காஞ்சிபுரம், திருவள்ளூரில் ஏரிகள் உடைந்தன
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஏரிகள் உடைந்தன.
வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்படதமிழகம் முழவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக அனைத்து ஏரி, குளங்களும் நிரம்பி வழிகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 950ஏரிகள் உள்ளன. இதில் 357 ஏரிகள் நிரம்பி விட்டன. 200 ஏரிகள் நிரம்பும் நிலையில் உள்ளன. மற்ற ஏரிகளில்முக்கால்வாசிக்கு தண்ணீர் உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்போரூரை அடுத்துள்ள தண்டலம் ஏரி மட்டும் உடைந்தது. உடனடியாக ஏரிஉடைப்பு அடைக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரி-குளங்களில் இருக்கும் மதகுகளில் 148 இடங்களில் பழுது ஏற்பட்டிருந்தது.இதனால் நீர் கசிவு ஏற்பட்டது. அந்த மதகுகளும் உடனடியாக பழுது பார்க்கப்பட்டன.
வேலூர் மாவட்டத்தில் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த ஆற்றில் வரும் தண்ணீர்ராணிப்பேட்டை உள்பட பல பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
அதனால் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகளும் நிரம்பி வழிகின்றன.
கம்பங் கால்வாய் தண்ணீர், தாமல் ஏரிக்கும், ஸ்ரீபெரும்புதூர் ஏரிக்கும் திருப்பி விடப்பட்டுள்ளன. இதனால்ஸ்ரீபெரும்புதூர் ஏரி வேகமாக நிரம்பி வழிகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால், ஏரிப் பகுதி அருகே வசிக்கும் 8,000 குடும்பங்கள் வீடுகளைஇழந்து தவிக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் சோளிங்கநல்லூர், ஈஞ்சம் பாக்கம், பெரும்பாக்கம், பள்ளிக்கரணை,நந்தம்பாக்கம், செம்பாக்கம், பொழிச்சலூர் உள்பட 9 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரண உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.
பல்லாவரம் மற்றும் ஆலந்தூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் கடும் மழையால் பாதிக்கப்பட்டனர்.பல்லாவரத்தில் 404 குடும்பங்கள், புனித தோமையர் மலை ஊராட்சி ஒன்றியத்தில் 211 குடும்பங்கள்பாதிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் பா. வளர்மதி, கலெக்டர் ஆர்.வெங்கடேசன் ஆகியோர் நேரில் பார்த்துஅவர்களுக்கு ஆறுதல் கூறினர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.2000 க்கான வங்கி வரைவோலை, 10கிலோ அரிசி, 1 லிட்டர் மண்ணெண்ணெய் மற்றும் வேட்டி-சேலைகளை அமைச்சர் பா.வளர்மதி வழங்கினார்.
நங்கநல்லூர் குளம் நிரம்பி வழிவதால் வழிந்தோடும் நீரை திருப்பி விட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைஎடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
காஞ்சி மாவட்டத்தில் மிக அதிகபட்சமாக தாம்பரத்தில் 4800 பேர் பாதிப்புக்குள்ளானார்கள். ஸ்ரீபெரும்புதூரில்3,000 பேர் பலத்த மழையால் பாதிக்கப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 1635 ஏரி, குளங்கள் உள்ளன. இதில் 598 ஏரிகள் பொதுப்பணித்துறைகட்டுப்பாட்டில் இருக்கிறது. இவற்றில் 548 ஏரிகள் நிரம்பி வழிகின்றன.
செங்கல்பட்டு அருகே உள்ள குண்டூர் ஏரி நிரம்பி வழிகிறது. ஏரிக்கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால்செங்கல்பட்டு நகருக்குள் தண்ணீர் புகுந்தது.
ராமகிருஷ்ணா பள்ளி, வேதாசலம் நகர், கோகுலபுரம், குண்டூர் ஆகிய இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது.
செங்கல்பட்டு முத்துமாரியம்மன் கோவில் குளம் நிரம்பி உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தேசியநெடுஞ்சாலையில் ஆறு போல் தண்ணீர் ஓடுகிறது.
இதே போல் செங்கல்பட்டை ஒட்டியுள்ள வல்லம் ஏரி நிரம்பியதால் தண்ணீர் அதிக அளவு வெளியேறுகிறது. இந்தஏரியிலும் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே ஏரி, குளங்களில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்ய அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறார்கள்.












Click it and Unblock the Notifications