தர்மபுரி பஸ் எரிப்பு: கதறியழுத பேராசிரியை.. நெஞ்சை உருக்கிய சாட்சியம்
தர்மபுரி:
தர்மபுரியில் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகள் பஸ்ஸோடு சேர்த்து அதிமுகவினரால் மிருகத்தனமாகஎரிக்கப்பட்டது குறித்து பல்கலைக்கழகப் பேராசிரியை லதா கண்ணீர் மல்க, கதறித் துடித்தபடி சாட்சியமளித்தார்.
இநத வழக்கு தொடர்பாக நேற்று தொடங்கிய சாட்சிகள் விசாரணையின்போது, பஸ் மீது பெட்ரோல் ஊற்றியவனையும்பேராசிரியை அடையாளம் காட்டினார்.
கண்கலங்க வைத்த சாட்சியம்:
பேராசிரியை லதா கண்ணீருடன் நீதிமன்றத்தில் அளித்த சாட்சியம் பலரையும் கண்கலங்க வைத்தது. அவர் அளித்த சாட்சிவிவரம்:
ஒவ்வொரு வருடமும் 2ம் ஆண்டு படிக்கும் மாணவ, மாணவிகளை கல்வி சுற்றுலா அழைத்துச் செல்வோம்.
இதே போன்று கடந்த 2000ம் ஆண்டு ஜனவரி 22ம் தேதி முதல் 12 கல்வி சுற்றுலாவுக்கு மாணவ, மாணவிகளை அழைத்துச்சென்றோம். 47 மாணவிகளும், 54 மாணவர்களும் வந்தனர்.. மாணவிகளை டி.என்.38 சி 5550 என்ற எண்ணுள்ள கோவைவேளாண்மைப் பல்கலைக்கழக பஸ்சில் அழைத்துச் சென்றோம்.
02.02.2002 அன்று நாங்கள் ஒகேனக்கல் செல்லத் திட்டமிட்டோம். செல்லும் வழியில் சாப்பிடுவதற்காக தர்மபுரிக்கு சென்றோம்.அங்கு ஒரு ஹோட்டல் அருகே பஸ்சை நிறுத்தியிருந்தோம்.
ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு:
அப்போது எங்களுடன் வந்த மாணவர்கள், கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஜெயில்தண்டனை விதித்துள்ளதாக கூறினார்கள். சிறிது நேரத்தில் அந்த இடத்தில் பெரும் பரபரப்பாக இருந்தது.
பதற்றமடைந்த நான், உடனே மாணவர்களை பஸ்சில் உட்காருங்கள் எனக் கூறிவிட்டு சில பேராசிரியர்களுடன் கோவைவேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் போனில் தகவல் சொல்வதற்காக சென்றோம். ஆனால், அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. இதனால் தனி அதிகாரி சந்திரசேகரனிடம் விவரத்தை சொன்னோம்.
பதற்றம்.. கடைகள் அடைப்பு:
அவர், மாணவர்களை எங்கும் கூட்டிச் செல்லவேண்டாம். ஒரு நாள் கூடுதலாக ஆனாலும் பரவாயில்லை. பாதுகாப்பாகதங்கிவிட்டு வாருங்கள் என்று கூறினார். பின்னர் நாங்கள் மீண்டும் ஹோட்டலுக்கு சென்றோம். ஆனால், அங்கு பஸ் இல்லை.
நாங்கள் சிறிது தூரம் நடந்து சென்றோம். அப்போது கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சிறிது தூரம் சென்றபோது ஒரு பெட்ரோல்பங்க் அருகே எங்களது பஸ் நின்று கொண்டிருந்தது. பஸ்சில் இருந்த மாணவிகள் பதட்டத்துடன் காணப்பட்டனர்.
அதிமுக கொடியுடன் வந்த கலவர கும்பல்:
அப்போது கலவரக் கும்பல் ஒன்று அதிமுக கொடியுடன் கற்களை வீசி சத்தம் போட்டபடியே கடைகளை மூடச் சொன்னார்கள்.மாணவிகள் பயந்து போய் பஸ்சின் ஷட்டர்களை மூடிக் கொண்டனர்.
அந்த நேரம் எங்களது பஸ்சின் பின்னால் வந்த போலீஸ்காரர் ஒருவர் அரூரில் ஒரு பஸ் எரிக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள்செல்வது பாதுகாப்பானதல்ல என்று கூறினார். இதனால் நாங்கள் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் செல்ல முடிவெடுத்தோம்.
அங்கிருந்து சுமார் 3 கி.மீ. சென்றபோது, எங்களுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு கார் பிரச்சினை காரணமாக நின்றது.அந்தக் காரை ஒட்டி எங்களது பஸ்சை நிறுத்தியிருந்தோம்.
பெட்ரோல் ஊற்றிய மிருகம்:
அந்த நேரம் மஞ்சள் நிற பிளாஸ்டிக் கேனுடன் ஒருவர் பஸ்சின் முன்புறத்தில் ஏறி பெட்ரோலை தெளித்தார். அந்த நபர் வெள்ளைவேட்டி சட்டை அணிந்திருந்தார். மாநிறமாக இருந்த அவர், கட்டையாக மீசை வைத்திருந்தார் என்றார் பேராசிரியை லதா.
இவ்வாறு லதா கூறியபோது, அரசுத் தரப்பு வழக்கறிஞர் சீனிவாசன் குற்றவாளிக் கூண்டில் நிற்பவர்களில் அவரை அடையாளம்காட்டமுடியுமா? என்று கேட்டார்.
உடனே பேராசிரியை குற்றவாளிக் கூண்டில் நின்று கொண்டிருந்த 3வது குற்றவாளி ரவீந்திரனை அடையாளம் காட்டினார்.
பேராசிரியையின் கதறல்:
அப்போது பேராசிரியை லதா, கதறி அழுதார். நீதிமன்ற ஹாலில் இருந்த அனைவரையும் அவரது கதறல் நெஞ்சைப் பிசைந்தது.
இதையடுத்து அவருக்கு தண்ணீர் வழங்கப்பட்டது. அதைக் குடித்துவிட்டு தொடர்ந்து வழக்கறிஞர் சீனிவாசனின் கேள்விகளுக்குலதா பதிலளித்த போது, பெட்ரோல் ஊற்றிய நபருடன் வேறொரு நபரும் மஞ்சள் கேனுடன் வந்தார். அவரை எனக்குஅடையாளம் தெரியவில்லை.
கெஞ்சிய மாணவிகள்..
எங்களை ஒன்றும் செய்து விடாதீர்கள்என்று நாங்கள் அவர்களிடம் கெஞ்சினோம். அப்போது சில மாணவிகள் பஸ்சிலிருந்துஇறங்கினார்கள். அந்த நேரம் பெட்ரோல் கேன் வைத்திருந்த ஒருவர், எல்லோரையும் சேர்த்து கொளுத்துங்கடா அப்போது தான்புத்தி வரும் என்றார். இந்த நேரத்தில் பஸ்சின் முன் பின் இருக்கையில் தீப்பிடித்தது.
நான், மாணவிகளுடன் கீழே இறங்கினேன். என்னுடைய சேலையில் தீப் பிடித்துக் கொண்டது. நான் சுதாரித்து வெளியே வந்துவிட்டேன். அதற்குள் பஸ் முழுவதும் தீப் பிடித்துக் கொண்டு கரும்புகையாக காணப்பட்டது.
கருகிக் கிடந்த செல்வங்கள்:
பிறகு மாணவிகளை எண்ணிப் பார்த்தபோது கோகில வாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய 3 மாணவிகளைக் காணவில்லை. அப்போது பஸ் எரிந்து கொண்டிருந்தது.சிறிதுநேரம் கழிந்து பஸ்சுக்குள் ஏறி பார்த்த போது அந்த 3 பேரும் கருகிக் கிடந்தனர் என்று கூறிவிட்டு கதறினார் பேராசிரியை.
காயத்ரி சிவப்பு நிற உடை அணிந்திருந்தார், பாதி எரிந்து போன அவரது உடையை வைத்துத் தான் காயத்ரியை அடையாளம் கண்டோம் என்றார் லதா.
அப்போது எரிந்து போன காயத்ரியின் உடையைக் காட்டிய வழக்கறிஞர் சீனிவாசன், இது தான் காயத்ரி அணிந்திருந்த உடையா என்று கேட்டார்.
அதை கண்ணீருடன் அடையாளம் காட்டினார் பேராசிரியை லதா.
பஸ்சுக்குள் கிடந்த கேமரா:
தொடர்ந்து பேசிய லதா, இந்தச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களைக் கொண்டு கடந்த 2000ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி சேலம் மத்தியசிறையில் அடையாள அணிவகுப்பு நடந்தது. அப்போது இன்று அடையாளம் காட்டிய நபரை (குற்றவாளி ரவீந்திரன்) மூன்று முறை நான் அடையாளம்காட்டினேன்.
இதன் பிறகு எரிக்கப்பட்ட பஸ்சை பேராசிரியை லதா நீதிபதியிடம் அடையாளம் காட்டினார். அப்போது பஸ்சுக்குள் பாதி எரிந்த நிலையில் ஒரு கேமராகிடந்தது. இதைப் பார்த்த நீதிபதி அதை பத்திரமாக எடுத்து வைக்க உத்தரவிட்டார்.
கர்ப்பிணி ஆசிரியை சாட்சியம்:
பேராசிரியை லதாவின் சாட்சி விசாரணைக்குப் பிறகு உதவிப் பேராசிரியை அகிலாவிடம் விசாரணை நடந்தது. இவர் தற்போது கர்ப்பமாக உள்ளதால்நாற்காலி போடப்பட்டது.
அகிலா சாட்சியளிக்கும்போதும், பஸ் மீது பெட்ரோல் ஊற்றிய மிருகமான ரவீந்திரனை அடையாளம் காட்டினார். அப்போது பஸ் எரிக்கப்பட்டநினைவுகளில் மூழ்கிய அகிலாவும் குலுங்கி அழ ஆரம்பித்தார். கர்ப்பிணியான பேராசிரியை அகிலாவின் அழுகை கோர்ட் ஹாலை நிசப்தமாக்கியது.
அவருக்கு தண்ணீர் வழங்க உத்தரவிட்டார் நீதிபதி. நீரை அருந்திய பின் பஸ்சுக்கு தீ வைக்கப்பட்ட நேரம் பகல் 2.20 மணி என்றார்.
இதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட அதிமுகவினர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் லதா மற்றும் அகிலாவிடம் குறுக்கு விசாரணை செய்தனர்.இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதி கிருஷ்ணராஜா, ஏப்ரல் 5ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
கேடிகளும் காக்கிகளும்:
முதல்வர் ஜெயலலிதா மீதான பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் தீர்ப்பு வெளியான கடந்த 02.02.2002 அன்று தமிழகத்தில் அதிமுகவினர் நடத்தியகலவரத்தில் தர்மபுரி அருகே இந்த கோவை வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் சென்ற பஸ் தீ வைக்கப்பட்ட கொடூரம் நினைவிருக்கலாம்.
தீ வைத்த இந்த கேடிகளைக் காப்பாற்ற காக்கிகள் அலைந்ததையும், நீதிமன்றத்தின் கடும் கண்டனத்துக்குப் பிறகு இப்போது மீண்டும் சேலம்நீதிமன்றத்தில் விசாரணை நடப்பதும் குறிப்பிடத்தக்கது.
சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இந்த விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications