அமராவதி பாலம் கட்டுவது ஜெ. எடுத்த முடிவு தான்: ஆதாரங்களுடன் கருணாநிதி அட்டாக்
சென்னை:
கரூர் அமராவதி பாலம் கட்டுவதற்கான அனைத்து முடிவுகளும் கடந்த அதிமுக ஆட்சியில் தான் எடுக்கப்பட்டன என திமுகதலைவர் கருணாநிதி ஆதாரங்களுடன் விளக்கம் அளித்துள்ளார்.
கரூரில் திமுக ஆட்சியில் கட்டப்பட்ட அமராவதி ஆற்றுப் பாலம் சமீபத்திய மழை, வெள்ளத்தில் இடிந்து விழுந்தது. இதுதொடர்பாக கருணாநிதி மீது வழக்குப் பதிவு செய்துள்ளது தமிழக அரசு. இந் நிலையில் நிருபர்களிடம் கருணாநிதி கூறியதாவது:கரூர் அமராவதி ஆற்றில் 1924ம் ஆண்டு கட்டப்பட்ட பாலம் பழுதடைந்தது. கடந்த 1995ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதிஅப்போதைய அதிமுக தொழில்துறை அமைச்சர் சின்னசாமி தலைமையில் நடந்த உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் புதிய பாலம்கட்ட முடிவு செய்யப்பட்டது.
அதே ஆண்டு டிசம்பர் 13ம் தேதி கரூர் நகராட்சி கூட்டத்தில் பாலம் கட்டுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அப்போது ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி நடைபெற்றது. உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படாததால் கரூர் நகராட்சிதனி அதிகாரியாக ஜனகராஜன் இருந்தார். அவர் நகராட்சியில் நிறைவேற்றிய தீர்மானத்தை, நகராட்சி நிர்வாக கமிஷனர்தேவராஜ், பாலம் கட்ட அனுமதி கோரி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு கடிதம் அனுப்பினார்.
இதன் பின் பாலம் கட்டுவதற்கு 1996ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. பாலம் கட்டுவதற்கான திட்டமதிப்பீடு தயார் செய்ய தமிழக அரசிடம் பல துறைகள் உள்ளன.
ஆனால் பாலம் கட்டுவதற்கு நகராட்சியிடம் பணம் இல்லாததால் ஹட்கோ உதவியுடன் பி.ஓ.டி. (பில்ட்-ஆபரேட்-டிரான்ஸ்பர்)முறையில் கட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது. பி.ஓ.டி. முறையில் கட்டுவது என அதிமுக ஆட்சியில் தொழில்துறை அமைச்சர்சின்னசாமி தலைமையில் நடந்த உயர்மட்டக் குழு கூட்டத்தில் தான் முடிவு எடுக்கப்பட்டது.
இந் நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் உள்ளாட்சித் தேர்தலும் நடத்தப்பட்டது.நாங்கள் தலைமைச் செயலகத்தில் இருந்து பாலம் கட்டுவது தொடர்பான அரசாணையை கரூர் நகராட்சிக்கு அனுப்பி, புதியதீர்மானம் நிறைவேற்றி அனுப்பும்படி கோரினோம்.
இதன் பின் பாலம் கட்டுவதற்கு டெண்டர் விடப்பட்டது. இதில் 8 நிறுவனங்கள் பங்கேற்றன. அதில் இ.சி.சி. நிறுவனம் குறைந்ததொகைக்கு கேட்டதால் அந்த நிறுவனத்துக்கு பாலம் கட்ட அனுமதி வழங்கப்பட்டது.
ஆக, அமராவதி பாலம் கட்ட முடிவுகள் அனைத்தும் அதிமுக ஆட்சியில் தான் எடுக்கப்பட்டன என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications