வைகை, தாமிரபரணி ஆறுகளில் பெரும் வெள்ளம்
மதுரை:
தென் மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து முக்கிய அணைகள் அனைத்தும் நிரம்பி வருவதால் வைகை, அமராவதி,கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வட தமிழகத்தை மிரட்டி வந்த ஃபனூஸ் புயல் வேதாரண்யம் அருகே கரையைக் கடந்து விட்டது. இருப்பினும் இது குறைந்தகாற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வங்கக் கடலில் பரவி நிற்கிறது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாககன மழை பெய்து வருகிறது.குறிப்பாக நெல்லை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திண்டுக்கல், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் கன மழைபெய்துள்ளது. இதன் காரணமாக இந்த மாவட்டங்களில் உள்ள முக்கிய அணைகள் மீண்டும் நிரம்பத் தொடங்கியுள்ளன.
வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் 5 மாவட்டங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தஅணையின் நீர் மட்டம் 69.9 அடியாக உயர்ந்து விட்டது. அணைக்கு வினாடிக்கு 8,514 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
இதனால் அணையிலிருந்து வினாடிக்கு 7,100 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஆற்றை ஒட்டியபகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆற்றில் அபாய அளவுக்கு தண்ணீர் பாய்ந்து வருகிறது. இதனால் ஆற்றின் குறுக்கே உள்ள தரைப் பாலங்கள் அனைத்தும் மீண்டும்மூழ்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆற்றை ஒட்டிய பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்து வெள்ளக் காடாக மாறவும் வாய்ப்புஏற்பட்டுள்ளது.
உசிலம்பட்டி அருகே மிகப் பெரிய கண்மாயும் உடைந்து அந்த நீரும் வைகையாற்றில் கலந்து காட்டாற்று வெள்ளமாகஉருவெடுத்துள்ளது. மேலும் சுருளி, வருசநாடு ஆகிய பகுதிகளில் விடிய விடிய மழை பெய்து அந்த நீரும் வைகையில்கலக்கிறது.
பெரியாறு அணைக்கும் நீர் வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது.
தாமிரபரணியில் வெள்ளம்:
இதே போல திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் பெய்து வரும் கன மழையால் பாபநாசம் அணையில் நீர் மட்டம் மிக வேகமாகஉயர்ந்து வருகிறது. மணித்தாறு, சேர்வலாறு ஆகிய அணைகளும் நிரம்பி வருகின்றன.
இதனால் தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 21,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில்வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
குற்றாலம் சென்பகாதேவி அருவியில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டு நீர் சன்னதி பஜார் தெருவுக்குள் புகுந்தது. இதனால்பல கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
களக்காடு அருகே சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் பஸ் நிறுத்தத்தை அடித்துச் சென்றது. அந்த நிறுத்தத்தில் காத்திருந்தஇருவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
குமரி:
குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையின் நீர் இருப்பு 43 அடியாக உயர்ந்துள்ளது. பெருஞ்சாணி நீர்மட்டம் 71 அடியாகஉயர்ந்துள்ளது. இதன் காரணமாக இந்த அணைகளின் பாசனப் பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக அமராவதி ஆற்றில் வினாடிக்கு 35,000 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது. இதன் காரணமாக இந்த ஆற்றில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
திருச்சி:
இதேபோல குடகனாறு உள்ளிட்ட ஆறுகளில் வினாடிக்கு 40,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டு அந்த நீர் காவிரியில்கலக்கிறது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி இந்த நீர் கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்பட்டுள்ளது. இதன் காரணமாககொள்ளிடம் ஆற்றங்கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications