில் தனது ஆட்சி நடக்கும்மாநிலங்களில் போலீஸ் பாதுகாப்புடன் பத்திரமாக வைத்திருந்தது பா.ஜ.க.

நேற்று தான் இந்த எம்எல்ஏக்கள் ஜார்க்கண்ட் கொண்டு வரப்பட்டு சட்டசபையில் பதவியேற்றுக் கொண்டனர்.

ஆனால், 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் தங்களது விருப்பத்தையும் மீறி பாஜகவினரால் கடத்திச் செல்லப்பட்டதாகவும், அவர்கள்தனக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் சிபுசோரன் கூறி வருகிறார்.

இந் நிலையில், பதவியேற்று 9 நாட்கள் ஆன நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இன்று அவர் பெரும்பான்மையைநிரூபித்திருக்க வேண்டும். ஆனால், அவையில் அமளி நிலவியதால் வாக்கெடுப்பை சபாநாயகர் நடத்தவில்லை.

ஜனாதிபதியிடம் முறையீடு:

இதற்கிடையே ஜார்கண்ட் மாநில சட்டசபையை முன்கூட்டியே கூட்டுமாறும், முன் கூட்டியே பெரும்பான்மையை நிரூபிக்குமாறும் உச்ச நீதிமன்றம்பிறப்பித்த உத்தரவு குறித்து ஜனாதிபதியிடம் முறையிட சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இக் கூட்டத்தில் இருந்து பாஜக வெளிநடப்பு செய்துவிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தொடர்பான பிரச்சினை நேற்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. ஜார்கண்ட் பிரச்சினையில் உச்ச நீதிமன்றம்தலையிட்டது பற்றி விவாதிக்க வேண்டும் என்று கம்யூனிஸ்டு உறுப்பினர்கள் கூறினர்.

இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதை தொடர்ந்து மாலையிலேயே அனைத்துக் கட்சி கூட்டத்தை சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி கூட்டினார்.

இக் கூட்டத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு பற்றி ஜனாதிபதியிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கூட்டத்தில் இருந்துபாஜக வெளிநடப்பு செய்தது.

காங்கிரஸ் நிலையில் மாற்றம்:

ஆனால், இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தலைமையில் தேசிய முற்போக்குக் கூட்டணியின் உயர் மட்டக் கூட்டம் நடந்தது. அதில், உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதித்து நடப்பது என்றும், அதை எதிர்த்து ஜனாதிபதியிடம் முறையிடுவதில்லை என்றும் முடிவு செய்யப்பட்டுவிட்டது.

இதன் மூலம் உச்ச நீதிமன்றத்துக்கும், பாராளுமன்றத்திற்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலைதவிர்க்கப்பட்டுள்ளது.

அதே போல பாஜகவும் இன்று உயர் மட்டக் கூட்டத்தைக் கூட்டியது. அதில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதித்து ஜார்க்கண்டில்இன்றே வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கிடையே 4 எம்எல்ஏக்கள் கொண்ட ஜார்க்கண்ட் கட்சியைச் சேர்ந்த ஏக்கா என்ற எம்எல்ஏ தனது கட்சியின் உத்தரவையும்மீறி பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதற்கு அவரது கட்சியின் தலைவர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இதனால் அக் கட்சிஉடையும் சூழல் உருவாகியுள்ளது.

தலைவரின் உத்தரவை எதிர்த்து பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்த ஏக்காவை பதவி நீக்கம் செய்யப் போவதாக இடைக்காலசபாநாயகர் (இவர் சிபு சோரன் ஆதரவாளர்) எச்சரித்துள்ளார்.

இந் நிலையில் சோரனுக்கு ஆதரவு தெரிவித்த பார்வர்ட் பிளாக், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் நேற்றுதிடீரென மாயமாகிவிடடனர். இவர்களை பாஜகவினர் கடத்திவிட்டதாக சிபுசோரன் குற்றம் சாட்டியுள்ளார்.

இந் நிலையில் இன்று வாக்கெடுப்பு நடத்த அவை கூடியபோது பாஜக, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்எல்ஏக்களுக்கு இடையேபெரும் மோதல் மூண்டது. இதனால் அவையை நடத்த முடியாமல் 6 முறை ஒத்தி வைத்தார் சபாநாயகர்.

பின்னர் அவையில் வாக்கெடுப்பு நடத்தாமாலேயே 15ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதன்மூலம் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுமீறப்பட்டுள்ளது.

இதனால் ஜார்க்கண்ட் விஷயத்தில் பெரும் குழப்பமான சூழல் நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+