சங் பரிவாருக்குள் மோதல்: குஜராத்தில் பாஜக-விஎச்பி தொண்டர்கள் அடிதடி
டெல்லி:
அத்வானி விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்புக்குள்ளும், ஆர்எஸ்எஸ் மற்றும் விஎச்பிக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. அதே போல விஎச்பிக்கும்பாஜகவுக்கும் இடையிலும் சண்டை மூண்டுள்ளது.
ஜின்னாவைப் புகழ்ந்து பேசிய அத்வானியை மிக மோசமாக விமர்சித்தார் விஎச்பியின் சர்வதேச பொதுச் செயலாளரான பிரவீண் தொகாடியா. வழக்கமாகவே சங்பரிவார் எதிர்ப்பாளர்களை அவர் மிகக் காட்டமாகவே விமர்சிப்பார். ஆனால், அது பாஜகவுக்கு வசதியாக இருந்ததால் அவரை பாஜக தடுத்ததே இல்லை.
அத்வானியை எதிர்க் கட்சியினர் கூட இதுவரை விமர்சித்திராத அளவுக்கு ஜின்னா விஷயத்தில் மிக மோசமாக விமர்சித்துள்ளார் தொகாடியா. ஆனால், அவருக்குஎதிராக சங் பரிவாரில் இருந்தோ, தனது சொந்த கட்சியான பாஜகவில் இருந்தோ எந்தக் குரலும் எழவில்லை.
இதனால் தான் கடுப்பாகிப் போய் தனது பதவியை அத்வானி ராஜினாமா செய்துள்ளார்.
இந் நிலையில் தொகாடியா மீது பாஜக கடும் தாக்குதல் தொடுத்துள்ளது. அதே போல தொகாடியா கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும் எனஆர்எஸ்எஸ்சும் அறிவுறுத்தியுள்ளது.
முதலில் விஎச்பியுடன் சேர்ந்து அத்வானியை ஆர்எஸ்எசும் மிகக் கடுமையாகத் தாக்கியது. ஜின்னா குறித்த கருத்தை அத்வானி வாபஸ் பெற வேண்டும் இல்லாவிட்டால்பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என ஆர்எஸ்எஸ் மூத்த தலைவரான மோகன் பகவத் பாஜக தலைவர்களிடம் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதையடுத்தே அத்வானி ராஜினாமா செய்தார். ஆனால், மோகன் பகவத்தின் கருத்தை ஆர்எஸ்எஸ்சின் பிற மூத்த தலைவர்கள் ஆதரிக்கவில்லை என்று தெரிகிறது.
அத்வானி ராஜினாமாவை விஎச்பி வரவேற்றுள்ள நிலையில், அவர் பதவி விலக வேண்டிய அவசியமில்லை என ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ்கூறியுள்ளார்.
பாஜக தலைவராக யார் இருக்க வேண்டும் என்பதை அந்தக் கட்சி தான் முடிவு செய்ய வேண்டும். அதில் ஆர்எஸ்எஸ் தலையிடாது. அத்வானி போன்ற மூத்ததலைவரை வாய்க்கு வந்தபடி தாக்குவதை தொகாடியா நிறுத்திக் கொள்ள வேண்டும். இது போன்ற பேச்சுக்களை ஆர்எஸ்எஸ் ஒருபோதும் ஏற்காது என்றார்.
இதற்கிடையே வெங்கையா நாயுடு, உமா பாரதி, சுமித்ரா மகாஜன் ஆகியோர் மூலமாக பிரவீண் தொகாடியவைை பாஜகவும் கடுமையாக தாக்கியுள்ளது.
நாயுடு கூறுகையில், தொகாடியாவின் பேச்சை பாஜக மிக வன்மையாக கண்டிக்கிறது. அத்வானி போன்ற மூத்த தலைவரை வாய்க்கு வந்தபடி தொகாடியாதாக்கியிருப்பது ஏற்கத்தக்கதல்ல. அவரை நாங்கள் மிக வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு பேசுவதை அவர் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.
அத்வானியின் தலைமையை பாஜக மிகப் பெருமையோடு ஏற்றுக் கொண்டுள்ளது என்றார்.
அப்போது பிரமோத் மகாஜன், ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், முக்தார் அப்பாஸ் நக்வி, பால் ஆப்தே, சஞ்சய் ஜோஷி ஆகியோரும் உடனிருந்தனர்.
அதே போல குஜராத் மாநில பாஜகவும் விஎச்பிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அம் மாநில பாஜக தலைவர் வஜீவாலா கூறுகையில்,
விஎச்பி என்ற அமைப்பே குஜராத்தில் மட்டும் தான் உள்ளது. இந்த மாநிலத்துக்கு வெளியே விஎச்ப்பிக்கு மக்களிடையே எந்த ஆதரவும் இல்லை. அகமதாபாத்நகருக்கு வெளியே விஎச்பி சொல்வதைக் கேட்கக் கூட ஆள் கிடையாது. அதை விஎச்பி முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
தனது உண்மையான செல்வாக்கு என்ன என்பதை முதலில் உணர்ந்து கொண்டு விஎச்பி நடந்து கொள்ள வேண்டும் என்றார்.
இதற்கிடையே அத்வானியின் ராஜினாமாவை பட்டாசு வெடித்துக் கொண்டாடிய விஎச்பி தொண்டர்களுக்கும் பாஜக தொண்டர்களுக்கும் இடையே குஜராத்தில் அடிதடிமோதல் ஏற்பட்டது.
அகமதாபாத்தில் விஎச்பியினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த பாஜக தொண்டர்கள் அவர்களைத் தாக்கினர். இதையடுத்து இருதரப்பினரும் பயங்கர அடிதடியில் இறங்கினர். அதே போல சூரத் நகரிலும் இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர்.
இதற்கிடையே அத்வானியின் ராஜினாமா குறித்து குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறார்.












Click it and Unblock the Notifications