சசிகலா சொத்துக்களை குறி வைத்து நடந்த வருமான வரி ரெய்ட்
சென்னை:
நேற்று நடந்த வருமான வரித்துறை ரெய்டுகள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை குறி வைத்து நடத்தப்பட்டதாகத்தெரியவந்துள்ளது.
சசிகலாவின் மதுபானத் தொழிற்சாலை என்று கருதப்படுவம் நிறுவனம் மிடாஸ் கோல்டன் ப்ரூவரீஸ். தாம்பரம்-காஞ்சிபுரம்சாலையில் மிக பிரமாண்டமாக எழுந்து நிற்கும் இந்த ஆலையை சசிகலாவுக்குச் சொந்தமானது என பல முறை செய்திகள்வெளியாகியுள்ளன.தமிழக அரசு சமீபத்தில் டாஸ்மாக் மூலம் மது விற்பனையை தமிழகத்தில் அமல்படுத்தியது. தனியார் ஒயின் ஷாப்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. அப்போது தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் இந்த மிடாஸ் கோல்டன் ப்ரூவரீஸ்நிறுவனத்தில் இருந்து தான் மது வாங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டதாக எதிர்க் கட்சிகள் பரபரப்பாக குற்றம் சாட்டின.
இந்த மிடாஸ் நிறுவனத்தில் நேற்று 30 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் படை சோதனை நடத்தியது. அதேநேரத்தில் இந்த மதுபான ஆலையை நிர்வகித்து வருவதாகக் கூறப்படும் சசிகாலாவுக்கு நெருக்கமான டாக்டர் பாஸ்கரனின்அடையாறு வீட்டிலும், அவரது ஹைதராபாத் வீட்டிலும், அவரது தொழில் சார்ந்த நண்பர்கள் 14 பேரின் வீட்டிலும் ஒரேநேரத்தில் வருமான வரி சோதனைகள் நடந்துள்ளன.
பாஸ்கரன் தான் முதல்வர் ஜெயலலிதாவின் டாக்டர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பாஸ்கரனின் சொத்து விவரம் முழுவதும்திரட்டப்பட்டுள்ளது.
அதே போல ஜெயலலிதாவின் ஆடிட்டர் நடராஜனின் ஆழ்வார்பேட்டை வீட்டிலும் சோதனை நடந்தது. இவர் தான் மிடாஸ்நிறுவனத்தின் கணக்கு வழக்குகளையும் பார்த்து வந்துள்ளார். இதையடுத்து அவரது சொத்துக்கள் குறித்த முழு விவரமும்திரட்டப்பட்டுள்ளது.
ஆகவே ஆடிட்டர், டாக்டர் ஆகியோர் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டு முழுக்க முழுக்க முதல்வர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோரைக்குறி வைத்தே நடத்தப்பட்டுள்ளது.
இன்றும் ரெய்ட்:
இந் நிலையில் மிடாஸ் மதுபானத் தொழிற்சாலையில் இரண்டாவது நாளாக இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரசோதனை நடத்தி வருகின்றனர்.
மொத்தம் 30 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் தொழிற்சாலை உள்பட 12 இடங்களில் சோதனை நடந்துவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனை குறித்த முழு விவரங்களும் இன்று மாலை அறிவிக்கப்படும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications