• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருக்குறளை தேசிய இலக்கியமாக்க தமிழகம் கோரிக்கை

By Staff
|

சென்னை:

திருக்குறளை நாட்டின் தேசிய இலக்கியமாக அறிவிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் இன்று ஒருமனதாக தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக நேற்று பாமக தலைவர் ஜி.கே.மணி பேசுகையில், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கக் கோரி சட்டசபையில்தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றார்.

ஆனால், ஏற்கனவே இக் கோரிக்கை குறித்து பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதிவிட்டதாக நிதியமைச்சர்பொன்னையன் பதிலளித்தார்.

இந் நிலையில் இன்று சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்தவுடன் ஜெயலலிதா இது தொடர்பாக ஒரு தீர்மானத்தை தாக்கல்செய்துவிட்டு அதை வாசித்தார். அதன் விவரம்:

தெய்வப் புலவர் திருவள்ளுவரால் இயற்றப்பட்ட இறவாத இலக்கியமாகிய திருக்குறள், இந்தியத் திருநாட்டின் தேசியஇலக்கியமாக அறிவிக்கப்பட வேண்டும் என்று இப் பேரவை விழைகின்றனது.

எழிலார்ந்த இலக்கிய வடிவம், ஆழ்ந்த கருத்துக்கள், அறத்தை, நீதியை விளக்கும் அற்புதம், உலகளாவிய பார்வை ஆகியற்றால்உலக இலக்கியத்தில் தன்னேரில்லாத தனி இடத்தைப் பெற்றது திருக்குறள்.

மானுடப் பண்புகளை விளக்கி, மனித குலத்துக்கு மாபெரும் அறநூலாய் விளங்கும் மகத்தான நூல் திருக்குறள். காலத்தை வென்றுநிற்கும் ஞானக் களஞ்சியமாய் ஞாலத்தில் உயர்ந்து நிற்பது திருக்குறள்.

புனித நூலாம் பைபிளுக்கு அடுத்தபடியாக, உலக அளவில் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தனிப் பெரும் சிறப்புதிருக்குறளுக்கே உரியது.

மக்களாட்சித் தத்துவம், அரசியல், ஆட்சியமைப்பு ஆகியவற்றைப் பற்றிய அடிப்படைக் கொள்கையோடு, இந்திய அரசமைப்புச்சட்டத்தில் இடம் பெற்றுள்ள இணையற்ற கோட்பாடுகளாகிய சமயம் சாராத தன்மை, சமூக நீதி ஆகியவற்றைப் பற்றியும், அரியபல கருத்துக்களைத் தன்னகத்தே கொண்ட திருநூல் திருக்குறள்.

தொன்மை வாய்ந்த நமது மரபையும், புதுமை வாய்ந்த குடியாட்சிக் கோட்பாடுகளையும் கொண்டது திருக்குறள் மானுடத்தில்விழுமிய பண்புகளை, அது அறம் சார்ந்ததாயினும் சரி, உலகியல் சார்ந்ததாயினும் சரி, அவற்றை உலகளாவிய அளவில் எடுத்துஇயம்பும் சமயம் சாராத ஓர் உன்னத நூல் திருக்குறளைத் தவிர, வேறு ஒன்று இன்னும் எழுதப்படவில்லை என்பதேஉண்மையாகும்.

சாதி, மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு சகல மனிதருக்கும் பொது நீதியை உரைக்கும் திருமறை திருக்குறளாகும். இந்தியகுடியரசாட்சியின் சமயம் சாராத இயல்புக்கு ஏற்ப ஒரே நூல் திருக்குறள் தான்.

சங்க காலமாகிய கிமு முதல் நூற்றாண்டின் எழுதப்பட்ட தொன்மை வாய்ந்ததாயினும் இன்றைய நவீன குடியாட்சித்தத்துவங்களுக்கு ஏற்ற முறையில் அரசியல் தத்துவத்தை விளக்கும் திருக்குறள், இந்தியத் திருநாட்டின் தேசிய இலக்கியம் என்னும்சிறப்பைப் பெறுவதற்கு முற்றும் தகுதி வாய்ந்தது.

இத்ததைய ஈடு இணையற்ற திருமறையாகிய திருக்குறளை, இந்தியத் திருநாட்டின் தேசிய இலக்கியமாக அறிவிக்க வேண்டும்என்பது இந்தப் பேரவையின் அனைத்து உறுப்பினர்களின் விருப்பமாகும்.

எனவே உலக சிந்தனையின் மணி முடியாகவும், தமிழ் மொழியின் தலையாய அணிகலனாகவும் விளங்கும் வான் புகழ் கொண்டதிருக்குறளை இந்தியத் திருநாட்டின் தேசிய இலக்கியமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

தீர்மானத்தை ஜெயலலிதா படித்த முடித்ததும், இத் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தருமாறு சபாநாயகர் காளிமுத்துகோரிக்கை விடுத்தார். இதையடுத்து இத் தீர்மானம் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவோடு ஒருமனதாக, பலத்த கரவொலிக்குஇடையே நிறைவேறியது.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X