சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ: 2 பெட்டிகள் சாம்பல்- தற்கொலை முயற்சியால் விபத்து
கோயம்புத்தூர்:
சென்னையிலிருந்து கோவை சென்ற சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் 2 பெட்டிகள்முழுவதுமாக எரிந்து சாம்பலாயின. இந்த விபத்தில் ஒரு பயணி பலியானார். சபாநாயகர் காளிமுத்து உள்பட ஆயிரத்துக்கும்மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பலியான பயணி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதால் தான் ரயிலில் தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நேற்று (திங்கள்கிழமை) இரவு சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் கோவை கிளம்பியது.இன்று அதிகாலை 5.40 மணியளவில் கோவைக்கு 12 கிலோ மீட்டர் முன்பாக உள்ள இருகூர் என்ற இடத்தை ரயில் நெருங்கிக்கொண்டிருந்தது.
கழிப்பறையில் தீ:
அப்போது அன்-ரிசர்வ்ட் பயணிகள் பெட்டியில் கழிப்பறையில் திடீரென தீப் பிடித்துக் கொண்டது. தீ வேகமாக வெளியிலும்பரவியது. இதனால் பயணிகள் பீதியில் அலறினர்.
இந்தப் பெட்டிக்கு அடுத்து ரயிலை பழுபார்க்கும் பிரேக் வேன் பெட்டி இணைக்கப்பட்டிருந்தது. அந்தப் பெட்டிக்கும் தீ பரவஆரம்பித்தது. இதையடுத்து பிரேக் வேன் பெட்டியில் இருந்த ரயிலின் கார்ட் அருணகிரிசாமி, உடனடியாக ரயிலின்டிரைவருக்குத் தகவல் தந்தார்.
இதைத் தொடர்ந்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. எரிந்து கொண்டிருந்த பெட்டியில் இருந்து பயணிகள் அனைவரும்கீழே குதித்து தப்பினர்.
கரிக்கட்டையாக கிடந்த உடல்:
ஆனால் கழிப்பறையில் ஒரு பயணி உயிருடன் எரிந்து சாம்பலாகிவிட்டார். அவரது உடல் கரிக்கட்டையாகக் கிடந்தது.கழிப்பறைக்குள் சிக்கி இறந்தவர் ஆணா, பெண்ணா என்பது தெரியவில்லை. அடையாளம் காண முடியாத அளவுக்கு அவரதுஉடல் கருகிவிட்டது.
ரயிலின் டிரைவர் நரசிம்மன், டிக்கெட் பரிசோதகர்களான சந்திரன், விஜய சண்முகம், மகேந்திரன், மோகன் ஆகியோர் மிகவேகமாக செயல்பட்டு தீப்பிடித்த ரயிலின் பெட்டியையும் அதையடுத்து இருந்த பிரேக் வேன் பெட்டியையும் ரயிலின் பிறபெட்டிகளில் இருந்து பிரித்தனர்.
தீயில் எரிந்த பெட்டியில் இருந்து ரயிலை தூரமாக டிரைவர் ஓட்டிச் சென்றார். இதனால் ரயில் முழுவதும் தீ பரவாமல்தடுக்கப்பட்டது. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பியுள்ளனர்.
பிரிக்க்பபட்ட சிறிது நேரத்திலேயே இரண்டு ரயில் பெட்டிகளும் முழுவதுமாக எரிந்து சாம்பலாகிவிட்டன.
உயிர் தப்பிய பயணிகள்:
ரயில் கோவையை நெருங்கிக் கொண்டிருந்ததால் தூங்கிக் கொண்டிருந்த பெரும்பாலான பயணிகள் எழுந்து விட்டனர். தீப்பிடித்த பெட்டியில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட அந்தப் பயணிகள் ரயிலில் இருந்து குதித்து காயமின்றி தப்பிவிட்டனர்.
பயணிள் முழித்துக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாலும், டிரைவரும் கார்டும் டிக்கெட் பரிசோதர்களும் மிகசமயோஜிதமாகவும் புத்திசாலித்தனமாகவும் செயல்பட்டு ரயிலை உடனே நிறுத்தி பெட்டிகளைப் பிரித்ததாலும் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் அந்த ரயில் கோவை ரயில் நிலையத்தைவந்தடைந்தது.
இச் சம்பவம் குறித்து உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மூத்த ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்தில்குவிந்துள்ளனர்.
தற்கொலையா?:
இதற்கிடையே ரயிலின் கழிப்பறைக்குள் கருகிக் கிடந்த இருந்த நபர் தனது உடலில் தானே மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்துக் கொண்டதாகவும், அதனால் தான் ரயிலில் தீப் பிடித்ததாகவும் கூறப்படுகிறது. அவர் எரிந்து கிடந்த இடத்தில்மண்ணெண்ணெய் வாசனை வீசுவதாகத் தெரிகிறது.
மேலும் அவர் கிடந்த கழிப்பறைப் பகுதியில் மண்ணெண்ணெய் கொட்டப்பட்டதற்கான தடயம் சிக்கியுள்ளதாகவும் தெரிகிறது.
இதையடுத்து அந்தக் கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. ரயிலுக்கு தீ வைப்பதற்காகவே அவர் தீ வைத்துக்கொண்டாரா? அவர் தற்கொலைப் படை தீவிரவாதியா என்றரீதியிலும் விசாரணை நடக்கிறது.
அதே நேரத்தில் அன்-ரிசவ்ட் பெட்டியில் ரயிலில் கூட்டம் அதிகமிருந்தால் பயணிகள் தங்களது பெட்டிகளை கழிப்பறைக்குள்கூட வைப்பது வழக்கம். இதனால் யாரோ ஒருவர் மண்ணெண்ணெயை அங்கு வைத்திருக்க வேண்டும். இந் நிலையில்கழிப்பறைக்குள் சென்றவர் சிகரெட் பற்ற வைத்துவிட்டு குச்சியைத் தூக்கிப் போட்டதில் எண்ணெய் பற்றியிருக்கலாம் என்றும்ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர்.
ரயிலில் தீப்பிடித்தது அறிந்ததும் கோவையில் இருந்து தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன. 6.45 மணிக்கு தீஅணைக்கப்பட்டது. ஆனால், அதற்குள் பெட்டிகள் எரிந்து உருக்குலைந்து போய்விட்டன.
தப்பிய காளிமுத்து:
கோவை விவசாயப் பல்கலைக்கழக விழாவில் பங்கேற்பதற்காக சபாநாயகர் காளிமுத்து அந்த ரயிலில் சென்று கொண்டிருந்தார்என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்தால் கோவை மார்க்கத்தில் அனைத்து ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications