நுழைவுத் தேர்வு குழப்பம்: கருணாநிதி ஆதங்கம்
சென்னை:
நுழைவுத் தேர்வு, இம்ப்ரூவ்மென்ட் தேர்வு ரத்து முடிவுகளை அரசு முன்பே எடுத்து மாணவர்களை குழப்பாமல் இருந்திருக்கலாம் என்று திமுக தலைவர் கருணாநிதிகூறியுள்ளார்.
நுழைவுத் தேர்வு ரத்தை எதிர்த்து மாணவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளது குறித்து கருணாநிதி கருத்து தெரிவிக்கையில், நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்என்பது தான் மாணவர்கள் மீது நல்லெண்ணம் கொண்ட அனைத்துத் தரப்பினரின் விருப்பம் ஆகும். ஆனால் அந்த அறிவிப்பை எப்போது செய்திருக்க வேண்டும்?
இந்த ஆண்டுக்கான பொறியியல், மருத்துவ படிப்பு படிக்க மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பே, நுழைவுத் தேர்வுக்காக மாணவர்கள் தயாராகும் முன்பே,இந்த அறிவிப்பினை செய்திருக்க வேண்டும்.
நுழைவுத் தேர்வை நடத்தி முடித்து, அந்தத் தேர்வுக்காக மாணவர்கள் ஆயிரக்கணக்கில் செலவு செய்து, கடும் பயிற்சி எடுத்து, அல்லும் பகலும் உழைத்து தேர்வைஎழுதி முடித்து, தேர்வு முடிவுகளும் வெளியாகிய பின்னர் நுழைவுத் தேர்வு ரத்து என்றால் அதனால் எத்தனை பேருக்கு பாதகம் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டாமா?
சில மாதங்களில் சட்டமன்ற பொதுத் தேர்தல் வரப் போகிறது என்பதற்காக இப்படியொரு முடிவை அறிவித்தால் மாணவர்கள் கோர்ட்டுக்குப் போகாமல் என்னசெய்வார்கள்?
நுழைவுத் தேர்வு, இம்ப்ரூவ்மென்ட் தேர்வு ரத்து என்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாக இருந்தபோதிலும், இந்த அரசின் செயலால் ஏற்பட்டுள்ள குழப்பங்களால்மாணவர்கள் கண்ணீர் சிந்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் கருணாநிதி.
இதற்கிடையே வேலைநீக்கம் செய்யப்பட்ட 10,000 சாலைப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை தரக் கோரி இன்று மாவட்ட தலைநகரங்களில், ஆட்சித் தலைவர் அலுவலங்கள் முன் திமுக கூட்டணிசார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்தில் திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்,பாமக தலைவர் ஜி.கே.மணி, மார்க்சிஸ்ட் செயலாளர் வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் நல்லகண்ணு, இந்திய தேசிய லீக் தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது ஆற்காடு வீராசாமி பேசுகையில், பணி நீக்கம் செய்யப்பட்ட 10,000 சாலைப் பணியாளர்களுக்கும் உடனடியாக வேலை தர வேண்டும், நியாய விலைக் கடைகளில் கிலோ அரிசி 2ரூபாய்க்கு விநியோகிக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் குறித்து கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்என்றார்.
கோவையில் மாவட்ட திமுக செயலாளர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமையிலும், திருச்சியில் மாவட்ட செயலாளர் கே.என்.நேரு தலைமையிலும், மதுரையில், மாநகர மாவட்ட செயலாளர் வேலுச்சாமிதலைமையிலும் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்தப் போராட்டங்களில் மதிமுகவைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் யாரும் கலந்து கொள்ளாதது தொண்டர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்தப் போராட்டம் தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி பலமுறை அறிக்கையும் விடுத்திருந்தார். அதில் சாலைப் பணியாளர்களுக்காக இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாகக் கூறியிருந்தார். இந்நிலையில் சாலைப் பணியாளர்கள் சங்கங்களுக்கிடையே பிளவு ஏற்பட்டது.
ஒரு பிரிவினர் முதல்வரை மட்டுமே நம்பியுள்ளோம். இதில் அரசியல்வாதிகள் புக வாய்ப்பு கொடுக்க மாட்டோம் என்று கூறியுள்ளனர். ஒரு தரப்பினர் திமுக நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவுதெரிவித்துள்ளனர்.
போராட்டத்தை சீர் குலைக்கவே, ஆளுங்கட்சியினர், சாலைப் பணியாளர் சங்கங்களில் பிளவை ஏற்படுத்தி உள்ளதாக திமுக ஆதரவு சங்கம் புகார் கூறியுள்ளது. இந் நிலையில் திமுக போராட்டத்தின் நிலையில்மாற்றம் ஏற்பட்டது. நேற்று கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில்,
இந்தப் போராட்டம் சாலைப் பணியாளர்களுக்காக மட்டும் அல்ல. பொது விநியோகம் மூலம் கிலோ அரிசி ரூ. 2க்கு தர வேண்டும், பொது விநியோகக் கடைகள் மூலம் அனைத்து அத்தியாவசியப்பொருட்களும் கிடைக்க வேண்டும் என்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தியும் தான் இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாக அவர் கூறியிருந்தார்.
போலி வாக்காளர்கள்:
இதற்கிடையே திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டமன்றத் தொகுதி வாரியாக வாக்காளர் பட்டியலை சரி பார்த்து அதை சுட்டிக் காட்டும் உரிமையை அரசியல்கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.
கடந்த சில நாட்களாக இந்தப் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதை திறம்பட நிறைவேற்ற வேண்டிய கடமை திமுகவுக்கும், திமுக கூட்டணியைச் சேர்ந்த தோழர்களுக்கும் உள்ளது.
இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள மாவட்டச் செயலாளர்களுடனும், தலைமைக் கழக பிரதிநிதிகளுடனும் கழகத்தின் ஒன்றியச் செயலாளர்களும், நகர, பேரூர், கிளைச் செயலாளர்களும் தீவிரமாகஒத்துழைத்திட வேண்டும்.
இந்த நாட்களில், அவரவர் தம் வட்டாரத்தில் இருந்து ஒத்துழைப்பு அளிக்கவியலாத அமைப்பின் செயலாளர்கள் குறித்து மாவட்டச் செயலாளர்கள் உடனடியாக தெரிவித்தால், அத்தககையவர்கள் மீதுதலைமைக் கழகம் உடனடியாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என்று கூறியுள்ளார் அன்பழகன்.
போலி வாக்காளர் சரிபார்ப்புப் பணியில் கூட்டணியினர் முழு வீச்சில் ஈடுபடுவதாக திமுக கூறினாலும் கூட அந்தக் கட்சியினரைத் தவிர மற்ற கூட்டணிக் கட்சியினர் பெரிய அளவில் ஈடுபாடுகாட்டுவதாகத் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications