விஜயகாந்த்துக்கு தொண்டை வலி: பிரசாரம் ரத்து
திண்டுக்கல்:
தொண்டை வலியால் விஜயகாந்த அவதிப்படுவதால் திண்டுக்கல்லில் இன்று அவர் தொடங்குவதாக இருந்த தேர்தல் பிரசாரம்ஞாயிற்றுக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நடிகர் எம்.ஜி.ஆர். திண்டுக்கல்லில் இருந்து தான் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். அதே செண்டிமென்டின்அடிப்படையில், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் தேர்தல் பிரசாரத்தை திண்டுக்கல்லில் இன்று முதல் தொடங்குவதாகவிஜயகாந்த் அறிவித்திருந்தார்.இன்று முதல் தொடர்ந்து 3 மாதங்களுக்கு தமிழகம் முழுவதும் தீவிரப் பிரசாரம் செய்யவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
முன்னதாக தேனி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தீவிரப் பிரசாரம் செய்து பேசியதால் அவருக்கு தொண்டையில் வலிஏற்பட்டது. இதனால் சரியாகப் பேச முடியாத நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஒரு நாள் முழுக்க ஓய்வு எடுத்துக்கொள்ளுமாறு விஜயகாந்த்துக்கு டாக்டர்கள் அறிவுறுத்தினர்.
இதையடுத்து இன்று திண்டுக்கல்லில் தொடங்குவதாக இருந்த பிரசாரம் ஞாயிற்றுக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சிலநாட்களுக்கு முன்பு விஜயகாந்த்துக்கு சென்னை மருத்துவமனையில் பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன.
அப்போது 2 நாட்கள் பிரசாரம், ஒரு நாள் ஓய்வு என்ற ரீதியில் பிரசாரத்தை மேற்கொள்ளுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.அதன்படியே தற்போதைய சுற்றுப்பயண அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
மக்களுடன்தான் கூட்டணி:
முன்னதாக நேற்று பழனி சாலையில் அவர் தொண்டர்கள் மத்தியில் பேசுகையில், தமிழகத்தின் பல பகுதிகளில் நான் சென்றுவந்திருந்தாலும், இங்குதான் தேர்தல் பிரசாரத்தை நான் தொடங்குகிறேன்.
திண்டுக்கல் ராசியான இடம். காரணம் எம்.ஜி.ஆருக்கு முதல் வெற்றியைக் கொடுத்த இடம் இதுதான். வரும் தேர்தலில்எம்.ஜி.ஆர். வழியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் வெற்றியை பறிக்கும்.
நான் யாருடன் கூட்டணி அமைப்பேன் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். நான் யாருடனும் கூட்டணி அமைக்க மாட்டேன்,மக்களுடன் மட்டும்தான் கூட்டணி அமைப்பேன்.
விரைவில் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். அதில் பல அறிவிப்புகளை,திட்டங்களை நாங்கள் சொல்லப் போகிறோம். அதைப் பார்த்து விட்டு சிலர், இவற்றையெல்லாம் நிறைவேற்றவே முடியாது என்றுகூறலாம். அப்படிக் கூறுபவர்கள் முட்டாள்களாகத்தான் இருக்க முடியும்.
அரசியல்வாதிகளிடமிருந்துதான் அதிகாரிகள் லஞ்சம் வாங்கக் கற்றுக் கொண்டுள்ளனர். கடந்த 35 ஆண்டாக இதுதான் நடந்துவருகிறது. இதை மாற்ற வேண்டும்.
எனது கட்சி ஆட்சிக்கு வந்தால், தொழில் வளர்ச்சியைப் பெருக்குவேன். மாவட்டந்தோறும் தொழிற்சாலைகளை நிறுவுவேன்.சென்னை போன்ற பெரிய நகரங்களில் மட்டும்தான் இப்போது தொழிற்சாலைகள் உள்ளன. அந்த நிலையை மாற்ற வேண்டும்.
ரேஷன் பொருட்களை அளவு குறையாமலும், தரமுடனும் கிடைக்க வகை செய்வேன். வீடு தேடி ரேஷன் பொருட்கள் வரும்என்றார் விஜயகாந்த்.
ஜெயலலிதா பாணியில் மக்களுடன் நான் கூட்டணி அமைத்துள்ளேன் என்று விஜயகாந்த் பேசத் தொடங்கியுள்ளதால் விரைவில்கூட்டணி சம்பிரதாயங்கள் நடந்தேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருவரும் சேர்ந்து மக்கள் கூட்டணியை அமைத்தாலும்ஆச்சரியமில்லை.












Click it and Unblock the Notifications