காளிமுத்து பதவி விலக வேண்டியதில்லை: ஜெ
சென்னை:
ராபின் மெயின் மோசடி வழக்கு தொடர்பாக சபாநாயகர் காளிமுத்து பதவி விலக தேவையில்லை என்று முதலமைச்சர் ஜெயலலிதா இன்றுசட்டசபையில் கூறினார்.
சபாநாயகராக இருப்பவர் நீதிமன்றத்தில் ஆஜராவது அவையின் மாண்புக்கும் மரியாதைக்கும் உகந்ததாக இருக்காது, எனவே அவர் பதவிவிலக வேண்டும் என எதிர்க் கட்சிகள் கோரி வருகின்றன.
இன்று சட்டசபையிலும் காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் இந்த விவகாரத்தைக் கிளப்பினார்.
அப்போது பேசிய முதல்வர் ஜெயலலிதா,
சபாநாயகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
ஊழல் குற்றம் சாட்டப்பட்ட மத்திய அமைச்சர்களை நீக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூட, குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாதவரை அவர்கள் பதவியில் நீடிக்க எந்தத் தடையும் இல்லை என்றுதீர்ப்பளித்ததுள்ளது.
இதனால் சபாநாயகர் பதவி விலக வேண்டிய அவசியமே இல்லை. ராபின் மெயின் வழக்கில் 1985ம் ஆண்டில் சிபிஐ தனது முதல்அறிக்கையை தாக்கல் செய்தது. நீண்ட இடைவெளிக்குப் பின் 1988ல் ஜனாதிபதி ஆட்சி நடந்தபோது இதில் குற்றப் பத்திரிக்கைதாக்கலானது.
அதில் காளிமுத்து 31வது குற்றவாளியகத் தான் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டாலும் குற்றம்நிரூபிக்கப்படவில்லை. மேலும் இத்தனை ஆண்டுகளாக சிபிஐ ஒரே ஒரு சாட்சியை மட்டுமே விசாரித்துள்ளது.
இது குறித்து அட்வகேட் ஜெனரலிடம் கருத்து கேட்டோம். இந்த வழக்கினால் காளிமுத்துவின் எம்எல்ஏ பதவிக்கு எந்த ஆபத்தும் இல்லை.இதனால், அவர் சபாநாயகராகத் தொடரவும் பிரச்சனையில்லை என்று கருத்து தெரிவித்துள்ளார். இதனால் காளிமுத்து பதவி விலகதேவையில்லை என்றார் ஜெயலலிதா.
பின்னர் காளிமுத்து பேசுகையில், நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை. நான் நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபித்து இந்த அவையின்மாண்பையும் கெளரவத்தையும் காப்பேன் என்றார்.
தொடர்ந்து பேசிய எஸ்.ஆர்.பி, நான் அவையின் மரியாதையைக் காக்க வேண்டும் என்ற ஆதங்கத்திலும், சட்டசபைக்கும் நீதித்துறைக்கும்இடையே பிரச்சனை மூளக் கூடது என்ற நோக்கிலும் தான் பேசுகிறேன். மற்றபடி காளிமுத்துவின் ராஜினாமாவை கோரவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications