குடும்பத்தோடு முன் ஜாமீன் கோரும் ஏசிஎஸ்
சென்னை:
விடுதியில் தங்கியிருந்த மாணவ, மாணவிகள் வெள்ளத்தில் தத்தளித்தபோது அவர்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்காததுதொடர்பாக போடப்பட்டுள்ள வழக்கில் முன் ஜாமீன் கேட்டு ஏ.சி.சண்முகத்தின் குடும்பத்தினர் உயர் நீதிமன்றத்தில் மனுசெய்துள்ளனர்.
சென்னையில் சில வாரங்களுக்கு முன்பு பெய்த கன மழை காரணமாக கூவம் ஆற்றில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.ஆற்றை ஆக்கிரமித்து ஏ.சி.சண்முகம் கட்டியுள்ள எம்.ஜி.ஆர். பொறியியல் கல்லூரி விடுதிகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது.திடீரென்று ஏற்பட்ட வெள்ள நீரில் 400 மாணவ, மாணவிகள் சிக்கித் தவித்தனர். அவர்களில் சிலருக்கு காயம் ஏற்பட்டது.ஆனால் அவர்களைக் காப்பாற்ற கல்லூரி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து மாணவிகள் சிலர் செல்போன் மூலம் மாவட்ட கலெக்டரை தொடர்பு கொண்டு கதறி அழுதனர். இதைத் தொடர்ந்துபோலீஸார், தீயணைப்புப் படையினருடன் விரைந்து வந்த மாவட்ட நிர்வாகம் படகுகள் மூலம் மாணவ, மாணவிகளை மீட்டனர்.
இதில் தண்டபாணி என்ற மாணவர் காலில் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு குறித்து மதுரவாயல் கிராம நிர்வாக அதிகாரி போலீஸில் புகார் கொடுத்தார். அதன்பேரில் ஏ.சி.சண்முகம், அவரது மனைவி, மகன் அருண்குமார், மைத்துனர் ரவிக்குமார், எம்.ஜி.ஆர். நிகர்நிலைப் பல்கலைக்கழகஇயக்குனர் சீனிவாச கோபால் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து முன்ஜாமீன் கோரி அனைவரும் உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். இந்த மனு நீதிபதி சர்தார் சக்காரியா உசேன்முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி நாளைக்கு தீர்ப்பு வழங்குவதாக கூறி ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications