பலத்த பாதுகாப்புடன் கூடியது சென்னை மாநகராட்சி: கராத்தே ஆதரவு கவுன்சிலர் கைது
சென்னை:
![]() |
| குவிக்கப்பட்டிருந்த போலீஸ் |
மேயரும் இல்லாமல், துணை மேயரும் தலைமறைவாக உள்ள நிலையில் தலையில்லா முண்டமாக உள்ள சென்னைமாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் இன்று பெரும் பரபரப்புக்கிடையே கூடியது.
3 மாதத்துக்கு ஒரு முறை மாமன்றக் கூட்டம் நடந்தாக வேண்டும் என்ற கட்டாய நிலையில் இன்று வேறு வழியின்றி இக்கூட்டத்தைக் கூட்டியது தமிழக அரசு. துணை மேயர் காணாமல் போய்விட்ட நிலையில் மாநகராட்சியின் ஆணையர் விஜய்குமார்தான் இக் கூட்டத்தைக் கூட்டினார்.
இந்தக் கூட்டத்தை இன்று கூட்டக் கூடாது, 28ம் தேதி தான் கூட்ட வேண்டும் என்று உத்தரவிட்டு தலைமறைவு கராத்தே அனுப்பியகடிதத்தை அரசு கண்டுகொள்ளவில்லை. மேலும் இன்றைய கூட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி அதிமுகவில் இருந்துநீக்கப்பட்ட கவுன்சிலரான பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவையும் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துவிட்டது.
இந் நிலையில் மிகவும் பரபரப்பான சூழலில் மாநகராட்சிக் கூட்டம் இன்று காலை 10 மணிக்குக் கூடியது. அப்போது புதியதலைவரைத் தேர்ந்தெடுத்து அவையை நடத்துமாறு மன்றத்தின் அதிமுக தலைவர் சுகுமார் பாபுவை ஆணையர் விஜய்குமார்கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து கவுன்சிலர் விஜயராம கிருஷ்ணன் தலைமையில் கூட்டத்தை நடத்த சுகுமார் பாபு தீர்மானம் கொண்டு வந்தார்.அப்போது எதிர்க் கட்சி கவுன்சிலர்கள் அவைக்கு வரவில்லை. இந் நிலையில் தீர்மானத்தை அதிமுக கவுன்சிலர்கள் ஏக மனதாகஏற்றுக் கொண்டு நிறைவேற்றினர்.
இதைத் தொடர்ந்து விஜயராம கிருஷ்ணன் மன்றத் தலைவராகப் பதவியேற்றுக் கொண்டார். பின்னர் மறைந்த ஜனாதிபதி கே.ஆர்.நாராயணுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது எதிர்க் கட்சியினரும் அவையில் வந்து நாராயணனுக்கு அஞ்சலிசெலுத்தினர்.
தலைமை வகித்த விஜயராம கிருஷ்ணன் கூறுகையில், பழமை வாய்ந்த இந்த மாமன்றக் கூட்டத்துக்கு தலைமை வகிக்கும்பொறுப்பை வழங்கிய முதல்வருக்கு நன்றி. இதய சுத்தத்தோடு தலைமைக்கு விசுவாசமாக செயல்படுவேன். தனிநபர் விமக்சனம்இல்லாமல் பிரச்சனைகளை மட்டும் பேசுமாறு உறுப்பினர்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
![]() |
| விஜயராம கிருஷ்ணன் |
இதையடுத்து எதிர்க் கட்சித் தலைவரான மலையன் (திமுக) எழுந்து பேசினார். அவர் கூறுகையில்,
வரலாற்றுச் சிறப்பு மிக்க மேயர் இருக்கையில் அமர்ந்திருக்கிறீர்கள். இதனால் அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும்.சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் முழுமையாக நடக்கவில்லை. எதிர்க் கட்சியினரின்வார்டுகளை மாநகராட்சியும் வருவாய்த்துறையும் புறக்கணித்துவிட்டன. வெள்ளச் சேதம் குறித்து இன்று விவாதிக்க வேண்டும்என்றார்.
அப்போது குறுக்கிட்ட அதிமுக கவுன்சிலர் சேகர் பாபு, இதை ஜீரோ அவரில் விவாதிக்கலாம் என்றார். அதை திமுக கவுன்சிலர்கள்ஏற்காததால் பெரும் கூச்சல் நிலவியது.
இதையடுத்துப் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ராயபுரம் மனோ, மூன்று நாள் மழையில் சென்னை நகரமே மயானநகரமாகிவிட்டது என்றார்.
அப்போதும் குறுக்கிட்ட சேகர் பாபு, தமிழக அரசு மிகச் சிறப்பான முறையில் நிவாரணப் பணிகளை செய்து வருகிறது. மத்திய அரசுதான் மாற்றான்தாய் மனப்பான்மையோடு நடக்கிறது. மயான நகரம் என்று ராயபுரம் மனோ பேசியதை அவைக் குறிப்பில் இருந்துநீக்க வேண்டும் என்றார்.
அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் கவுன்சிலர்கள், மாற்றான்தான் மனப்பான்மையோடு மத்திய அரசு நடப்பதாக சொல்வதைஅவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றனர்.
இதையடுத்து ஆளும், எதிர் தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் மூண்டது. இதனால் பெரும் கூச்சலும் குழப்பமும் நிலவியது.
இதைத் தொடர்ந்து திமுக உறுப்பினர் கல்யாண சுந்தரம் பேசுகையில், தனிப்பட்டவர்களை விமர்சனம் செய்யாமல் பேசச்சொல்கிறீர்கள். முன்பு அது போல விமர்சித்து அவர்கள் (அதிமுகவினர்) பேசியிருக்கிறார்கள். அதையெல்லாம் நீக்குவீர்களா என்றுகேட்டார். இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து அமளி செய்தனர்.பின்னர் ராயபுரம் மனோ பேசுகையில், முதல்வர் படத்தில் வரும் ஒருநாள் முதவ்வர் மாதிரி இந்தப் பொறுப்பில்அமர்ந்திருக்கிறீர்கள். நன்றாக செயல்பட்டு எல்லோர் நம்பிக்கையையும் நீங்கள் (விஜயராம கிருஷ்ணன்) பெற வேண்டும்என்றார்.
முன்னதாக இந்தக் கூட்டத்துக்கு கராத்தே தியாகராஜன் வரக் கூடும் என அவரது ஆதரவாளர்கள் தகவல் பரப்பியதால் அவரைப்பிடிக்க ஏகப்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
மேலும் கூட்டத்தைக் குலைக்க கராத்தே தரப்பு ஏதாவது கசமுசா செய்யலாம் என்றும், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள்களேபரம் செய்யலாம் என்றும் எதிர்பார்த்த அரசு, மாநகராட்சியில் போலீஸ் படையைக் குவித்திருந்தது.
சென்னை மாநகராட்சியின் வரலாற்றிலேயே மேயரும், துணை மேயரும் இல்லாமல் கூட்டம் நடந்தது இதுவே முதல் முறையாகும்.
கவுன்சிலர் பன்னீர் கைது:
இந் நிலையில் கராத்தேவின் ஆதரவாளரான கவுன்சிலர் பன்னீர்செல்வத்தை ஒரு அடிதடி வழக்கில் போலீசார் இன்று காலைதிடீரென கைது செய்தனர்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கவுன்சிலரான இவர் தான் மாநகராட்சிக் கூட்டத்தைக் கூட்ட எதிர்ப்புத் தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது வார்டை அரசு கண்டுகொள்ளவில்லை என்று கூறிதீக்குளிக்க முயற்சி செய்து பரபரப்பை ஏற்படுத்தியவர் இவர்.
ஓட்டேரியில் அதிமுக வட்டச் செயலாளர் நவமணி என்பவரைத் தாக்கியதாக பன்னீரை போலீசார் கைது செய்துள்ளனர். தனதுவழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யவும், கூட்டம்நடப்பதற்கு தடை வாங்கவும் அவர் திட்டமிட்டிருந்தார்.
அதற்குள் அடிதடி கேசில் அவரை அமுக்கிப் போட்டுவிட்டது போலீஸ்.














Click it and Unblock the Notifications